இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் சம்பூர் பிரதேசத்தில் இந்திய உதவியுடன் அமையவுள்ள அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு சுற்று சூழல் பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்து பரவலான எதிர்ப்புகள் தோன்றியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று மூதூர் நாவலடி சந்தியில் ஆர்ப்பாட்டமொன்றும் நடைபெற்றது.கடந்த அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் இலங்கை - இந்தியா இரு நாடுகளுக்குமிடையில் இது தொடர்பிலான ஒப்பந்தமொன்றும் ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அந்த பிரதேசத்தில் இதற்காக சுமார் 500 ஏக்கர் காணியும் அடையாளமிடப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த காணிக்கு எல்லை வேலிகள் நிர்மாணிப்பதற்கான ஆரம்ப வேலைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எல்லை வேலிகள் அமைப்பது தொடர்பான ஆயத்த கூட்டமொன்று இன்று வியாழக்கிழமை அந்த பகுதியில் நடைபெறவிருந்த வேளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றின் காரணமாக இறுதி நேரத்தில் திருகோணமலை நகருக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.
மூதூர் பிரதேசத்திலுள்ள நாவலடி சந்தியில் நடைபெற்ற அனல் மின் நிலையத்திற்கான எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் பசுமை திருகோணமலை , மூதூர் பீஸ் ஹோம் உட்பட சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன.
இந்த அனல் மின் நிலையம் தொடர்பாக இரு மாதங்களுக்கு முன்னர் சூழல் பாதுகாப்பு வாரியம் மக்கள் கருத்துக்களை கேட்டிருந்த போதிலும் அதனை மீறும் வகையில் அனல் மின் நிலையம் அமைக்க முற்படுவதாக பசுமை திருகோணமலை அமைப்பின் ஒருங்கிணப்பாளரான காளிராசா செந்தூரன் கூறுகின்றார்.
மக்கள் குடியிருப்பு பகுதிகளை அண்மித்த பகுதியிலே இந்த அனல் மின் நிலையம் அமைவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
அனல் மின் நிலையத்திற்கு எதிரான தங்களின் இந்த போராட்டத்தில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூவின மக்களும் இணைந்துள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.