யாழ்ப்பாணத்திற்கு கடந்த ஒன்பதாம் திகதி விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மூன்று முக்கியமான நிகழ்வுகளில் பங்கு கொண்டிருந்தார். இவற்றுள் யாழ். சுப்பிரமணியம் பூங்காவில் நடைபெற்ற போதை ஒழிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு ஜனாதிபதி ஆற்றிய உரை யாழ் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக மதுப்பாவனையில் யாழப்பாண மாவட்டம் முதன்மை இடம் வகிப்பதையும், போதைப்பொருள் கடத்தும் விநியோக மார்க்கமாக யாழ். குடாநாட்டை கடத்தல்காரர்கள் பயன்படுத்தி வருவதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஜனாதிபதியின் உரையில் யாழப்பாணத்தின் சமகால நிலைமையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியிருந்தார். யாழ்ப்பாணம் தொடர்பான பெருமைகளை ஒருபக்கமாக வைத்துவிட்டு தற்போதைய யாழப்பாணத்தின் யதார்த்தத்தை பார்க்கும்போது அதிர்ச்சியும், ஏமாற்றமுமே மிஞ்சுகின்றது.
பாலியல் வன்முறைகளுக்கு பிணை வழங்கப்படாது என்றும், கொலைகளுக்கு மரண தண்டனை என்றும், தாக்குதல் குற்றங்களுக்கு பிணை வழங்கப்படாது என்றும் பல்வேறு எச்சரிக்கைகளை நீதித்துறை நேரடியாகவே விடுத்தபோதும், யாழப்பாணத்தில் குற்றங்கள் முடிவுக்கு வரவில்லை.
வாள் வெட்டுக் குழுக்களையும், போதைவஸ்த்துக் கடத்தல் குழுக்களையும் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரும் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றபோதும் இவற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இப்போதும் வாள் வெட்டுக்குழுக்களின் அச்சுறுத்தல்களும், தாக்குதல் சம்பவங்களும் நடைபெறவே செய்கின்றன. கணவனை இழந்து வாழ்ந்து கொண்டிருக்கும் கைம்பெண்களுக்கு தொல்லைகள் தொடர்கின்றன. மோட்டார் சைக்கிள்களில் குழுக்களாக ஊருக்குள் தெருச்சண்டியர்கள் இப்போதும் சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.
இதற்கிடையே அழிவு யுத்தத்திற்கு முகம்கொடுத்து மீண்ட மக்களின் வறுமையையும், அறியாமையையும் தமக்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும் சில சக்திகள் வடக்கு நோக்கி வருகை தருகின்றார்கள் – எங்கள் சமூகத்தை இஸ்டத்திற்கு வேட்டையாடுகின்றார்கள் என்ற செய்திகள் அதிர வைக்கின்றன.
கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் தையல் நிறுவனங்களும், தொழிற்சாலைகளும், ஒரு காலத்தில் மலையகப் பகுதிக்குச் சென்றே வேலைக்கு பெண்களையும், ஆண்களையும் அழைத்துச் செல்வார்கள். இப்போது வேலைக்கு ஆள் திரட்டுவதற்காக கிளிநொச்சிக்கும், யாழ். குடா நாட்டுக்குமே வருகின்றார்கள்.
கொழும்புக்கு வேலைக்காக அழைத்துச் செல்லப்படும் யுவதிகளின் பாதுகாப்பும், பழக்க வழங்கங்களும் தலைகீழாக மாறிவிடுகின்றது. அண்iமையில் புங்குடுதீவில் நடந்த அதிர்ச்சியூட்டிய சம்பவம் வெளியில் தெரியாமலே மறைக்கப்பட்டது. ஆடைகளை தைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் நிறுவனம் ஒன்று புங்குடுதீவுக்கு வருகை தந்து யுவதிகளை வேலைவாய்ப்புத் தருவதாகக் கூறி அழைத்துச் சென்றிருக்கின்றார்கள்.
கொழும்புக்குச் சென்ற யுவதிகளை ஒரு தங்குமிடத்தில் தங்க வைத்திருக்கின்றார்கள். அங்கேயே உணவும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அங்கிருந்து தையல் மற்றும் மடித்தல் வேலைகளுக்காக இந்த யுவதிகளை வாகனத்தில் அழைத்துச் சென்றிருக்கின்றார்கள்.
இந்த வழமைக்கு நடுவே அந்த தொழிற்சாலையில் இந்த பணிப்பெண்களை மேற்பார்வை செய்யும் ஆண் பணியாளர்கள் பல்வேறு தொந்தரவுகளை யுவதிகளுக்கு கொடுக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். அந்தத் தொந்தரவுகளை ஏற்றுக்கொள்ளும் பெண்களுக்கு பியர் குடிபானத்தை வழங்கியும், வேறு போதைப் பொருட்களை வழங்கியும் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் சம்பவங்களும் நடந்திருக்கின்றது.
மாதத்துக்கு ஒரு தடவை குறித்த யுவதிகள் தமது வீடுகளுக்கு விடுமுறையில் வருவார்கள் என்று கூறப்பட்டபோதும் சில மாதங்களாகியும் தமது பிள்ளைகள் வீட்டுக்கு வராததால் பெற்றோர் தேடிப் போயிருக்கின்றார்கள். பெற்றோருடன் வீட்டுக்கு வருவதற்கு அந்த யுவதிகள் மறுத்திருக்கின்றார்கள். நிலைமையை உணர்ந்து கொண்ட இரண்டு பெற்றோர் மிகவும் சிரமப்பட்டு தமது பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து வந்திருக்கின்றார்கள்.
வீட்டுக்கு வருகை தந்திருந்த அந்த யுவதிகள் தினமும் தமக்கு பியர் குடிக்க வேண்டும் என்று அடம்பிடித்திருக்கின்றார்கள். சிகரட் பிடிப்பதை மிகச்சாதாரணமாக செய்திருக்கின்றார்கள். அவர்களிடம் இது தொடர்பாக யாரேனும் கேட்டால் இதெல்லாம் அங்கு சாதாரணமான விடயங்கள். நீங்கள் ஏன் பெரிதுபடுத்துகின்றீர்கள் என்று கேட்டிருக்கின்றார்கள்.
இது தவிரவும் பல யுவதிகள் பாலியல் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்தபடி அழைத்துச் செல்லப்பட்ட நிறுவனங்களிலேயே வேலை செய்து வருவதாகவும் அந்த யுவதிகள் தெரிவித்திருக்கின்றார்கள். இவ்வாறான சமூகப் பிரச்சினை ஒன்று தமிழர் கலாசாரத்தையும், பண்பாட்டையும் சிதைத்துக் கொண்டிருக்கின்றது என்பதை எந்தவொரு தமிழ் அரசியல் தலைமையும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
இந்த புங்குடுதீவுச் சம்பவம் தந்த அதிர்ச்சியை விடவும் இன்னொரு அதிர்ச்சியை தருகின்ற தகவல்களும் தற்போது கிடைக்கப் பெறுகின்றது. அதாவது கொழும்பிலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இருக்கின்ற உடல் பிடித்துவிடும் மசாஜ் நிலையங்களுக்கும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து யுவதிகளை ஆசை வார்த்தைகள் கூறி மோசடிக்காரர்கள் அழைத்துச் செல்வதாகவும் தெரியவருகின்றது.
இவற்றையெல்லாம் பகிரங்கமாக பேசுவதும், விவாதிப்பதும் தமிழருக்கு அவமானம் என்றும், கலாசார சீரழிவு என்றும் மறைக்கும் வினோதமான நடைமுறையை யாழ்.குடா நாட்டில் காணமுடிகின்றது. இவ்வாறான செயற்பாடால் பாதிக்கப்படுகின்றவர்களின் குரல்வளை நெரிக்கப்படுகின்றது. அவர்களுக்கு நியாயம் மறுக்கப்படுகின்றது. குற்றவாளிகள் தப்பித்துவிடுகின்றார்கள்.
இவ்வியடங்களை பகிரங்கமாக பேசுகின்றபோதே அதுமாதிரியான ஆபத்திலிருந்து எஞ்சிய பெண்பிள்ளைகளைப் பாதுகாக்க முடியும். பெற்றோருக்கு விழிப்புனர்வை ஏற்படுத்த முடியும், குற்றவாளிகளுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்த முடியும். நாம் சார்ந்த சமூகத்தை காப்பற்ற முடியும் என்பதை சங்கடங்களைக் கடந்தும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
புலம்பெயர் தேசங்களில் கிராமங்களின் பெயரால் சங்கம் அமைத்து கோடை காலங்களில் விழா எடுத்து ஊர் பெருமை பேசுகின்றவர்கள் அனைவரும், நாட்டின் – ஊர்களின் தற்போதைய நிலைவரங்களை சிரத்தையுடன் ஆராய்ந்து உறவுகளை பாதுகாக்க நடைமுறை ரீதியில் சிந்திக்க வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
– ஈழத்துக் கதிரவன்.