சிறந்ததொரு தலைமைக்கான மாற்றத்தை தற்போது தமிழ் மக்கள் விரும்புகின்றனர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் தெரிவிப்பு


தமிழ் மக்கள் தன்னாட்சி, சுய கெளரவம் ஆகியவற்றை எதிர்காலத்தில் பெற்றுக்கொள்வதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அயராது உழைக்கும். இதற்கான மக்கள் ஆதரவு எமது பக்கம் கூடுதலாக இருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலர் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தனது உரையில் கூறியதாவது,

தமிழ் மக்களுக்கென தாய் கட்சியாக காங்கிரஸ் கட்சியே ஆரம்பிக்கப்பட்டது. கால வட்டத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டாலும் தமிழ் மக்களின் நலன் கருதி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரில் தற்போது இக் கட்சி இயங்கி வருகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போதுதான் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ள போதிலும் இம்மாவட்ட மக்களின் நலன் கருதி தொடர்ச்சியாக பல வேலைத் திட்டங்கள் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

சுயாட்சி அடிப்படையிலேயே தொடர்ந்தும் இக்கட்சியின் செயற்பாடுள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நல்லதொரு தலைமைக்கான மாற்றத்தை தற்போது தமிழ் மக்கள் விரும்புவதாகவும் அதற்கேற்ற வகையில் கட்சியின் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதை மக்கள் அங்கீகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

போராட்ட காலப் பகுதியில் தமது இன்னுயிர்களை மண்ணுக்காக ஈர்ந்தவர்களை நாம் மறந்து விட்டு செயற்பட முடியாது என்பதையும் அவரால் இங்கு வலியுறுத்தி கூறப்பட்டது.

எதிர்காலத்திலும் தமிழ்மக்கள் தன்னாட்சி, சுய கெளரவம் ஆகியவற்றை பெற்றுக் கொள்வதற்கு இக்கட்சி அயராது உழைக்கும்.

இதற்கான மக்கள் ஆதரவு எமது பக்கம் கூடுதலாக இருப்பதாகவும் இது வரவேற்கத்தக்க ஒரு மாற்றமாகும்.

இந்தக் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பாக ஏனைய மாவட்டங்களில் இருந்து வந்த அமைப்பாளர்களும் கட்சியின் தேசிய அமைப்பாளரான சட்டத்தரணி மணிவண்ணன் ஆகியோர் மக்களுக்கு கருத்துரைகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் தொகுதி அமைப்பாளர்கள் கலந்து கொண்டதுடன் பெருமளவிலான பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.     
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila