20ஐ விடவும் கலைப்பதே நல்லது

போகிற போக்கைப் பார்த்தால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுத்தான் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கும் என்று தோன்றுகிறது.

ஜனாதிபதி முன்னாள் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ.ல.சு.க.வின் கீழோ அல்லது ஸ்ரீ.ல.சு.க. உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழோ பொதுத் தேர்தலில் போட்டியிட மைத்திரிபால சிறிசேன சந்தர்ப்பம் வழங்க மறுத்ததை அடுத்தே இந்த நிலைமை உருவாகியிருக்கிறது.

இது ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகமான நிலைமை என்பதில் சந்தேகமே இல்லை. அதேவேளை, நாட்டில் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை விரும்புவோரும் சிறுபான்மையினரும் தற்போதைய நிலையில் அதனை விரும்புவார்கள். இதற்கு முன்னர் எந்தவொரு ஜனாதிபதியும் பதவியிலிருந்து விலகிய பின் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வர ஆசைப்படவில்லை.

பதவியில் இருக்கும் போதே விடுதலைப் புலிகளால் ரணசிங்க பிரேமதாஸ கொல்லப்பட்டதோடு, ஜே.ஆர். ஜயவர்தன, டி.பி. விஜேதுங்க மற்றும் சந்திரிகா குமாரதுங்க போன்ற ஏனைய முன்னாள் ஜனாதிபதிகள் பதவியை விட்டு விலகியதன் பின்னர் அரசியல் பதவிகளை நாடவில்லை.

ஆனால், மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகும் ஆசை அல்லது தேவை மஹிந்தவுக்கு ஏற்பட்டுள்ளது. நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்த ஒருவர், மற்றொரு நிறைவேற்று ஜனாதிபதியின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினராவதில் தன்மானப் பிரச்சினை யொன்று இருந்த போதிலும் மஹிந்த அதனை பொருட்படுத்துவதாக தெரியவில்லை.

அவர் தாமாக மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வரும் விருப்பத்தை பகிரங்கமாக தெரிவிக்காத போதிலும் அதற்கான அவரது ஆதரவாளர்களின் போராட்டத்தை அவர் ஊக்குவித்தே வருகிறார். அதுவே ஸ்ரீ.ல. சு.க பிளவுபடும் அபாயத்தை தோற்றுவித்துள்ளது.

ஸ்ரீ.ல.சு.க.வின் ஆதரவாளர்களில் பெரும்பாலானவர்கள் ஜனாதிபதி மைத்திரி பாலவைவிட மஹிந்தவையே விரும்புகிறார்கள் என்பதே உண்மை.அவர்கள் கடந்த ஜனவரி 8 ஆம் திகதி வரை மஹிந்தவை ஆதரித்தார்கள் என்பதைவிட அவரை வணங்கிக் கொண்டே இருந்தார்கள். எனவே, அவர்கள் மீண்டும் மஹிந்த பதவிக்கு வருவதை விரும்பாமல் இருக்க காரணம் இல்லை.

மஹிந்தவுக்கு எதிராகவும் அவரது குடும்பத்தினருக்கு எதிராகவும் அவரது ஆட்சிக்கு எதிராகவும் பாரதூரமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்ற போதிலும் அது அந்த ஆதரவாளர்களுக்கு ஒரு பிரச்சினையாக தெரியவில்லை. எந்தக் கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்களும் தமது கட்சித் தலைவர்கள் என்ன ஊழலில் ஈடுபட்டாலும் அவர்களையே ஆதரிப்பார்கள்.

இந்த நிலைமை 2005 ஆம் ஆண்டு, மஹிந்த பதவிக்கு வரும்போதும் நிலவியது. அப்போதும் ஸ்ரீ.ல.சு.க., சந்திரிகா அணி, மஹிந்த அணி என்று இரண்டாக பிளவுபட்டுத்தான் இருந்தது. அப்போதும் ஸ்ரீ.ல.சு.க ஆதரவாளர்களில் பொரும்பாலானவர்கள் புதியவரை (மஹிந்தவை) விட பதவியில் இருக்கும் பழையவரையே (சந்திரிகாவையே) விரும்பினர்.

ஆனால், இரண்டு முறைக்கு மேல் பதவியில் இருக்க முடியாததனால் சந்திரிகா பதவியிலிருந்து விலகி மஹிந்த, கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் குதித்தபோது முழுக் கட்சியும் மஹிந்தவின் பின்னால் அணி திரண்டது.

இம் முறையும் ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ஒதுங்கியிருந்தால் முழுக் கட்சியும் மைத்திரியின் பின் அணி திரண்டிருக்கும். அல்லது தேர்தலில் தோல்வியடைந்த பின்னராவது மஹிந்த ஒதுங்கிக் கொண்டிருந்தால் கட்சி ஐக்கியப்பட்டிருக்கும். ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் மஹிந்த குதிக்க முற்படும் நிலையில் கட்சி பிளவுபட்டுள்ளது.

மஹிந்த மீண்டும் அரசியலில் குதிக்க மூன்று காரணங்கள் இருக்கின்றன. முதலாவது அவரை விட்டகலாத பதவி ஆசை.

இரண்டாவது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள். அந்த குற்றச் சாட்டுக்களை எதிர்நோக்க அரசியல்வாதிகளுக்கு கிடைக்கும் சிறப்புரிமைகளை பயன்படுத்த அவர் நினைக்கிறார்.

மூன்றாவதாக தனியே போட்டியிட்டால் கபளீகரமாகிவிடும் நிலையில் உள்ள நான்கு சிறு கட்சிகள், மஹிந்தவின் கழுத்தில் தொற்றி சில ஆசனங்களையாவது பெற்றுக் கொள்ளலாம் என்ற நோக்கில் \'மஹிந்த வேண்டும்’ என்று நடத்திய கோஷத்தால் மஹிந்த கவரப்பட்டுள்ளார்.

அந்த நான்கு கட்சிகளின் தலைவர்களையும் ஜனாதிபதி மைத்திரிபால நன்றாக கவனித்திருந்தால் அல்லது அந்தக் கட்சிகளுக்கும் தனியாக போட்டியிட்டு சில ஆசனங்களையாவது பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருந்திருந்தால், அவர்களும் இவ்வாறு மஹிந்த வேண்டும் என்று கோஷமெழுப்பிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

அதேவேளை, இரண்டு முறைக்கு மேல் ஒருவர் ஜனாதிபதி பதவியை வகிக்க முடியாது என்ற சட்டம் 19 ஆவது அரசிய லமைப்புத் திருத்தத்தின் மூலம் மீண்டும் கொண்டு வரப்பட்டிருக்கின்ற போதிலும் பிரதமராக பதவிக்கு வந்து குறுக்கு வழியில் மீண்டும் ஜனாதிபதியாகலாம் என்ற எண்ணமும் மஹிந்தவிடம் இருக்கலாம்.

\'சிலர் பலட் மூலமாக செய்து கொள்ள முடியாமல் போனதை புலட் மூலமாக செய்து கொள்ள முயற்சிக்கிறார்கள்’ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதைத்தான் அண்மையில் குறிப்பிட்டாரோ என்ற சந்தேகமும் எழுகிறது.

இறுதியில், இதுபோன்ற பல காரணங்களால் தூண்டப்பட்டு மஹிந்த மீண்டும் களமிறங்கியதன் நேரடி விளைவாக ஏற்பட்டுள்ள இப் பிளவை சரிசெய்வதாக இருந்தால் ஒன்றில் மஹிந்த அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும்.

அல்லது மைத்திரிபால, ஸ்ரீ.ல.சு.க. யாப்பை மாற்றி அக் கட்சித் தலைமை பதவியிலிருந்து விலகி மஹிந்தவின் தலைமையில் அக் கட்சி இயங்க இடமளிக்க வேண்டும். அதுவும் இல்லாவிட்டால் கடந்த அரசாங்கத்துக்கு எதிரான சகல ஊழல் குற்றச்சாட்டுகளையும் அரசாங்கம் வாபஸ் பெறும் வகையில் மைத்திரிபால மஹிந்தவுடன் ஓர் இணக்கத்துக்கு வர வேண்டும். இவற்றில் எதுவும் நடக்கப் போவதில்லை. எனவே ஸ்ரீ.ல.சு.க பெரும் நெருக்கடியை எதிர் நோக்கப் போகிறது என்பது தெளிவாகிறது.

கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால, ஸ்ரீ.ல.சு.க.வின் மாவட்ட அமைப்பாளர்களின் கூட்டமொன்றை கூட்டியபோதே இந்த நிலைமை உறுதியாகியது. அந்தக் கூட்டத்தின் போது சிலர், மஹிந்தவுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்க வேண்டும் என்றும் ஸ்ரீ.ல.சு.க. வெற்றிபெறும் பட்சத்தில் அவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

அப்போது மஹிந்த, ஏற்கனவே எம்.பியாக, எதிர்க்கட்சித் தலைவராக, பிரதமராக இருந்து இரண்டு முறை ஜனாதிபதியாகவும் இருந்துள்ளதாலும் அவருடன் கடமையாற்ற முடியாததனாலும் தாம் அதற்கு சம்மதிக்க முடியாது என ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

தமக்கு மஹிந்தவுடன் கடமையாற்றுவது கடினமாகும் என ஜனாதிபதி கூறிய கருத்து உண்மையே. மஹிந்த அரசியலில் ஒரு பலவீனமான நபர் அல்ல.

அதன் காரணமாகவும் அவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான தற்போதைய பகை உறவின் காரணமாகவும் மஹிந்த பிரதமரானால் ஜனாதிபதி பெரும் கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

மஹிந்தவும் உட்பட இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகள் தமக்கு கட்டுப்பட்டு, பணிந்து நடக்கக்கூடியவர்களையே பிரதமர்களாக நியமித்தனர்.

ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தனவும் டி.பி. விஜேதுங்கவும் மட்டுமே விதிவிலக்காக நடந்து கொண்டனர். நடந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர். இவ்வாறு பிரதமராகும் மஹிந்தவின் கனவை ஜனாதிபதி பாழாக்கியதை அடுத்து, மஹிந்த வேறு வழியைப் பார்த்துக் கொள்வதே ஒரே தீர்வாக உள்ளது.

மஹிந்த வேண்டும் என்று கூக்குரலிட்ட தினேஷ் குணவர்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணியும் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியும் வாசு தேவ நாணயக்காரவின் ஜனநாயக இடதுசாரி முன்னணியும் உதய கம்மன் பிலவின் பிவிதுரு ஹெல உறுமயவும் ஜனாதிபதியின் முடிவையிட்டு மகிழ்ச்சியடைந்து இருக்கவும் கூடும்.

ஏனெனில், மஹிந்தவுக்கு, ஐ.ம.சு. கூட்டமைப்பின் கீழ் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தாலும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லை.இப்போது மஹிந்த அவர்களது கட்சிகளில் ஒன்றின் கீழ் போட்டியிடக்கூடும்.
அதேவேளை, மஹிந்தவுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி ஸ்ரீ.ல.சு.க. வாக்குகளையும் அவர்கள் தம்பக்கம் இழுக்கவும் முடியும்.

எனவே, தனியாக போட்டியிட்டு பிரதேச சபை ஆசனமொன்றையாவது பெற முடியாத சில கட்சிகளுக்கு இப்போது மஹிந்தவின் பெயரால் ஒருசில நாடாளுமன்ற ஆசனங்களை பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஸ்ரீ.ல.சு.க. பிளவுபடுகிறது என்பது மற்றுமொரு விதத்திலும் தெரிகிறது. அக்கட்சியினர், ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு கட்டுப்படாத நிலைமை நாளுக்கு நாள் அதிகரிப்பதன் மூலம் அதுவே தெளிவாகிறது.

நான்கு அமைச்சர்கள் பதவிகளை துறந்து மஹிந்தவை நேரடியாகவே பாராட்டுதல் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை (07.06.2015)  நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை சபாநாயகரிடம் கையளித்தமை ஆகியன ஸ்ரீ.ல.சு.க.வுக் குள் மைத்திரியின் பிடி தளர்வதையே காட்டுகிறது.

அதேவேளை, ஜனாதிபதிக்கும் அவரது கட்சியான ஸ்ரீ.ல.சு.க.வின் முக்கியஸ்தர்களில் நம்பிக்கையான எவரும் இல்லை போல்தான் தெரிகிறது.

அவருக்கு தமது கட்சியில் நம்பிக்கையான ஒருவராவது இருந்தால் அவர் அரசியலமைப்புப் பேரவைக்கு தமது பிரதிநிதியாக ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவை நியமிக்கத் தேவையில்லை. இந்த நியமனம் நிச்சயமாக சிறுபான்மை மக்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்திருக்கும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila