முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குடும்பத்தின் சொத்து மதிப்பு 2 இலட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபா (18 பில்லியன் அமெரிக்க டொலர்) என்ற தகவலை நேற்று வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சர்வதேச நாடுகளின் புலனாய்வுப் பிரிவினரின் தொழில் நுட்ப உதவிகளின் அடிப்படையிலேயே மஹிந்தவின் சொத்து விவரம் மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் உறுதிப்படுத்தினார்.
ராஜபக்ச குடும்பத்தின் சொத்து
மதிப்பானது, நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு என்றும், இலங்கையின் மிகப்பெரிய நிதியமான ஊழியர் சேமலாப நிதியின் இரு மடங்கு என்றும், 100 தலைமுறைகளுக்குப் போதுமானது என்றும் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், அமெரிக்காவில் கூட குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே இதுபோன்ற பாரியளவு சொத்துகள் உள்ளன என்றும் கூறியதுடன், இந்தச் சொத்து மதிப்பை கணக்கிட்டால் தலைசுற்றும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், மஹிந்த ராஜபக்வின் மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்களின் நிதி மோசடி தொடர்பில் சர்வதேச நாடுகளின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதும், அது சிக்கலானதாகவே இருக்கின்றது என்றும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்றுக் காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்ட தகவலை அமைச்சர் வெளியிட்டார்.
"கடந்த அரசால் மேற்கொள்ளப்பட்ட ஊழல், மோசடிகள் குறித்து நாம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றோம். இவற்றைத் தேடவேண்டாம் என அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், நாம் இந்த விசாரணைகளை நிறுத்த மாட்டோம். வெளிநாடுகளில் வேறு பெயர்களிலும், வேறு நிறுவனங்களின் பெயர்களிலும் ராஜபக்? குடும்பத்தினர் பணம் பதுக்கி வைத்துள்ளனர். இது தொடர்பில் 4 சர்வதேச நாடுகளின் புலனாய்வுத்துறையின் தொழில்நுட்ப உதவிகளுடன் நாம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றோம்.'' என்றும் அவர் குறிப்பிட்டார்.
"இந்த புலனாய்வுத் தகவல்களுக்கமைய மஹிந்த ராஜபக்ச குடும்பத்துக்கு 18 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, 2.2 ட்ரில்லியன்களாகும் (2 இலட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபா). நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 64 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இந்தப் பணத்தில் நான்கில் ஒரு பங்கு மஹிந்தவின் சொத்தாக உள்ளது.
அதுபோல, ஊழியர் சேமலாப நிதி 1.4 ட்ரில்லியன்களாகும். மஹிந்தவின் சொத்துமதிப்பு இதில் இரு மடங்காகும். இவற்றைக் கண்டுபிடிப்பது மிகவும் இலகுவான விடயமல்ல.
இது தொடர்பாக 4 சர்வதேச நாடுகளின் உதவியுடன் முன்னெடுக்கும் நடவடிக்கையை நாம் தொடருவோம். இவை எந்த நாடுகள் என்பது தொடர்பான தகவல்களை இப்போது வெளியிட முடியாது''? என்றும் தெரிவித்தார்.