நேற்றைய தினம் கொழும்பிலிருந்து ஒரு தொகுதி ஊடகவியலாளர்கள் இராணுவத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பலாளிக்கு அழைக்கப்பட்டு ஊடகவியலாளர் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இதற்காக இராணுவத்தினரின் விமானத்தில் ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டனர்.
இதன்போது 2009 முதல் இதுவரை யாழ் குடாநாட்டில் 152 இராணுவ முகாம்களில் 59 முகாம்கள் அகற்றப்பட்டுள்ளதுடன் 19,159 ஏக்கர் நிலப்பரப்பு முற்றாக பொதுமக்களின் பாவனைக்கு விடுவிக்கப்பட்டிருப்பதாக யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த தெரிவித்தார்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களைப் போல யாழ் குடாநாட்டில் பாதுகாப்பான சூழலே காணப்படுகிறது. இங்கு எந்த நேரத்தில் யாரும் எங்கும் சென்றுவரக்கூடிய அச்சுறுத்தல் இல்லாத சூழ்நிலை காணப்படுகிறது. மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை சுமுகமான முறையில் எதுவித பயமும் இன்றி தென்பகுதி மக்களைப் போல முன்னெடுத்து வருகின்றனர். தென் பகுதியில் இருப்பதைப் போன்று யாழ்ப்பாணத்திலும் சிவில் நிர்வாகமே காணப்படுகிறது. இங்கு எதுவித இராணுவ நிர்வாகமும் இல்லையென்றும் கட்டளைத் தளபதி தெரிவித்தார்.
2009ஆம் ஆண்டிலிருந்து இதுவரை வடக்கில் மொத்தமாக 19159.33 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. விசேடமாக 51,52,55 படைப்பிரிவின் கீழ் இருந்த 12,901 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருப்பதுடன். 51 படைப்பிரிவின் கீழ் 1830 ஏக்கர் காணிகளும், 52 படைப்பிரிவின் கீழிருந்த 10,573 ஏக்கர் காணிகளும், 55 பிரிவின் கீழிருந்த 498 ஏக்கர் காணிகளுமாக மொத்தம் 12,901 ஏக்கர் காணிகள் பொதுமக்களின் பாவனைக்காக விடுக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், பலாலி உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் 2010ஆம் ஆண்டு முதல் 2015 ஏப்ரல் வரை 6 கட்டங்களாக மொத்தம் 6258.38 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டுள்ளன.
இதில் முதற் கட்டமாக 2010.10.28ஆம் திகதி 370.65 ஏக்கர் காணிகளும், 27.1.2010ஆம் திகதி 10952.13 ஏக்கர் காணிகளும், 09.03.2011ஆம் திகதி 1971.9 ஏக்கர் காணிகளும், 06.10.2011 ஆம் திகதி 354.94 ஏக்கர் காணிகளும், 29-11-2011 ஆம் திகதி 617.76 ஏக்கர் காணிகளும், 23-03-2015 மற்றும் 10-04-2015ஆம் திகதிகளில் 1000 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எஞ்சிய காணிகளையும் வழங்குவதற்கு நடவடடிக்கை எடுக்கப்படுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
தேசிய பாதுகாப்பை கருத்தில்கொண்டே அரசாங்கம் எப்பொழுதும் செயற்பட்டு வருகிறது, அதன் அடிப்படையிலேயே தீர்மானங்களையும் எடுக்கும். சந்தர்ப்பம் தேவையை கருத்தில்கொண்டு எஞ்சிய காணிகளை விடுவிப்பதா இல்லையா என்பதை அரசாங்கம் தீர்மானிக்கும். எனவே இது தொடர்பில் இன்று, நேற்று, நாளை என்று குறிப்பிட்ட நாளைக் கூறமுடியாது. இராணுவத்துக்கென காணிகளை சுவீகரிக்கும்போது அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் மூலம்தான் அவற்றை பெற்றுள்ளது. எனவே தேசிய பாதுகாப்பை கருத்தில்கொண்டு அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் விடுவிப்பது குறித்த விடயங்களை அரசு தீர்மானிக்கும் என்றார்.
வடக்கில் ஏதேனும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதா என மற்றொரு ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்த யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி,
வடக்கில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கப் போவதில்லை. அவ்வாறு தலைதூக்கா தவாறு போதியளவு பாதுகாப்பு நடவடிக் கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வளமையான முறையில் கண்காணிப்புகளை முன்னெடுத்துவருகின்றோம். யாழ் குடாநாட்டின் பாதுகாப்பில் எந்த அச்சுறுத்தலும் இல்லை. இன்றைய நிலை நாளை மாற்றமடையலாம் இதற்குத் தேவையான வசதிகளைக் கொண்டு படைகளின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கூறினார்.
இராணுவத்தினர் யாழ்பாணத்தில் 19159 ஏக்கர் நிலத்தை விடுவித்துள்ளோம் என்பதன் ஊடாக ஏனைய காணிகளை விடுவிப்பதை தவிர்க்கவே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதா என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது.
அத்துடன் சர்வதேச நெருக்கடிகளை தவிர்க்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் காணிகள் விடுவிக்கப்பட்டுவிட்டன என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தவும் இதன் மூலம் முயற்சிக்கப்படுகிறதா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் தங்கியிருந்த பல பகுதிகளிலிருந்தும் வெளியேறியுள்ளபோதும் பாதுகாப்பு வலய காணிகளிலிருந்து வெறும் ஆயிரம் ஏக்கரே விடுவிக்கப்பட்டுள்ளன. ஏனைய பகுதிகளை விடுவிக்குமாறு மக்களும் தமிழ் அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இராணுவத்தினர் உயர்பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி நிலை கொண்டுள்ள இடங்களை விடுவிப்பதை தவிர்க்கும் ஓர் உபாயமாக இந்த நடவடிக்கயை மேற்கொண்டனரா? வலி வடக்கில் விடுவிக்கப்படாத பகுதிகளுக்குச் செல்லவோ அல்லது மக்களின் அகதிமுகாங்களுக்குச் செல்லவோ ஊடகவியலாளர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை.
ஆனால் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட வளலாய் பகுதிக்கு ஊடகவியலாளர்கள் இராணுவத்தின் ஒழுங்கமைப்பின் கீழ் சென்றனர். அங்கு அடிப்படைவசதிகள் ஏதுவும் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை என்று மக்கள் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தினர்.