இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பகுதியில் தனியாரின் காணிகளையும், யுத்த மோதல்களுக்கு முன்னர் கிராமிய வைத்தியசாலை இயங்கி வந்த வைத்தியசாலைக்குரிய காணியின் ஒருபகுதியையும் கைப்பற்றி அதில் பௌத்த விகாரையொன்று கட்டப்பட்டு வருவதாகத் தெரிவித்து, அதற்கெதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முற்பட்ட மூன்று பேரை காவல்துறையினர் வெள்ளியன்று கைது செய்திருக்கின்றனர்.
பௌத்த விகாரை கட்டுவதற்கு எதிராகவே இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுவதாகத் தமக்கு முறைப்பாடு கிடைத்திருப்பதாகக் கூறியே தங்கள் மூவரையும் காவல்துறையினர் கைது செய்ததாக, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான கதிர்காமு சிவலோகேஸ்வரன் தெரிவித்தார். கொக்கிளாய் வடக்கைச் சேர்ந்த இவர், திருகோணமலை மாவட்டத்தில் சேருவில பிரதேச சபை உறுப்பினராகச் செயற்பட்டு வருகின்றார்.உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவிருந்த மூவரையும் காவல்துறையினர் கைது செய்ததுடன், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக அங்கு வந்த ஊர்வாசிகள் மற்றும் பொதுமக்களையும் காவல்துறையினர் கலைத்து அனுப்பியதாகவும், தங்கள் மூவரையும் முல்லைத்தீவு காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று தடுத்து வைத்திருந்ததாகவும் சிவலோகேஸ்வரன் தெரிவித்தார்.
உண்ணாவிரதம் இருப்பதற்கு முற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதை அறிந்து முல்லைத்தீவு காவல் நிலையத்திற்குச் சென்ற வடமாகாணசபை உறுப்பினர் டாக்டர் சிவமோகன் காவல்துறை அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு பௌத்தவிகாரை கட்டப்படுவதற்கு எதிராக இந்தப் போராட்டம் நடத்தப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியிருந்தார்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்களிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்ததன் பின்னர் காவல்துறையினர் அவர்களை விடுதலை செய்திருக்கின்றனர்.
தங்களை விசாரணைசெய்து வாக்குமூலம் பதிவு செய்த காவல்துறையினரிடம் தாங்கள் தமது காணிகள் அபகரிக்கப்பட்டதை எதிர்த்தே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், பௌத்த விகாரை கட்டுவதைத்தாங்கள் எதிர்க்கவில்லை என்றும் யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, அந்த குறிப்பிட்டகாணியில் முன்னைய ஆட்சிக்காலத்தில் வந்து அமர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் அங்கு ஒரு சிறிய புத்தர் சிலையை அமைத்திருப்பதாகவும், அதன் அருகில் உள்ள ஐந்து தமிழர்களுக்குச் சொந்தமான காணிகளை பலவந்தமாகக் கைப்பற்றி இப்போது பௌத்த விகாரை கட்டப்படுவதாகவும் அதனையடுத்தே தாங்கள் போராட்டம் நடத்துவதற்கு முற்பட்டதாக தெரிவித்ததாகவும் சிவலோகேஸ்வரன் கூறினார்.