இலட்சுமணனின் சிரிப்பும் இராமனை வதைக்குமன்றோ!


திரைப்படங்கள் இன்றுவரை மக்கள் மனங்களில் நின்று நிலைப்பதற்குக் காரணம் திரைப்படத்தின் இறுதியில் வில்லன் தோற்பதாகக் கதை முடிவதாலாகும்.

அதாவது தர்மமும் அதர்மமும் போட்டியிட்டு தர்மம் வெல்வதாகக் கதையை முடிப்பதால், திரைப்படங்களின் ஆயுள் நிலைபெற்றிருக்கிறது.

தமிழ்த் திரைப்படத்தில் மோகன் என்றொரு நடிகர், விதி படத்தின் கதாநாயகனாக நடித்தார்.அந்தப் படம் ஓஹோ என்று பேசப்பட்டது.

இன்றுவரை விதி என்ற படத்தைப் பார்ப்பதற்குப் பலர் ஆர்வப்படுவதுண்டு.எனினும் அந்தப் படத்தின் கதாநாயகனாக நடித்த மோகன் அதற்குப் பின்னர் திரையுலகில்  எழவே முடியவில்லை.

ஒரு கதாநாயகன் வில்லனாக- நேர்மையற்றவனாக நடித்ததன் விளைவு அது.ஆக,வில்லன் பாத்திரங்களுக்காக படம் பார்ப்பது கிடையாது. கதாநாயகன் என்ற பாத்திரம் தர்மத்தின் வழிநின்று அதனை வெல்ல வைப்பதாலேயே திரைப்படத்தின் மீதான ஆர்வம் மக்களிடம் ஏற்படுகிறது.

விதி படத்தில் கதாநாயகனாக நடித்து வெற்றிப் படத்தை தந்த மோகனின் விதி எப்படி ஆகியது என்று பார்த்தீர்களா?இதுபோலத்தான் அனைத்தும். இராமாயணம் , பாரதம் என்ற இதிகாசங்களும் தர்மம் வெற்றி பெறுவதையே காட்டி நிற்கின்றன.

எனினும் ஒரு உண்மை உணரப்பட வேண்டும். அதாவது இதிகாசங்கள் சரி, திரைப்படங்கள் சரி இரண்டிலுமே அந்தக் கதையின் இறுதிப் பகுதியைத் தவிர மற்றைய முழுமையிலும் அதர் மத்தின் வழிநிற்கும் வில்லன் சுகபோக வாழ்க்கை வாழ்வதை, அவனுக்குப் பின்னால் பலர் இருப்பதை, அவனால் நல்லவர்கள் வதைபடுவதைக்  காண முடியும்.அப்படியானால் வில்லன் தோற்கும் இடமே கதையின் முடிவாக இருக்கிறது.

வாழ்வின் முக்கியமான பகுதியை துன்பத்தில் தொலைத்துவிட்டு தர்மம் வென்றது எனக் கூறுவதில் என்ன பயன் என்று யாரேனும் கேட்பார்களாயின், அதிலும் நியாயம் இருக்கவே செய்கிறது.

14 ஆண்டுகள் வனவாசம்; அசோகவனத்தில் சீதை சிறைவைப்பு ; தந்தை தசரதரின் இறுதிக் கிரியையை செய்ய முடியாத சோகம்; நண்பர்கள் உறவுகளின் உயிரிழப்பு; இதன் பின்னரும் சீதையின் தீக்குளிப்பு ; இலட்சுமணனின் சிரிப்பு அட! இராமனின் பட்டாபிஷேகத்தில் என்ன சுகம்?

ஏதோ தர்மம் வென்றது என்ற முடிவைத் தவிர வேறு எதையும் இராமன் அனுபவித்த தாகத் தெரியவில்லை.இத்தகைய நிலைமையே நிஜ வாழ்விலும் நடக்கிறது.ஆம்! எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்­வும் போட்டியிடவுள்ளார்.

அவருக்கு என்று ஒரு தனியான கூட்டம் வல்லமையோடு இயங்குகிறது.ஜனாதிபதி மைத்திரி திரைப்படத்தில் வரும் கதாநாயகனாக இருக்கிறார்.

பிரதமர் ரணில் கதாநாயகனுக்கும் இடைஞ்சல் செய்யும் இடைப்பாத்திரம். என்னசெய்வது! வில்லனின் தோல்வி நடக்கவேண்டுமாயின் காலம்தான் வழிவகுக்க வேண்டும்.

கதாநாயகனைவிட வில்லனுக்குப் பலரும் உதவுகின்றனர்.அதற்காகக் காத்திருக்கின்றனர்.

எதுவாயினும் நடைபெறப்போகும் பொதுத் தேர்தல் என்ற நாடகத்தில் கதாநாயகன் வென்று வில்லன் தோற்கும் வகையில்  பார்வையாளர்களாகிய பொதுமக்கள் உதவவேண்டும்.

இல்லையேல் என்லாம் அம்போதான்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila