பாகிஸ்தான் போர் விமானங்கள் இலங்கைக்கு தேவையா?

கடந்த ஜுன் 15ஆம் திகதி தொடக்கம் 21 அம் திகதி வரை பாரிஸில் நடந்த 51 அவது சர்வதேச விமானக் கண்காட்சியில் ,48 நாடுகள் பங்கேற்றிருந்தன.
மூன்றரை இலட்சம் பார்வையாளர்கள் இதனைப் பார்வையிட வந்திருந்தனர். இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த 130 வகையான விமானங்களில்,பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஜே.எவ்-17 விமானமும் ஒன்றாகும்.
147 நாடுகளின் பாதுகாப்பு பிரதிநிதிக் குழுக்கள் பங்கேற்ற இந்தக் கண்காட்சியின் மூலம் 130 பில்லியன் டொலர் பெறுமதியான சிவில் போக்குவரத்து மற்றும் போர் விமானங்களின் விற்பனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சியின் முடிவில், செய்தியாளர்களிடம் பேசியிருந்த ,பாகிஸ்தான் விமானப்படையைச் சேர்ந்த எயர் கொமடோர் சையத் முகமட் அலி, சீன பாகிஸ்தான் கூட்டுத் தயாரிப்பான ஜே.எவ் - 17 போர் விமானங்களை ஆசிய நாடொன்று வாங்க இணங்கியுள்ளதாகக் கூறியிருந்தார்.
18 தொடக்கம், 24 வரையான ஜே.எவ்-17 போர் விமானங்களை ஆசிய நாடு ஒன்றுக்கு விற்பனை செய்வதற்கு பாரிஸ் கண்காட்சியில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர்,இந்த விமானங்கள் 2017 ஆம் ஆண்டில் விநியோகிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுயிருந்தார்.
ஆனால் எந்த நாட்டுக்கு இந்த ஜே.எவ் -17 போர் விமானங்கள் விற்கப்படவுள்ளன என்ற விபரத்தை பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி வெளியிட்டிருக்கவில்லை. ஆனால் இலங்கையே இந்த விமானங்களை வாங்கவுள்ளதாக ,ஊடகங்களில் பரபரப்பான செய்திகள் வெளியாகின.
பாகிஸ்தான் ஊடகங்களிலும், சர்வதேச ஊடகங்களிலும், இந்தச் செய்தி பரபரப்பாக வெளியானது.அதற்குக் காரணம், இலங்கையில் விமானப்படை இந்த விமானங்களை வாங்குவது அல்ல. சீனாவும், பாகிஸ்தானும் இணைந்து தயாரித்த இந்த ஜே.எவ். -17 போர் விமானங்கள் இதுவரையில் பாகிஸ்தான் விமானப்படையில் மாத்திரமே இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
முதல் முறையாக இந்தப் போர் விமானத்தை வெளிநாடு ஒன்று கொள்வனவு செய்துள்ளது என்பது தான் இந்தச் செய்தி கூடுதல் முக்கியதுவம் பெறுவதற்குக் காரணம்,பாகிஸ்தானின் Aeronautical Complex மற்றும் Chengdu Aircraft industy Group ஆகியன இணைந்து இந்தப் போர் விமானத்தை தயாரிக்கின்றன.
ஆரம்பத்தில் இது சீனாவில் வடிவமைக்கப்பட்டது.2007 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த விமான உற்பத்தி அங்கு தொடர்ந்து இடம்பெற்று வருகிற அதேவேளை ,பாகிஸ்தானில் ,2008ஆம் ஆண்டு தொடக்கம் இந்த விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன.
இலகு ரக பலநோக்கு தாக்குதல் விமானமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் போர் விமானத்தை கண்காணிப்பு, தரைத்தாக்குதல் ,வான்வழிச்சண்டை என்று மூன்று தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
ஒலியை விடவும் இரண்டு மடங்கு வேகத்தில் 55 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்ட இந்தப் போர்விமானங்களின் விலை சுமார் 30 மில்லியன் டொலராகும் .நவீன ரக ஏவுகணைகள்,ரேடர் வழிகாட்டல் குண்டுகள் மற்றும் வசதிகளைக் கொண்ட இந்தப் போர் விமானத்தை ஆசிய நாடுகளுக்கு விற்பனை செய்வதில் பாகிஸ்தான் அதிக நாட்டம் கொண்டுள்ளது.
எனவே சர்வதேச அளவில் முக்கியமான ஒரு நாட்டுக்கு முதல் விற்பனையை செய்வதன் மூலம் ,தனது உற்பத்தியைப் பிரபலப்படுத்தலாம் என்று பாகிஸ்தான் யோசிக்கிறது.ஆனால்,பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி கூறியது போல,இலங்கை விமானப்படை,18 தொடக்கம் 24 வரையான போர் விமானங்களை கொள்வனவு செய்யும் நிலையில் இல்லை என்பது உறுதி.
அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.ஒன்று பொருளாதாரம் இடம்கொடுக்காது. இரண்டு இந்தளவு போர் விமானங்களைக் கொள்வனவு செய்ய வேண்டிய தேவை இலங்கைக்கு தற்போது இல்லை. அதற்காக இந்தப் போர் விமானங்களை இலங்கை விமானப்படை கொள்வனவு செய்ய எத்தனிக்கவில்லை என்று கூற முடியாது.
அண்மையில் இலங்கை விமானப்படைத் தளபதியின் அலுவலக அறையில் ஜேஎவ் -17 போர் விமானங்களின் மாதிரி வைக்கப்பட்டிருந்த புகைப்படம் ஒன்று வெளியான போதே ,இந்த விமானங்களை இலங்கை விமானப்படை தான் கொள்வனவு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இப்போது அந்த சந்தேகத்தை வலுப்படுத்தும் செய்திகள் பலவும் வெளியாகி வருகின்றன. முதலில்,ஜெ.எவ்- 17போர் விமானங்களை இலங்கை விமானப்படையே வாங்கவுள்ளதாக செய்தி வெளியானபோது ,அதனை ,விமானப்படைப் பேச்சாளர் நிராகரித்திருந்தார்.
ஆனால்,இந்த விமானங்களின் கொள்வனவு தொடர்பாக இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை என்று அவர் கூறியிருந்தாரே தவிர,இத்தகைய விமானங்களைக் கொள்வனவு செய்யும் திட்டமோ அதுபற்றிய பரிசீலனையோ தம்மிடம் இல்லை என்று தெளிவாகக் கூறவில்லை.
சீனாவும்,பாகிஸ்தானும் இந்த போர் விமானங்களை விற்க இலங்கை விமானப்படையை அணுகியிருப்பது மற்றும் அது தொடர்பாக ஆவணங்கள் பரிமாறப்பட்டதை அவர் உறுதிப்படுத்தியிருக்கிறார். எனினும் கொள்வனவு பற்றிய முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என்றே அவர் கூறியிருக்கிறார்.
அதேவேளை ,பாகிஸ்தானின் பிஸ்னஸ் ரெக்கோடர் என்ற பிரபல வர்த்தக நாளிதழ் ,இந்தப் போர் விமானங்களின் கொள்வனவுக்கான கடன் கட்டளைகள் வழங்கப்பட்டு விட்டதாகக் கூறியுள்ளது. 14 போர் விமானங்கள் இலங்கைக்கு விற்கப்படவுள்ளதாகவும், 2016 ஆம் ஆண்டு தொடக்கம் அவை விநியோகிக்கப்படும் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன்,ஜே.எவ் - 17 போர் விமானங்களைச் செலுத்துவது மற்றும் பராமரிப்பது தொடர்பாக இலங்கை விமானிகள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளிக்கவுள்ளதாகவும் பாகிஸ்தான் நாளிதழ் குறிப்பிட்டிருந்தது.
இது குறித்து விமானப்படை தரப்பில் எந்தக் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எவ்வாறானும்,ஜேஎவ் -17 போர் விமானங்களைக் கொள்வனவு செய்யும் முயற்சியில்,இலங்கை விமானப்படை இறங்கியுள்ளதாகவே தெரிகிறது. போர் முடிந்த ஆறு ஆண்டுகள் கழிந்து விமானப்படை இந்தப் போர் விமானங்களின் கொள்வனவில்இறங்கியிருக்கிறது.
தற்போதைய சூழ்நிலையில்,இந்தப் போர்விமானங்களை இலங்கை விமானப்படைக்கு பயிற்சி மற்றும் அலங்கார அணிவகுப்புகளுக்கு மாத்திரமே பயன்படுத்த முடியும். அதேவேளை ,பெருமளவு செலவழித்து இந்தப் போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதன் மூலம் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் வலுப்பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.
பாகிஸ்தானும் சரி சீனாவும் சரி,ரஷ்யாவும் சரி இலங்கையை இராணு ரீதியாக பலப்படுத்துவதில் மட்டுமன்றி கடனாளியாக்குவதிலும் தீவிரமாக இருக்கின்றன. இந்தப் போர் விமானங்களின் கொள்வனவுக்கு,பாகிஸ்தான் வழங்க முன்வந்த 200 மில்லியன் டொலர் கடன் திட்டமே பயன்படுத்தவுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.
முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்குச் சென்றிருந்த போது, 200 மில்லியன் டொலர் கடன் திட்டத்தை அறிவித்திருந்தது பாகிஸ்தான். அதனை இன்னமும் இலங்கை பயன்படுத்திக் கொள்ளவி்ல்லை. அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தான் சென்றிருந்த போது ,இந்த 200 மில்லியன் டொலர் கடன் திட்ட அறிவிப்புக்கு நன்றியும் தெரிவித்திருந்தார்.
இலங்கைக்கும்,பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தகம் அண்மைக்காலமாக வீழ்ச்சியடைந்து வருவதாக பாகிஸ்தானிய தூதுவர் அண்மையில் கவலை வெளியயிட்டிருந்தார். இந்தநிலையில்,இலங்கையால் பயன்படுத்திக் கொள்ளப்படாத இந்த கடன் திட்டத்துக்கு, தனது ஜே.எவ் -17 போர் விமானங்களை கொடுத்து மீண்டும் இருதரப்பு வர்த்தகத்தை சூடாக்கிக் கொள்ள முனைகிறது பாகிஸ்தான்.
ஏற்கனவே இது போலத் தான் ரஷ்யாவும், சில ஆண்டுகளுக்கு முன்னர் 500 மில்லியன் டொலர் கடன் திட்டத்தை அறிவித்திருந்தது. பின்னர் அந்த கடன் திட்டத்துக்கு,எம்.ஐ-17 ஹெலிகொப்டர்களையே இலங்கைக்கு விற்பனை செய்தது. இந்த கடன்திட்டத்தை இலங்கை இன்னமும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
அண்மையில் கூட அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ரஷ்யா கூறியிருந்தது. கடன் திட்டங்களை வழங்குதல் என்ற பெயரில் இலங்கைப் படைகளைப் பலப்படுத்துவது மட்டுமன்றி ,தமது ஆயுதங்கள் ,போர்த் தளபாடங்களை சந்தைப்படுத்துகின்ற இடமாகவும் தான் சீனா ,பாகிஸ்தான்,ரஷ்யா போன்ற நாடுகள் இலங்கையைப் பயன்படுத்திவருகின்றன.
இந்த வகையில் தான் பாகிஸ்தானும் எப்படியாவது தனது ஜே.எவ்-17 போர் விமானங்களை இலங்கை விமானப்படையின் தலையில் கட்டிவிட எத்தனிக்கிறது.
போரில்லாத ஒரு சூழலில் இலங்கை விமானப்படை இந்த விமானங்களை வாங்குவதன் மூலம், இலங்கையர்களின் தலையில் உள்ள கடன் தான் பெருகப்போகிறதே தவிர, இவற்றின் ஊடாக நாட்டின் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்பது வெற்றிவாதமேயாகும்.
-சுபத்ரா-
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila