எனது அண்மைய முகநூல் பதிவும் வாசகர்களிடையே ஏற்படுத்திய தாக்கமும் என்னுள் எழுந்துள்ள கேள்விகளும்....

“மக்களின் மனங்களை வாசிக்காத வரை களத்திலோ புலத்திலோ தமிழ் மக்களுக்கான அரசியல் செல் நெறியை எவராலும் முன்கொண்டு செல்ல முடியாது” - நடராஜா குருபரன்:
எனது அண்மைய முகநூல் பதிவும் வாசகர்களிடையே ஏற்படுத்திய தாக்கமும் என்னுள் எழுந்துள்ள கேள்விகளும்....

அண்மையில் மைத்திரி பால சிரிசேனவின் யாழ் பயணமும் அதனையொட்டிய வாதப்பிரதிவாதங்கள் பற்றியும் ஒரு குறிப்பை பதிவு செய்திருந்தேன்.. அதனை இதுவரை 180 பேர் பகிர்ந்திருக்கிறார்கள்... நேரடியாக 34 கொமன்ட்ஸ் வந்திருக்கிறது.. மறுபுறம் பகிர்ந்தவர்களின் பகிர்வுகளுக்குள் ஏராளமான கொமன்ட்ஸ் வந்திருக்கிறது... இவற்றில் 97 வீதமான கொமன்ட்ஸ் எனதுபதிவுக்கு சாதகமாகவே கருத்துக்கள் வந்திருந்தன..
ஒருவர் சொன்னார் சொல்லப்பட வேண்டிய நேரத்தில் சொல்லப்பட்ட கருத்து என...
இன்னொருவர் சொன்னார் பலர் சொல்லத் தயங்கியதை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லி இருக்கிறீர்கள்... என ...
இப்படி சொல்லப்பட்ட எத்தனையோ கருத்துக்கள் என்னை மேலும் சிந்திக்க வைப்பதுடன் கேள்விகளையும் எழுப்புகின்றன...

2 தசாப்த்தத்திற்கு மேலான அகிம்சைப் போராட்டம். 3 தசாப்த்த ஆயுதப் போராட்டம் அவற்றின் தோல்விகள், தோல்விகள் தொடர்பான மீள்பார்வை, அவை தொடர்பான மதிப்பீடுகள் குறித்து கவனம் செலுத்தினோமா என்ற கேள்விகள் எழுகின்றன...

மறுபுறம் முள்ளிவாய்க்காலின் பின்னாக ஈழுத்தில் வாழும் மக்களின் மனங்களை நாம் வாசித்திருக்கிறோமா? தலைமுறைகள் மாறிவரும் சூழலில் புதிய தலைமுறையினரின் சிந்தனை ஓட்டங்களை புரிய முற்பட்டு இருக்கிறோமா?  என்ற கவலைகளும் தொற்றிக் கொள்கின்றன...

80களில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது உலகில் முன்பெல்லாம் நடந்த விடுதலைப் போராட்டங்கள். உலகில் இடம்பெற்ற புரட்சிகள் பற்றி, அவற்றின் அரசியல் சித்தாந்தங்கள் புலப்படுத்தியவை பற்றியெல்லாம் அறியும் ஆர்வம் இளையவர்களிடையே காணப்பட்டன.. இடதுசாரி சித்தாந்தங்களை பயின்றவர்களிடையே தூள்பறக்கும் விவாதங்கள் இடம்பெற்றன... இடதுசாரி இயக்கங்களில் இணைந்த இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சிக்கு முதல் அரசியல் வகுப்புகள் நடாத்தப்பட்டன...

தவிரவும் அன்றைய உள்நாட்டு, பிராந்திய. சர்வதேச அரசியல் சூழல்கள் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கான கள நிலமைகளை ஏற்படுத்தியிருந்தன.. புலம்பெயர் சமூகம் என்ற ஒருபிரிவு அப்போதைய சூழலில் இருந்திருகவில்லை... பின்தளம் (இந்தியா) தளம் (இலங்கை) என்ற நிலப் பகுப்புகளிடையேதான் போராட்டம் நகர்ந்தது.

அப்போதைய இலங்கையின் அரச அமைப்பியல் முறை, அன்று இளையவர்களை பெரிதும் பாதித்த தரப்படுத்தல்  முன்னாள் இந்தியப் பிரதமர் மறைந்த இந்திராகாந்திக்கும் அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனவுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளும், தெற்காசிய பிராந்தியத்தில் நிலவிய அரசியல் பதட்டமும், சித்தாந்த முரண்பாடுகளும், குறிப்பாக தெற்காசிய சார்க் வலையமைப்பில் இருந்து மேலைத்தேய அமெரிக்க  சார்புடைய  தென்கிழக்காசிய ஆசியான் அமைப்பிற்கு தடி ஊன்றிப் பாய ஜே ஆர் முயன்றதும், இரும்புச் சீமாட்டி என வர்ணிக்கப்பட்ட இந்திரா காந்திக்கு ஜே ஆர் சவால் விட்டது என பல நூறு காரணங்கள்  ஈழ விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதப் பயிற்சிக்கான பின் தளமாக இந்தியா மாறும் சூழலை  உருவாக்கியது.

ஆனால் 30 வருடங்களுக்குப் பின்னான இன்றைய சூழல் தலைகீழாக மாறியுள்ளது.. ராஜீவ் காந்தியின் கொலை – செப்டம்பர் 11 – புதிய உலக ஒழுங்கு – பிராந்திய அரசியல் முறைமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், புலம்பெயர் சமூக உருவாக்கம், அதனால் ஏற்பட்டுள்ள வெளிநாட்டுமோகம், அதனுடன் கூடிய மேலைத்தேய கலாசார ஊடுருவலும் மோகமும், புலம்பெயர் சமூக உருவாக்கம் ஏற்படுத்திய பணப்புழக்கமும், அதனால் உருவாகிய சும்மா இருக்கும் இளையோர் குழாமும் என அடுக்கிக்கொண்டே போகக் கூடிய பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன.

முள்ளிவாய்க்காலின் பின் 80 ஆயிரத்திற்கும் அதிகமான பெண் தலமைத்துவ குடும்பங்கள் உருவாகி இருக்கின்றன. முன்நாள் போராளிகள் – அவையவங்களை இழந்தவர்கள் – காணாமல் போனோரின் உறவினர்கள் – அரசியற் கைதிகள் – என்ற போரினால் நேரடிப் பாதிப்பிற்கு உள்ளான போரிற்கு பிந்தய புதிய சமூகப் பிரிவுகள் உருவாகி உள்ளன...

இவை எவற்றையுமே கணக்கில் எடுக்காது தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த போது இருந்த நிலமையே இப்போதும் இருப்பதான கனவுநிலையில். அதேபாணியிலான சித்தாந்தங்களையும், நடைமுறைகளையும் நாம் இப்போதும் கடைப்பிடிக்க முடியுமா?

இன்று ஒருநாடு இருதேசம் – இருநாடு இருதேசம் – தமிழீழம் – ஒற்றை ஆட்சி – சமஸ்டி ஆட்சி – சுவிஸ் கன்றன் முறைமை – சுய நிர்ணய உரிமை – என்றெல்லாம் சொல்லாடல்கள் தொடர்கின்றன... தேர்தல் காலங்களில் வாக்குகளை வாரி வாங்குவதற்காக இவைபற்றி தூள் பறக்க பேசுவதற்கு அப்பால் கிராம மட்டங்களில் மக்களுக்கான அரசியல் தெளிவை ஏற்படுத்தும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப் படுகின்றனவா? 

80களில் தேசிய விடுதலைப் போராட்டம் வீறுகொண்டெழுந்த போது மக்களை – இளையோரை – தெளிவுபடுத்தும் எத்தனை ஆயிரம் கூட்டங்கள் – கலந்துரையாடல்களை ஈழ விடுதலை இயக்கங்கள் நடாத்தி இருந்தன...

ஆனால் இப்போ தேர்தல்கால மேடை முழக்கங்களும் – ஸகைப் மீற்றிங்குகளும் – பழைய முழங்கங்களும் தான் தொடர்கின்றன...

நாம் தரைப்படை வைத்திருந்தோம் – காலால் படை – ஆகாயப் படை – கடற்படை – வைத்திருந்தோம் கரந்தடித் தாக்குதல்களை நடத்தியிருந்தோம் – நிழல் அரசு இருந்தது  எனக் கூறிக் கொண்டு பழைய புராணங்களை பாடி கொடிபிடித்து மேடையில் முழங்கி – முன்னோர் புகழ் போற்றினால் மட்டும் அரைநூற்றாண்டாகப் போரடியும் கிடைக்காத விடுதலை கிடைத்துவிடுமா? 

எனக்கொரு ஞாபகம் வருகிறது ... முன்பெல்லாம் நமது ஊர்களில் வயது போன பெரியர்கள் தோள் மீது போட்டு இருக்கும் சால்வையை உதறிப் போட்டு தமது மூதாதையரின் பழம்பெரும் பெருமைகளை பேசிப் பேசியே தங்களை திருப்த்திப்படுத்திக் கொள்வார்கள்... மகிழ்ந்து கொள்வார்கள்... ஆனால் அவர்களின் நிஜ வாழ்வு பெரும் துயர்களை சுமந்திருக்கும்...

நம்மில் பெரும்பாலானோர் இந்த நிலமையில் தான் இருக்கிறார்கள்... இணைய்ஙளிலும் – புளொக்குகளிலும் – புலம்பெயர் ஊடகங்களிலும் – மேடைகளிலும் முழங்குவதனால் ஆகப்போவது ஒன்றும் இல்லை....

முதலில் கனவுநிலையில் இருந்து இறங்கி வாருங்கள்...
முள்ளி வாய்க்காலுக்குப் பினானன புதிய சூழலை புரிந்துகொள்ள முனையுங்கள்...
மக்களின் மனங்களை – உளவியலை – அவர்களின் எண்ணங்களாலான செயற்பாடுகளை வாசியுங்கள்..
.அதிலிருந்து உருவாகி இருக்கும் புதிய சூழலுக்கேற்ற சித்தாந்தங்களையும் நடைமுறைகளையும் உருவாக்குங்கள்...

மக்களின் மனங்களை வாசிக்காத வரை களத்திலோ புலத்திலோ  தமிழ் மக்களுக்கான அரசியல் செல் நெறியை எவராலும் முன்கொண்டு செல்ல முடியாது...
 
 எனத முன்னைய பதிவு இதுவே
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் திடீர் யாழ்ப்பாண பயணம், பாடசாலை மாணவர்களை சந்தித்தமை, புங்குடு தீவு மாணவியின் தாயார், சகோதரரை சந்தித்தமை, பாடசாலை மாணவர்களால் சுட்டிக் காட்டப்பட்ட சில விடயங்களுக்கு உடனடி தீர்வு பெற்று கொடுத்தமை என்பனவெல்லாம் அரசியல் தந்திரம் என்கிறார்கள் சிலர்… இதுவெல்லாம் பொலிற்றிகல் ஸ்ரண்ட் என்று சொல்கிறார்ர்கள் சிலர்…
 
உணர்வோடும், கொதிப்போடும் இருக்கும் மக்களின் உணர்வுகளையும், கொதிப்புகளையும், கோபங்களையும் ஆறவிடாமல் அப்படியே வைத்திருந்தால் தான் விடுதலையை விரைவுபடுத்தலாம் என என்னுடன் பேசிய ஓர் அன்பர் கூறுகிறார்…. கூறியவர் வடக்கு கிழக்கில் இருந்து கூறினால் கூட கொஞ்சம் யோசிக்கலாம்… ஆனால் அவர் வாழ்வது புலம்பெயர்ந்து….
 
எல்லாவற்றையுமே எதிர் நிலையில் வைத்து நோக்கி, எல்லாவற்றையுமே சந்தேகக் கண்ணுடன் பார்த்து பழகிப் போய்விட்ட நாம், எதையுமே ஏற்க மறுக்கிறோமா, எல்லாவற்றையுமே நிராகரிக்கிறோமா என்ற கவலை என்னை தொற்றுகிறது…
 
சரி மைத்திரியின் பயணம் அரசியல் தந்திரமானதும் பொலிற்றிக்கல் ஸ்ரன்ட் ஆகவுமே இருந்திட்டு போகட்டுமே…அதனால் சில நன்மைகளையாவது அந்த மக்கள் பெற்று இருக்கிறார்களே…
 
மைத்திரியின் பயனத்தின் பின் நீதித்துறையில் உடனடி மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளனவே…வடக்கில்  இளஞ்செழியனின் வாசமே இருக்கக் கூடாது என கடந்த அரசாங்கம் கிழக்கிலேயே விரட்டிக் கொண்டிருக்க இப்போ இளஞ்செழியன் யாழ்ப்பாணத்திற்கு மாற்றப்பட்டு உள்ளாரே…
 
விசேட நீதிமன்ற விசாரணை மூலம், துரிதமாக விசாரணையை நடத்துவதாகவும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுக் கொடுப்பதாகவும் கூறியிருந்தார்.. இதற்கு ஒருவர் கூறுகிறார் இப்படியெல்லாம் கூறி தமிழ் மக்களை ஏமாற்றாமல் யுத்தக்… குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கட்டும் பார்ப்போம், இசைப்பிரியாவுக்கும் நீதியைக் கொடுக்கட்டும் பார்ப்போம் என…. அப்படியாயின்
 
நான் மீண்டும் மீண்டும் கூறுவது… 5ம் கட்ட போரிற்கு தயாரகிறவர்கள் தயாராகுங்கள் வாழ்த்துக்கள்… இனப்படுகொலை – யுத்தக் குற்றம் – ஐநாவுக்கு அழுத்தங்களை கொடுக்கும் தொடர் போராட்டங்களை நடத்துத்துதல், காணாமல் போனவர்களை கண்டு பிடித்தல், அரசியல் கைதிகளை விடுவித்தல், தமிழ் மக்களுக்கான நியாயமான அரசியல் தீர்வுக்காக போராடுதல், என்பவை தொடரட்டும்… அதனை முன்னிறுத்தி செயற்படுபவர்கள் செயற்படுங்கள்…
 
இதுவெல்லாம் நடக்கும் சமகாலத்தில் ஓடி ஓடி வாழ்க்கையின் ஓரத்திற்கே போன எங்கள் மக்கள் சற்று ஆற அமர்ந்து சுவாசிக்கட்டும்.. தங்கள் சின்ன சின்ன ஆசைகளை, சந்தோசங்களை அவர்களும் அனுபவிக்கட்டும்…
 
வருடத்தில் 365 நாட்களில் இரண்டுதடவைகள் 30 – 30 நாட்களில் பிதிர் கடன்களையும், நினைவு நிகழ்வகளையும் நடத்திவிட்டு மிகுதி 300 நாட்களுமே ஆடல், பாடல், சினிமா, சின்னத்திரை, சுப்பர் சிங்கர், மானாட மயிலாட, தென்னிந்திய கலைஞர்களின் நிகழ்ச்சிகள், சமர் கொலிடே என எல்லாவிதமான பேரின்பங்களிலும் மூழ்கிக் கொண்டு தாயகத்தில் வாழும் மக்கள் மட்டும் வாழ்நாள் முழுவதுமே ஐம்புலன்களையும் அடக்கி விடுதலை வேள்விக்காக யாகம் இருக்க வேண்டும் என நினைப்பது எவ்வளவு அபத்தமானது?????
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila