விதுரன் வில் உடைத்தது சரியா? வீஷ்மர் போர் தொடுத்தது சரியா?


பாரதப்போர் தொடங்குவதற்கு முன்னதாக அரச சபையில் பெரும் வாக்குவாதம் நடைபெறுகின்றது. கெளரவர் தலைவன் துரியோதனனின் அட்டகாசத்தைத் தாங்க முடியவில்லை.

பாண்டவர்களை எதிர்ப்பதே தனது பணி என்று அவன் கருதியதால் வீஷ்மர், துரோணர், விதுரன் முதலான மூத்த தலைவர்களை அவன் கடிந்து கொண்டான்.

கெளரவர்-பாண்டவர் போர் நடப்பது உறுதி என்றாகி விட்ட நிலையில், துரியோதனனின் மன நிலையும் குழம்பியிருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் விதுரனைப் பார்த்து தகாத வார்த்தையால் துரியோதனன் திட்டுகிறான். இச் சந்தர்ப்பத்தில் விதுரன் தனது வில்லை எடுத்து சபையில் முறித்துவிட்டு இனி மேல் வில்லெடேன் என்று சத்தியம் செய்கிறான்.

வில்லுக்கு விதுரன் என்ற புகழை முடிவுறுத்தும் வகையில் தனது வில்லை விதுரன் உடைத்ததால் சபை அதிர்ந்தது. என்ன நடக்குமோ? எது நடக்குமோ? என்று பெரியவர்கள் ஏங்கினர். விதுரன் வில்லுடைத்ததால் கெளரவ சேனைக்குத் தோல்வி என்ற விமர்சனங்களும் எழுந்தன.

ஒரு நல்ல வீரனை துரியோதனன் இழந்தான் என்பதுடன், விதுரநீதி என்று போற்றும் அளவில் விதுரனின் செயல் இந்நாள்வரை உயர்வாகப் போற்றப்படவும் வாய்ப்பாகியது.

இது ஒருபுறம் இருக்க, பிதாமகர் என்ற வீஷ்மர் கெளரவ சேனைக்குத் தளபதியாக இருந்து பாண்டவர்களுடன் போர் தொடுத்தவர். அதே சமயம் பாண்டவர்கள் வெல்ல வேண்டும் என்று ஆசியும் வழங்கியவர். துரியோதனன் தரப்பில் தளபதியாக இருந்து கொண்டு, பாண்டவர்கள் வெல்ல வேண்டும் என வீஷ்மர் ஆசி வழங்கியது சரியா? என்ற கேள்வி எழுவதிலும் நியாயம் இருக்கவே செய்கிறது.

ஆக, மன்னர் சபையில் வில்லுடைத்த விதுரன் செய்தது சரியா? அல்லது கெளரவர் சேனையின் தலைமைத் தளபதியாக இருந்து கொண்டு பாண்டு புதல்வர்களே போரில் நீங்கள் வெல்லக்கடவீர்கள் என்று திருவாய் மலர்ந்து ஆசீர்வதித்த பிதாமகர் வீஷ்மர் செய்தது சரியா? என்பதே இப்போதைய கேள்வி.

இந்தக் கேள்வியை நாம் கூறும்போது, இது இப்போது எதற்கானது என்ற முணுமுணுப்பு உங்க ளிடம் எழுவதிலும் நியாயம் உண்டு. எல்லாம் பொதுத் தேர்தலை மையமாக வைத்துத்தான் இந்தக் கேள்வி என்பதை வெளிப்படையாகக் கூறித்தானாக வேண்டும்.

அட, இதைச் சொல்லும் போது தேர்தல் தெற்கையா, வடக்கையா குறிக்கும் என்றால் இரண்டும் என்று தான் சொல்ல வேண்டும். எதுவாயினும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் விதுரர்களும் வீஷ்மர்களும் இருக்கவே செய்வார்கள்.

நாம் என்ன செய்வது? அடுத்துவரும் ஒரு வருடத்திற்கு துரியோதனனின் நிபந்தனையை நிறைவேற்றிய பாண்டவர்கள் போல நாமும் அஞ்ஞாத வாசம் சென்றால் என்ன? அது ஒன்றுதான் தலையிடியைத் தவிர்க்கும் போல் தெரிகிறது.

ஆம், நடைபெறப் போகும் பொதுத் தேர்தல் சாதாரணமானதல்ல. அதை எவரும் சாதாரணமாகவும் நினைத்துவிடக் கூடாது. பல கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் களத்தில் இறங்கி கண்டபாட்டில் பிரசாரம் செய்யும். இந்தப் பிரசாரப் பீரங்கித் தாக்குதலில் தன்மானத்தைக் காக்கவைப்பதில் வேட்பாளர்கள் கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும்.   
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila