இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம்! பணிகள் ஆரம்பம்- பேரவைக்கு எதிராக வேண்டுமென்றே சில ஊடகங்கள் செயற்படுகின்றன

(2ம் இணைப்பு)
 
வடகிழக்கு தமிழர்களின் நீண்டகால் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழ் மக்கள் அவை உருவாக்கிய அரசியல் தீர்வு திட்டத்தை தயாரிப்பதற்கான நிபுணர்குழு இன்றைய தினம் உத்தியோகபூர்வமான தமது பணிகளை ஆரம்பித்துள்ளது.
நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் பேராலயங்களில் சிறப்பு வழிபாடுகளுடன் பணிகளைத் தொடங்கியுள்ளன. தமிழ் மக்கள் அவை மிகுந்த விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் மத்தியில் கடந்த வருடம் டிசம்பர் 27ம் திகதி 2ம் அமர்வினை நடத்தியிருந்தது. இதில் தமிழ் மக்களுடைய தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வினைக் காண்பதற்கான 14 நிபுணர்கள் அடங்கிய நிபுணர்குழு உருவாக்கப்பட்டிருந்தது. இதில் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளினதும், வடமாகாண முதலமைச்சரினரும் 2 பிரதிநிதிகள் உள்ளடங்கிய 14 நி புணர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த நிபுணர்குழு இன்றைய தினம் யாழ்.மாவட்டத்திலிருந்து தமது உத்தியோகபூர்வ பணிகளை தொடங்கியிருக்கின்றது. இந்நிலையில் இன்றைய தினம் மாலை 3.30 மணிக்கு நல்லூர் ஆலயத்தில், வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், யாழ்ப்பாணம் பேராலயத்திலும் சிறப்பு வழிபாடுகள் நடை பெற்றன. இதனை தொடர்ந்து தமது பணிகளை நிபுணர்குழு உத்தியோகபூர்வமாக இன்றையதினம் தொடங்கியிருக்கின்றது. உத்தியோகபூர்வமாக பணிகள் தொடங்கும் நிகழ்வில் ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி தலைவர், மற்றும் புளொட் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ் மக்கள் அவை பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிபுணர்குழு யாழ்.மாவட்டத்திலிருந்து வடகிழக்கு மாகாணங்களில் தமது பணிகளை மக்கள் மட்டத்திலிருந்து கருத்தறிந்து தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை தயாரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இரண்டாம் இணைப்பு மக்கள் பேரவைக்கு எதிராக சில ஊடகங்கள் வேண்டுமென்றே எதிர்ப் பிரசாரம் செய்கின்றன மிகப்பெரும் தியாகங்கள் நடந்தேறிய எங்கள் இனத்திற்கான தீர்வென்பது தனி மனிதர்களால் முடிவு செய்யப்படக்கூடியதன்று என தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் பேராலயங்களில் சிறப்பு வழிபாடுகளுடன் பணிகளை இன்ற தமிழ் மக்கள் பேரவை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பல்வேறுபட்ட விமர்சனங்கள், கருத்துக்கள் என்பனவற்றோடு, பலரின் ஆதரவோடு தமிழ் மக்கள் பேரவை தனது செயற்பாடுகளை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பேரவை சர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
அரசியல் என்ற எல்லைகளைக் கடந்து தமிழ் மக்களின் நலன்கள், உரிமைகளை வலியுறுத்துவதையும் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்ட தமிழ் மக்கள, பேரவை தனது பணியை மிகவும் அடக்கமாகவும, உறுதியாகவும் முன்னெடுத்துச் செல்கின்றது.
தமிழ் மக்கள் பேரவைக்கு எதிராக சில ஊடகங்கள் வேண்டுமென்றே எதிர்ப் பிரசாரம் செய்கின்ற போதிலும் தமிழ் மக்கள் பேரவையானது தனது கொள்கையில் தளராத துணிவோடு பயணிக்கத்
தொடங்கியுள்ளது.
தமிழ்த் தரப்புக்கள் அனைத்தும் ஓரணியில் ஒன்று திரண்டு தமிழ், மக்களின் உரிமையை வலியுறுத்துகின்ற தேவை தற்போது ஏற்பட்டுள்ளது என்பதை நாம் உணர்ந்துள்ளோம்.
மிகப்பெரும் தியாகங்கள் நடந்தேறிய எங்கள் இனத்திற்கான தீர்வென்பது தனி மனிதர்களால் முடிவு செய்யப்படக்கூடியதன்று.
எனவே தான் தமிழ் அரசியல் தரப்புகளும் பொது அமைப்புகளும் மதத் தலைமைகளும் தமிழ்ப் புத்திஜீவிகளும் ஒன்றிணைந்து எமக்கான தீர்வுத்திட்டத்தை தயாரிப்பதுடன் அனைத்துத் தமிழ் மக்களிடமும் அதனை எடுத்துச் சென்று அதற்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வது மிகவும் அவசியமானது என்று உணரப்பட்டது.
இந்தச் செயற்பாட்டிற்கு அனைத்துத் தரப்புக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுடன் குறிப்பாக எமது புலம்பெயர் உறவுகள் ஒன்றுசேர்ந்து தமது பேராதரவை தரவேண்டும் என்பதும் எம்
தாழ்மையான வேண்டுகோள்.
முன்பு ஒருபோதும் சாத்தியப்படாமல்போன ஒரு முக்கியமான விடயம். இப்போது சாத்தியப்பட்டுள்ளது. அதுவே எங்கள் தாயகத்தைச் சேர்ந்த துறைசார் நிபுணர்கள் ஒன்று சேர்ந்து எமக்கான அரசியல் தீர்வுத் திட்ட வரைபைத் தயாரிக்கும் பணியாகும்.
காலம் உணர்ந்த இப்பணியானது 02.01.2016 இன்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைகு்கப்படுகிறது.
அரசியல் தீர்வுத் திட்டத்தை தயாரிக்கும் துறைசார் நிபுணர்கள் அடங்கிய உபகுழுவானது தொடர்ந்து தனது பணியை விரைவாக முன்னெடுத்துச் செல்வதுடன், தனது செயற்பாட்டு அறிக்கையை வாரந்தோறும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைமையின் கவனத்திற்குக் கொண்டுவரும்.
குறைந்தது 15 துறைசார் நிபுணர்கள் அடங்கிய உப குழுவானது உள்நாட்டு வெளிநாட்டு சட்ட நிபுணர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
இவ் உப குழுவானது தமிழ்மக்களின் சுய நிர்ணய உரிமை, அபிலாசைகள் என்பவற்றை நிரந்தரமாகப் பெற்றுக்கொள்வதும் நடைமுறைக்குச் சாத்தியமானதும், சர்வதேசத்தின் ஆதரவைப் பெறக்கூடியதுமான தீர்வுத் திட்டத்தை தயாரிப்பதுடன் அது தொடர்பில் தமிழ்மக்களின் கருத்துக்களையும் கண்டறியும்.
இரண்டு தொடக்கம் மூன்று மாதங்களுக்குள் தயாரிக்கப்படும் தீர்வுத் திட்ட வரைபு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளிடம் கையளிக்கப்படுவதுடன் இத்தீர்வுத் திட்டத்தை நிறைவேற்றுவதில் தமிழ்மக்கள் பேரவை கடுமையாகப் பாடுபடும் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதேவேளை தீர்வுத் திட்ட வரைபு தொடர்பில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தமிழ் உறவுகள் தமது கருத்துக்களை நிபுணர் குழுவுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
இதற்கான ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளதுடன்  politicalsub@tamilpeoplescouncil.org என்றடி மின்னஞ்சல் மூலமாகவும் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.
இன்றைய தினம் தனது பணியை ஆரம்பித்துள்ள உப குழுவில் இடம்பெற்றுள்ள நிபுணர்களின் பெயர் விபரங்களும் ஆலோசனைக்குழுவில் இடம் பெற்றுள்ளவர்களின் விபரங்களும் மிக
விரைவில் வெளியிடப்படும் எனவும் தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila