வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்யும் படி கோரி வடக்கு மாகாண சபையினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பப்படுள்ளதாக அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரை அந்த மாவட்டத்திற்கு வெளியே இடமாற்றம் செய்யுமாறு வவுனியா மாவட்டத்தை சேர்ந்த வடக்கு மாகாண சபையின் ஐந்து உறுப்பினர்களும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு தங்களுக்கு அனுப்பிவைத்த கடிதத்தின் பிரதி கடந்த மார்ச் 17 ஆம் திகதி வடக்கு அமர்வில் சமர்ப்பித்தனர்.
இதன்போது வவுனியா மாவட்ட அரசஅதிபரை இடமாற்றம் செய்வதற்கு சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முன்மொழிவு சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பொருத்தமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சகல உறுப்பினர்களும் கடந்த 9 ஆம் திகதி வடக்கு அவையின் அமர்வு ஆரம்பித்தவுடன் சபா மண்டபத்தின் நடுவே வந்து தங்களுடைய ஆட்சேபத்தை வெளிப்படுத்தினர்.
குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துடனும் தொடர்பு கொண்டு பொருத்தமான நடவடிக்கை எம்மால் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து தமது ஆசனங்களுக்கு திரும்பினர்.
எனவே வவுனியா மாவட்ட அரச அதிபரின் செயற்பாடு சிறப்புரிமை மீறல் மற்றும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை அவமதித்த செயலாகும்.
இதில் இன ரீதியான கோணம் எதுவுமில்லை.ஏனெனில் ஆட்சேபனை தெரிவித்தவர்கள் யாவரும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள இனங்களைச் சேர்ந்தவர்கள்.
ஆகையால் வவுனியா மாவட்ட அரச அதிபரை கூடிய விரைவில் அந்த மாவட்டத்திற்கு வேளியே இடமாற்றம் செய்யுமாறும் ஜனாதிபதிக்கு விடுத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.