காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியை மீட்பார் யாரும் உளரோ!

சான்றாண்மைமிக்க பழைய மாணவர்களைக் கொண்ட காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியை மீளவும் கட்டியெழுப்பி எங்கள் பிள்ளைகள் நடேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்கும் நிலைமையை ஏற்படுத்த யாரும் முன்வராதது ஏன்?
இலங்கைக்கு சிவபூமி என்று திருமூலர் நாமம் சூட்டினார். சிவபக்தனாகிய இராவணனின் ஆட்சியும் சிவ வழிபாடும் இடம்பெற்றமையாலும் வேதமந்திரங்களின் தலையாக இருக்கக் கூடிய ஓம் எனும் பிரணவத்தை இலங்கைத் தமிழ் மக்கள் தங்கள் சாதாரண வாழ்க்கையில் உச்சரிப்பதாலும் இலங்கைக்கு சிவபூமி என்ற பெயர் பொருத்துடையதாயிற்று என்பது நம் சிற்றறிவின் முடிவு.
சிவபூமி என்பதை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாண மண்ணில் நம் மூதாதையர்கள் சிவநாமத்தில் கல்லூரிகளை ஆரம்பித்தனர். இதில் ஐந்து கல்லூரிகள் வரலாற்றுப் பெருமையும் சைவசமயப் பின்புலமும் கொண்டவை.
இதில் வண்ணார்பண்ணையில் வைத்தீஸ்வராக் கல்லூரி, திருநெல்வேலியில் பரமேஸ்வராக் கல்லூரி, வல்வெட்டித்துறையில் சிதம்பராக் கல்லூரி, கீரிமலையில் நகுலேஸ்வராக் கல்லூரி, காங்கேசன்துறையில் நடேஸ்வராக் கல்லூரி.
இதில் திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட, பரமேஸ்வரா என்ற பெயர் நீண்டகாலம் உரிமை கோருவார் இன்றி இருந்த போதிலும் திருநெல்வேலியிலுள்ள சைவப் பாடசாலைக்கு 2012 ம் ஆண்டில் பரமேஸ்வரா என்ற பெயர் சூட்டப்பட்டதோடு அச்சிவநாமம் மீண்டும் உச்சாடனத்துக்குரியதாயிற்று.
ஈழத்தின் ஐந்து ஈச்வரங்கள் போல, யாழ்ப்பாண மாவட்டத்தில் சிவநாமத்தில் ஐந்து கல்லூரிகள் இயங்கி, தமிழ் மண்ணில் காத்திரமான அறிஞர்களை - ஆன்மிக வள்ளல்களை உருவாக்கின.
எனினும் இப் பெரும் பணியில் நீண்டகாலம் இணைந்திருந்த காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி யுத்த சூழலுக்குள் அகப்பட்டதிலிருந்து இன்று வரை மீட்டெடுத்து இயங்கவைக்க முடியாமல் இருப்பது மிகப்பெரும் வேதனைக்குரியது.
சான்றாண்மைமிக்க பழைய மாணவர்களைக் கொண்ட காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியை மீளவும் கட்டியெழுப்பி எங்கள் பிள்ளைகள் நடேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்கும் நிலைமையை ஏற்படுத்த யாரும் முன்வராதது ஏன்?
காங்கேசன்துறை நடேஸ்வரா ஒரு பெளத்த கல்லூரியாக, கத்தோலிக்க பாடசாலையாக, இஸ்லாமிய கல்லூரியாக இருந்திருந்தால், இன்று நிச்சயம் அது மீட்கப்பட்டிருக்கும். என்ன செய்வது துரதிர்ஷ்டவசமாக நடேஸ்வரா இந்துக் கல்லூரியாக இருந்ததனால் அதனை மீட்பாரும் இயக்குபவரும் இல்லாமல் போயிற்று.
காங்கேசன்துறையில் கட்டப்பட்ட ஹோட்டலுக்குச் சென்று அங்கு தேநீர் அருந்த முடியும். திருமண வரவேற்பு உபசாரங்களைச் செய்யவும் இயலும். லஞ்சும், டினரும் பரிமாறவும் ஏற்பாடு உண்டு.
ஆனால் அதே காங்கேசன்துறையில் உள்ள எங்கள் நடேஸ்வராக் கல்லூரிக்கு நாங்கள் போக முடியாது. எங்கள் பிள்ளைகள் படிக்க முடியாது என்றால் பலவீனம் சிங்கள ஆட்சியாளர்களுடையதா? அல்லது தமிழ் அரசியல் தலைமைகளினுடையதா? என்பதை தமிழ் மக்கள்தான் சிந்திக்க வேண்டும்.
1983ம் ஆண்டு இந்த நாட்டில் நடந்த யூலைக் கலவரத்தின் போது சிதம்பரம் கப்பல் ஏற்றிவந்த தமிழர்கள் தங்கியிருந்து, உணவு உண்டு, சரிந்து உறங்க இடம் கொடுத்த கல்லூரி காங்கேசன்துறை நடேஸ்வரா என்பதை எவரும் மறந்து விடக்கூடாது.
கட்டிட வளமும் நில வளமும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியை மீள இயக்குவது, அங்கு மாணவர்கள் சென்று கல்வி கற்பது, நாம் இழந்த மண்ணை மீட்டு அதனை வளப்படுத்துவதற்கு நல்ல சந்தர்ப்பமாக அமையும்.
இதற்காக பொறுப்பானவர்கள், கல்லூரியின் பழைய மாணவர்கள் கடும் பிரயத்தனம் செய்ய வேண்டும். தேவையாயின் எங்கள் எம்.பிக்கள் ஒரு நேர உணவை விடுத்தேனும் சுருக்கியேனும் நடேஸ்வராவை மீட்க உதவலாமன்றோ.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila