சமூக ஒழுக்கத்தை ஆலயங்கள் கவனிக்க வேண்டும்


பொருளியலில் பொதுப்பண்டங்கள் என்றொரு விடயம் உண்டு. பொதுப்பண்டங்களின் அடிப்படை இயல்பு என்னவெனில், பொதுநலன் கருதி அரசினால் வழங்கப்படுவது. தனியாரினால் வழங்கப்படமாட்டாது என்பதாகும்.

பொதுப்பண்டங்கள் தொடர்பிலான மேற்போந்த இயல்பு எல்லா நாடுகளுக்கும் பொருந்துமாயினும் இலங்கையில் தமிழ் இனத்திற்கு அது ஒருபோதும் பொருந்தமாட்டாது.

பொதுநலன் கருதி அரசினால் மட்டும் வழங்கப்படக்கூடிய பொதுப்பண்டங்களை ஈழத்தமிழினம் வழங்கியது என்பதுதான் இங்கு கவனிக்கத்தக்க விடயம்.

அதாவது அரசினால் வழங்கப்படவேண்டியதான பொதுப்பண்டங்களை அரசு வழங்காத சந்தர்ப்பத்தில் தனிமனிதர்கள் வழங்கி பொதுநலனைப் பாதுகாத்தனர்.உதாரணமாக, இரவு வேளைகளில் வீதியால் பயணிப்போரின் நலன் கருதி வீதிகளில் எண்ணெய் விளக்குகளை ஏற்றி வைத்தனர்.

வெயில், மழை நேரங்களில் பாதசாரிகள் தங்குவதற்கும் இளைப்பாறுவதற்குமான திண்ணைகள், தெருமூடி மடங்கள், தலைவாசல்கள் என்பன தனியாரின் முயற்சிகளால் அமைக்கப்பட்டன.

இதேபோன்று சுமை தாங்கிகளும், தாகம் தீர்க்க பொதுக் கிணறுகளும் அமைக்கப்பட்டன.
இவை அனைத்தும் தனியாருக்கு எந்த வகையிலும் இலாபம் தரக்கூடியவை அல்லவாயினும் இவற்றைத் தனி மனிதர்கள் செய்தனர் எனில், இதற்குள் இருக்கக்கூடிய பொதுநோக்கம்; மனிதநேயம்; பொதுநலன் சார்ந்த வாழ்வியல் என்பன எங்கள் இனத்திற்குப் பெருமை தரக்கூடியதாகும்.

இருந்தும் இவை பற்றி எவரும் பெருமைப்படுவதாகவோ உணர்ந்து கொள்வதாகவோ தெரியவில்லை. எதுவாயினும் பொருளியலில் பொதுப்பண்டம் பற்றி கற்பிப்போர் எங்கள் தமிழ் இனத்தில் தனி மனிதர்களால் பொதுப்பண்டங்கள் வழங்கப்பட்டன என்ற செய்தியை இனத்துவத்தின் பெருமைதனை அறிவதற்காக மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது நல்லது.

இவ்வாறாக பொதுநலன் கருதி அரசினால் வழங்கப்பட்ட பொதுப்பண்டங்களை, தமிழர்கள் தனி மனிதர்களாக வழங்கினர் எனில், இதற்குள் இருக்கக் கூடிய பரந்த எண்ணமும் சிந்தனையும் போற்றுவதற்குரியதாகும்.

இதேபோன்றுதான் ஆலயங்கள், சமூகக் கட்டுமானத்தைக் காப்பாற்றுவதில்; சமூக ஒழுக்கத்தை பாதுகாப்பதில்; நெறிபிறழ்வுகளைத் தவிர்ப்பதில் நூறுவீதம் முன்னின்று உழைத்தன என்பதை ஒரு போதும் மறந்துவிடலாகாது.

மக்கள் சமூகத்தில் எழக்கூடிய தனிமனித பிரச்சினைகளைத் தீர்க்கின்ற நீதிமன்றங்களாக ஆலயங்கள் விளங்கின.

எனினும் இன்றைய நிலைமை ஆலயங்களில் இருந்து தனி மனித பிரச்சினைகள் ஆரம்பிப்பதைக் காணமுடிகின்றது. இன்றைய காலகட்டத்தில் எங்கள் இளைஞர்களிடையே எழுந்துள்ளவன் மங்கள், அதனால் ஏற்பட்டுள்ள அழிவுகள் தொடர்பில் ஆலயங்கள் பரிகாரம் காணத்தலைப்பட வேண்டும்.

ஒவ்வொரு ஆலயங்களும் சமூகம் சார்ந்த பிரதி நிதித்துவத்தை கொண்டவை. எனவே ஆலயங்கள் தத்தம் எல்லைக்குட்பட்ட மக்கள் சமூகத்தை நெறிப்படுத்தும் பணிகளைச் செய்யுமாயின், எல்லாப் பிரச்சினைகளுக்கும் சுமுகமான தீர்வு கிடைப்பதோடு; பண்பாடான சமூக  உருவாக்கமும் நடந்தேறும். இதைச் செய்வதற்கு ஆலயங்கள் முன்வர வேண்டும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila