வலி.வடக்கு விடயம்; இராணுவத்தின் செயற்பாடுகளால் ஏமாற்றம்


news
மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மூடப்பட்ட பாதைகளை விடுவிக்க மற்றும்  எஞ்சிய காணிகளை விடுவித்தல் தெடர்பான விடயங்களில் இராணுவத்தினர் விடாப்பிடியான நிலைப்பாடு ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
பாதுகாப்பு அமைச்சின்  செயலாளர்  பஸ்நாயக்க நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம்  மேற்கொண்டிருந்தார். பலாலி விமான நிலையத்தில் வந்தடைந்த குழுவினரை யாழ். மாவட்ட இராணுவத்தளபதி வரவேற்றார்.
 
இதன்பின்னர் முப்படைத்தளபதிகள் ,  பாதுகாப்பு அமைச்சின்  செயலாளர் அடங்கிய குழுவினர் வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் சில இடங்களை நேரில் சென்று பார்வையிட்டனர்.
 
விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மூடப்பட்டுள்ள பாதைகளுக்கு அருகில் விசேடமாக அமைக்கப்பட்ட பந்தல்களில் கலந்துரையாடல்களிலும்  ஈடுபட்டனர். 
 
இதன்பின்னர் 3 மணியளவில் முக்கிய உயர்மட்ட கூட்டம் பலாலி இராணுவத்தலைமையகத்தில் ஆரம்பமானது. இதில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் , மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் திருமதி  ரஞ்சினி நடராஜபிள்ளை , அரச அதிபர் ,  பிரதேச செயலாளர்கள் எனப் பலரும் கலந்து  கொண்டனர்.
 
இக் கூட்டத்தில் மீள்குடியேற்ற அமைச்சின்  செயலாளர் விடுவிக்க வேண்டிய பாடசாலைகள்,  வீதிகள் மற்றும்  காணிகள் குறித்தும்  கோரிக்கை விடுத்தார். வல்லை அராலி விதியில் சுமார் 2கி.மீ இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். என்று விடுவிக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் இராணுவ தளபதியை பதில் வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோரினார். 
 
இதன்போது .இராணுவத்தளபதி  விமான நிலையத்தை குறித்த வீதி  ஊடறுப்பதன் காரணமாக விடுவிக்க முடியாது என்று பதிலளித்தார். 
 
இதன் போது மீள்குடியேற்ற அமைச்சின்  செயலாளர் மாற்றுப் பாதை தொடர்பில் கேட்டபோதும் அதற்கும்  இராணுவத்தளபதி  இணங்கவில்லை. இதேபோன்று தொண்டமனாறு, பலாலி,  காங்கேசன்துறை , கீரிமலை வரையிலான கடலோரப்பாதைகளை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்ட போதும்  அதற்கும்  இராணுவத்தளபதி  சம்மதிக்கவில்லை. 
 
அந்தபாதையை ஏன்  விடுவிக்க வேண்டும் என இராணுவத்தளபதி கேள்வி எழுப்பிய போது போக்குவரத்திற்கான அவசியம் , நேரவிரையம் என்பன தொடர்பில் சுட்டிக்காட்டிய போதும்  அதனை இராணுவ தளபதி  கருத்தில் எடுக்கவில்லை.  
 
வளலாயில் எஞ்சிய பகுதிகள் குறித்து கேள்வி எழுப்பியபோது விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் குடியமரவில்லை. மேலும்  காணிகள் ஏன் விடுவிக்கப்பட வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
 
மயிலிட்டிதுறைமுகத்தை மக்கள் பாவனைக்கு விடுவிப்பது தொடர்பில் விடுவிக்கப்பட்ட கோரிக்கைக்கு துறைமுகம்  சுனாமியால் பாதிப்படைந்துள்ளது. அதனால் புதிய துறைமுகம்  நிர்மானிக்கலாம் என்றும்  இராணுவத்தளபதி பதில் வழங்கியுள்ளார்.  
 
 
பலாலியில் இடம்பெற்ற நேற்றைய கூட்டத்தில் புதிய காணிகளை விடுவிப்பது சம்பந்தமான எந்த அறிவித்தலும் வெளியிடப்படவில்லை. 
 
எனவே நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் இராணுவ தரப்பினது பதில்கள் ஏமாற்றமாகவே இருந்தது என அரச அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.  
 
இதேவேளை, தேர்தல் காலத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறுவதால் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என்றும்  பலாலி இராணுவ தலைமையகத்தின்  ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் மல்லவராட்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila