தென்னிலங்கை மீனவருக்கு கரைவலைப்பாடு வழங்குவதோடு ,அங்கிருந்த ஊரவரான தமிழ் மீனவருக்குரிய பூர்விக உரிமையை மறுத்து வெளியேற்றும் திட்டமிட்ட நடவடிக்கை ஒன்று முல்லைத்தீவு நாயாறில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முல்லை நாயாறைச் சேர்ந்த தமிழ் மக்களின் தகவலை அடுத்து அங்கு சென்ற வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதை நேரில் உறுதிப்படுத்தியுள்ளார்.
1998 ஆம் ஆண்டிலிருந்து தன்னுடைய சொந்த ஊரிலே கடற்றொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டவரும் 2012ஆம் ஆண்டில் இலங்கை கடற்றொழில் அமைச்சரால் குறித்த பகுதியில் கரைவலைத் தொழிலை மேற்கொள்வதற்கான அதிகாரபூர்வ அனுமதியைப் பெற்றவருமான தனேஸ்குமார் என்கின்ற முல்லை நாயாறைச் சேர்ந்த தமிழ் மீனவரையே தற்போது வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2015/05/30இல் வருகை தந்திருந்த கடற்றொழில் பணிப்பாளர் நாயகத்தால் முல்லைத்தீவு கடற்றொழில் திணைக்களத்தில் வைத்து தனேஸ் குமாரை வெளியேறுமாறும் குறித்த கரைவலைப்பாடு தென்னிலங்கை மீனவருக்கு வழங்கப்படவுள்ளது எனவும் முறையற்ற வகையிலான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்த மக்களின் தகவலையடுத்து முல்லை நாயாறுக்கு இன்று முற்பகல் (2015-06-28) சென்ற வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் அங்கிருந்த தமிழ் மீனவர்கள் தங்கள் உணர்வுகளைக் கொட்டி உள்ளனர்.
இது பற்றி வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்
கடந்த 1998 இல் இருந்து குறித்த பகுதியில் அதே ஊரைச் சேர்ந்த தனேஸ்குமார் கரைவலைத் தொழிலை மேற்கொண்டு வருகிறார். மேலும் 2012/01/24 அன்று கடற்றொழில் அமைச்சின் பணிப்புரையின் படி .கடற்றொழில் திணைக்களத்தால் நாயாற்றுப்பகுதியில் உள்ள 28,29,30 ஆம் இலக்க கரைவலைப்பாடுகளில் 28 ஆம் இலக்க கரைவலைப்பாடு அனுமதி தனேஸ் குமாருக்கு வழங்கபட்டுள்ளது.
ஆனால் 2013 ஆம் ஆண்டில் முல்லைத்தீவு கடற்றொழில் திணைக்கள உதவி ஆணையாளராக இருந்த பந்துல என்பவரால், தனேஸ் குமாரின் கரைவலைப்பாட்டுக்குள் தென்னிலங்கை மீனவர் ஒருவருக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுமார் 457 மீற்றர் தூர கரைவலை தொழில் அனுமதியைப் பெற்றிருந்த தனேஸ்குமார் 150 m வரையான பகுதியிலேயே தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
பாறைகள்,கட்டைகள் என்று சீரற்ற பகுதியாக இருந்த அந்தப்பகுதியை சீர் செய்து அப்பகுதியில் அவர் கரைவலைத் தொழிலை மேற்கொண்டு வருகையில் , கடந்த 2015/05/30 இல் முல்லைத்தீவு கடற்றொழில் திணைக்களத்தில் வைத்து கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் அவர்களால் , போலியான வரைபடம் ஒன்றின் அடிப்படையில் தனேஸ் குமாரின் கருத்துக்களை கேட்டறியாமலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த கரைவலைப்பாடு தென்னிலங்கை மீனவருக்கு வழங்கப்படவுள்ளது என்று தனேஸ் குமாரை வெளியேறுமாறும் தீர்ப்பைக்கூறிவிட்டு சென்றிருக்கின்றார்.
இது குறித்து அடக்கமுடியாத உணர்வுகளை முல்லை நாயாறைச்சேர்ந்த தமிழ் மீனவர்கள் என்னிடம் கொட்டினார்கள். எங்கள் ஊரில் எங்களுக்கே அனுமதி மறுக்கப்படுகிறது என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத செயல் என்று தெரிவித்தேன். இச்சிக்கலில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை அனைத்து நான் இணைந்திருப்பேன் என்று கூறினேன்.
இவ்விடயங்களை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் உறுதியளித்தேன். என்றார்.