புதிய ஆட்சியில் நான் ஹிட்லரையே காண்கிறேன் அதிகாரங்களை துஷ்பிரயோகிப்பதாக மகிந்த குமுறல்


ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் தலைமையிலான புதிய ஆட்சியின் செயற்பாடுகள் எனக்கு சர்வாதிகாரி ஹிட்லரை நினைவூட்டுகின்றன. இங்கு நல்லாட்சிக்கு பதில் பழிவாங்கும் முயற்சியே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் விநியோகிப்பதற்காக சதோச நிறுவனத்தில் 52 லட்சம் ரூபாயுக்கு பொருட்களை பெற்று அதற்கான பணத்தை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டமையானது நல்லாட்சியின் மற்றுமொரு பழிவாங்கும் முயற்சி என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை நேற்றைய தினம் சிறைக்கு சென்று சந்தித்து விட்டு வெளியில் வரும் போது ஊடகவிய லாளர்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லாட்சியின் மற்றுமொரு முடிவை காண வந்தேன். இது தெளிவான சிவில் வழக்கு.
கடன் வாங்குவதும், கடன் கொடுப்பதும். கடனை செலுத்துவது போன்ற விடயங்கள் சிவில் வழக்குகளுடன் சம்பந்தப்பட்டவை. சிவில் வழக்கொன்று எப்படி குற்றவியல் வழக்காக முடியும் என்பது எனக்கு புரியவில்லை.

இந்தக் காலத்தில் பல விடயங்கள் திரிபுபடுத்தப்படுகிறது. திரிபுபடுத்தப்படுவது நல்ல காரியமாக இருக்காது. சீ.டப்ளியூ என்பது வர்த்தக நிறுவனம். அதில் கடன் கொடுக்கவும் முடியும் கடனை பெறவும் முடியும். பெற்ற கடனை மீண்டும் செலுத்தவும் முடியும். கடன் செலுத்தப்பட்டும் விட்டது.

அத்துடன் இது அரச நிறுவனமும் அல்ல. அது கூட்டுத்தாபனம். இது பொது சொத்துகள் தொடர்பான சட்டத்திற்குள் அடங்காது. எனினும் இதனை பொது சொத்துக்கள் சட்டத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். சரியாக பசில் ராஜபகஷவின் சமுர்த்தி வழக்கு போன்றது.

அமைச்சரவைக்கு அமைச்சர் ஒருவரை நியமிப்பது இலஞ்சமாம். அப்படியானால் தற்போதுள்ள பிரதமர் பதவியில் இருப்பது அனைத்துமே இலஞ்சம்.தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக அரசியல் பழிவாங்கல் என்பது தெளிவானது. இது தவறு என நான் எண்ணுகிறேன்.

இது குறித்து நேற்று நாங்கள் பேசினோம். குறிப்பாக இந்த சட்ட மூலம் அதாவது வர்த்தமானி அறிவித்தல் பற்றி பேசினோம்.வர்த்தமானி அறிவித்தல் மூலம் மேற்கொள்ளப்படவிருந்த நடவடிக்கைகள் நடக்கவில்லை. பிரதமர் ஒருவருக்கு  பொலிஸ் மா அதிபரின் அதிகாரங்களை பெற முடியாது. பிரதமர் உட்பட அமைச்சரவை உபகுழு வர்த்தமானி அறிவித்தல் ழூலம் பொலிஸ் மா அதிபரின் அதிகாரங்களை பெற்றுள்ளது.

இது தெளிவாக அதிகாரங்களை ஓரிடத்தில் குவித்துள்ளது. ஹிட்லருக்கு பின்னர் இவ்வாறு நடந்திருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.நாட்டின் சுயாதீனத் தன்மையை கெடுக்கும் வகையிலும் அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே இருக்க வேண்டும் என்னும் பதவி ஆசையினால் 18வது சீர்திருத்த சட்டத்தினை நிறைவேற்றி, தான் இரண்டு தடவைகளுக்கு மேல் நாட்டின் தலைவராக இருக்கலாம் என்னும் திருத்தத்தை மேற்கொண்டு உலகத்திற்கு சவால் விடுத்த நபர் இவ்வாறு தெரிவிப்பது வேடிக்கையானது என அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

தன்னை வலுப்படுத்தினால் நாட்டில் அசைக்க முடியாத நபராக மாறலாம் என்பது இவரின் தாரக மந்திரமாக இருந்தது என்றும், தானே ராஜா தானே மந்திரி என்றிருந்தவர் இப்பொழுது அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிந்திருப்பதாக கூறுவதென்பது இவரின் அரசியல் அறியாமையை வெளிப்படுத்துவதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்தார்.   
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila