வடக்கின் நிர்வாகம் யார் கையில்?

வடக்கிலிருந்து படைகளைக் குறைக்கும் விடயத்தில் முடிவுகளை எடுப்பது அரசாங்கமா? அல்லது இராணுவமா? என்ற விவாதம் இப்போது எழுந்திருக்கிறது.
வடக்கிலிருந்து முகாம்களை அகற்றுவது மற்றும் படைகளைக் குறைப்பது பற்றிய விடயத்தில் தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பை இரண்டு தரப்புமே தட்டிக்கழிக்கத் தொடங்கியுள்ளமை தான், இந்தக் கேள்வி எழுந்திருப்பதற்குப் பிரதான காரணமாகும்.

ஆயுத மோதல் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னரும், வடக்கில் அதிகளவு படையினர் நிலை கொண்டுள்ளதும், பொதுமக்களின் நிலங்களில் படைமுகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதும், சர்ச்சைக்குரிய விடயங்களாகவே இருந்து வருகின்றன.

போரில்லாத சூழலில், வடக்கிலிருந்து இராணுவத்தைக் குறைக்க வேண்டும், பொதுமக்களின் காணிகளிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் ஆகிய கோரிக்கைகள் தமிழ் அரசியல் கட்சிகளாலும், சிவில் சமூக அமைப்புகளாலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

எனினும், முன்னைய அரசாங்கம் இந்த விடயத்தில் எந்த விட்டுக் கொடுப்புக்கும் தயாராக இல்லாத, கடும்போக்கைக் கடைப்பிடித்து வந்தது.

இப்போதைய அரசாங்கம், இந்த விடயத்தில் முற்றிலுமாக விட்டுக்கொடுப்புடன் நடந்து கொள்ளத் தயாராக இல்லாவிட்டாலும், கொஞ்சமேனும் நெகிழ்வுப்போக்கை கடைப்பிடிக்கத் தயாராக இருக்கிறது.

ஆனாலும், தற்போதைய அரசியல் சூழல் என்பது, வடக்கு படைவிலக்கத்தை சர்ச்சைக்குரிய ஒன்றாக மாற்றுவதற்கு ஏற்றதாகவே காணப்படுகிறது.

மஹிந்த ராஜபக்‌ச தரப்பும், எதிர்க்கட்சியும், வடக்கிலிருந்து படைகள் விலக்கப்படுவதைக் கடுமையாகச் சாடி வருகின்றன.

அரசாங்கத்துக்கு எதிரான நகர்வுக்கு இந்த படைவிலக்கலையும் முக்கியமானதொரு மூலோபாயமாகக் கையாளத் தொடங்கியிருக்கிறது மஹிந்த ராஜபக்ச தரப்பு.

வடக்கில் முக்கியமான படைமுகாம்கள் விலக்கப்படுகின்றன, பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது என்று மஹிந்த ராஜபக்ச தரப்பு பிரசாரம் செய்யத் தொடங்கிய போது, அதனை முறியடிப்பதற்காக, யாழ்ப்பாண படைகளின் தலைமையகத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது அரசாங்கம்.

இந்த செய்தியாளர் சந்திப்பில், யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த, படைவிலகல் தொடர்பாக தெளிவான தகவல்கள் எதையும் வழங்காமல் மொட்டையாக, 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் 59 இராணுவ முகாம்கள் மூடப்பட்டதாகக் கூறியிருந்தார்.

இதைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு மஹிந்த ராஜபக்ச, புதிய அரசாங்கம் 59 இராணுவ முகாம்களை மூடிவிட்டதாகப் பிரசாரம் செய்யத் தொடங்கினார். அதன் பின்னர், வடக்கில் 2009ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரையே படையினரின் 59 புறக்காவல் நிலைகள் அகற்றப்பட்டதாக இராணுவத் தலைமையகம் விளக்கம் கொடுத்தது. 

முக்கியமான படைமுகாம்கள் விலக்கப்படவில்லை என்றும் விலக்கப்பட்டது புறக்காவல் நிலைகள் (outposts) மட்டும் தான் என்றும் இராணுவத் தலைமையகம் குறிப்பிட்டிருந்தது. இதிலிருந்து இராணுவ முகாம்கள் விலக்கப்பட்டது என்ற செய்தி வெளியாவதை இராணுவத் தலைமையகமும், அரசாங்கமும் விரும்பவில்லை என்பது உறுதியானது.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர்- 2015ஆம் ஆண்டில் எந்தவொரு இராணுவ முகாமும் வடக்கில் அகற்றப்படவில்லை என்பதை, இராணுவத் தலைமையகம் உறுதி செய்த பின்னரும் கூட, இந்த விவகாரத்துக்கு எதிர்க்கட்சிகளோ மஹிந்த ராஜபக்ச தரப்போ முடிவு கட்டவில்லை.

இதனால், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மீண்டும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எந்தவொரு இராணுவ முகாமையும் தமது அரசாங்கம் அகற்றவில்லை என்று கூற வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதுமட்டுமன்றி, ரணில் விக்கிரமசிங்க இந்தச் சந்தர்ப்பத்தில், வடக்கிலிருந்து படைமுகாம்களை அகற்றுவது தொடர்பாக அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்காது என்றும், அதை இராணுவமே தீர்மானிக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், யாழ். படைத் தலைமையகத்தில் கடந்த 10ஆம் திகதி நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போது இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர அதற்கு மாறான கருத்தைக் கூறியிருந்தார்.

வடக்கில் பாதுகாப்பு வலயங்களைப் பலப்படுத்துவதும், அகற்றுவதும் அரசாங்கத்தின் செயற்பாடாகும். நாட்டில் அச்சுறுத்தல் நிலைமைகள் ஏற்படும் போது பாதுகாப்பு வழங்குவதே இராணுவத்தின் கடமை.

இப்போது அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய பாதுகாப்பு பகுதிகளை அகற்றி பொதுமக்களுக்கு அவர்களின் நிலங்களை வழங்குகிறோம்.

எஞ்சியுள்ள நிலத்தையும் வழங்கக் கோரி அரசாங்கம் தெரிவிக்குமானால் அந்த சந்தர்ப்பத்தில் நிலைமைகளை பொறுத்து நாம் நடவடிக்கை எடுப்போம் என்று அவர் கூறியிருந்தார்.அதாவது, வடக்கில் படைமுகாம்களை விலக்கும் முடிவு அரசாங்கத்தைச் சார்ந்தது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கூற்று, அதற்கு மாறாக, படைவிலக்கம் இராணுவத் தலைமை எடுக்கும் முடிவு என்று கூறப்பட்டிருந்தது. இரண்டு தரப்புமே, இணைந்து முடிவெடுக்க வேண்டிய இந்தக் கட்டத்தில் இருதரப்புமே நழுவல் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றன.

படைவிலக்கம் என்பது பாதுகாப்பு ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு அரசியல் ரீதியாக எடுக்க்கப்பட வேண்டிய முடிவாகும். உலகில் எந்தவொரு இராணுவமும், தனது கட்டுப்பாட்டிலுள்ள எதையுமே இழக்க விரும்பாது. அதுவும், மிகப்பெரிய படையை வைத்துள்ள இலங்கை இராணுவத்துக்கு தேவையான ஆளணியும், பொருளாதார வளமும் உள்ள நிலையில், தனது கட்டுப்பாட்டுப் பகுதிகளை சுருக்கிக் கொள்ள வேண்டிய தேவையோ, அவசியமோ இல்லை.

எனவே படைவிலக்கச் சிந்தனை படைத்தரப்பிடம் இருந்து தான் வரவேண்டும் என்ற ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து அடிப்படையற்றது. அதைவிட, பாதுகாப்பு ரீதியாக படை நிலைகளை மாற்றியமைக்கும் தேவை ஒன்று இல்லாத நிலையில், தற்போதுள்ள நிலைகளில் நிரந்தரமாக தங்கியிருப்பதையே படைத்தரப்பு விரும்பும்.

ஆனால் அரசாங்கத்துக்கு அத்தகைய நிலை இல்லை. அரசாங்கம் பொதுமக்களின் நலனையும் அவர்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். அந்தவகையில், வடக்கில் படையினரை விலக்குவது அல்லது குறைப்பது பற்றிய முடிவுகளை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பேயாகும்.

ஆனால், வடக்கில் முகாம்களை அகற்றுவது தொடர்பாக இராணுவமே முடிவு எடுக்கும் என்ற ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து, அங்கு இன்னமும் இராணுவ ஆட்சியின் நிழல் தான் நிலவுகிறது என்பதை உறுதிப்படுத்தி நிற்கிறது. ஒரு பக்கத்தில் வடக்கில் இயல்பு நிலையை ஏற்படுத்தியிருப்பதாக கூறும் அரசாங்கம், இன்னொரு பக்கத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது தொடர்பில் இராணுவமே முடிவெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறுவது அபத்தமானது.

போர்க்காலங்களில் இராணுவம் முடிவுகளை எடுப்பது இயல்பு. ஆனால் போரில்லாச் சூழலில் இராணுவமே முடிவுகளை எடுப்பதென்பது ஜனநாயகம் அல்ல. இது ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அவரது அரசாங்கத்துக்கும் நன்றாகவே தெரியும். இத்தகைய நிலையை அமெரிக்காவோ, இந்தியாவோ கூட விரும்பாது. இலங்கையில் நிலையான அமைதி, நல்லிணக்கம் ஏற்படுவதற்கு, வடக்கிலிருந்து படைகள் குறைக்கப்பட்டு, இராணுவ மயமற்ற சூழல் உருவாக்கப்பட வேண்டியது அவசியம் என்ற கருத்து, இலங்கை அரசாங்கம் தவிர்ந்த ஏனைய எல்லாத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிக்கிறது.

எனவே, இராணுவத்தின் கையிலுள்ள முடிவெடுக்கும் அதிகாரம் அரசியல் மட்டத்துக்கு மாற்றப்பட வேண்டும்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் போது பாதுகாப்பை அளிப்பது மட்டும் தான் இராணுவத்தின் வேலை என்றும், படையினரை விலகுமாறு கூறினால், அவர்கள் விலகிக் கொள்வார்கள் என்றும் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர கூறியிருந்தார். அதுதான் யதார்த்தமானது.

ஆனால், படைவிலக்கம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தன் கையிலேயே உள்ளதென்று காட்டிக்கொள்ள அரசாங்கம் இப்போது விரும்பவில்லை. அது எதிர்க்கட்சிகளின் வசைமாரிக்கு வழிவிடும் என்பதால் நழுவிக் கொள்கிறது.

அதேவேளை இராணுவத் தரப்பும் இந்த விவகாரத்தில் தனக்குப் பொறுப்பில்லை என்று அரசாங்கத்தின் தலையில் பொறித்து விட்டுள்ளது. இந்தக் கட்டத்தில் வடக்கிலுள்ள இராணுவத்தினரின் பிடியில் உள்ள நிலங் களின் உரிமையாளர்கள் யாரிடம் சென்று இதுதொடர்பாக கேள்வி எழுப்புவது?

அவர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறப்போவது இராணுவமா? அரசாங்கமா? இராணுவமே முடிவெடுக்கும் - பதிலளிக்க வேண்டும் என்றால், எதற்காக ஒரு அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்? அது இரா ணுவ ஆட்சியின் பிரதி விம்பமாக அல்லவா இருக்கும்.

இப்படி ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பி யிருக்கிறது ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து.

மஹிந்த ராஜபக்ச தரப்பின் மீதுள்ள பயத்தின் காரணமாகவோ, அல்லது வடக்கில் இருந்து படைகளை விலக்க விரும்பாமலோ அரசதரப்பு பொறுப்பில் இருந்து நழுவிக் கொள்ளப் பார்க்கிறது.

இத்தகைய நழுவல் போக்கை கடைப்பிடிக்கலாம் என்று ரணில் விக்கிரமசிங்க எண்ணு வாரேயானால் அவர் தமிழர் மக்களின் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

அதன் விளைவு வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும்.

- சத்ரியன் -
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila