
சிங்கள தேசத்தைக் கட்டியெழுப்புவதாக வாக்குறுதி அளித்து, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 61 சிங்கள, பௌத்த பேரினவாத அமைப்புகளுடன் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.
கொழும்பு விகாரமாதேவி உள்ளக அரங்கில் நேற்று இந்த உடன்பாடு கையெழுத்திடும் நிகழ்வு இடம்பெற்றது.61 சிங்கள, பௌத்த அமைப்புக்கள் இணைந்து 5 விடயங்களை வலியுறுத்தும் வகையில், தேசிய உடன்பாடு என்ற இந்த புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளது.
இந்த உடன்பாட்டில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
அனைத்துலகப் புலனாய்வுப் பிரிவுகளின் சதித்திட்டத்திற்கு அமைய புதிய ஈழத்திற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்காக நாட்டுக்குள் அரபு வசந்தத்தை ஏற்படுத்தி இரத்தம் சிந்தாமல்- தேர்தல் மூலம் மகிந்த ராஜபக்சவை தோல்வி அடையச் செய்தனர். எனினும் இம்முறை பிரிவினைவாதத்திற்கு சார்பான ஆட்சி உருவாவதை தோல்வியடையச் செய்ய வேண்டும்.
சமஷ்டி முறையில் காணி, காவல்துறை அதிகாரங்களை நடைமுறைப்படுத்தவும் வடக்கு – கிழக்கு இணைக்கவும் முயற்சிக்கும் வேளையில், மோதல்களை ஏற்படுத்தி மக்களை வீதியில் இறக்கி அனைத்தலக தலையீட்டை உருவாக்கி அதன் ஊடாக நாட்டை இரண்டாகப் பிரிக்கும் ஈழத் திட்டமும் முன்னெடுக்கப்படுகிறது. அதற்கு மேலதிகமாக அனைத்துலக அடிப்படைவாத மத, யுத்தக் குழுக்களை நாட்டுக்குள் ஊடுருவச் செய்து தேச எல்லைகள், மூலம் இனங்களிடையே மோதல்களை ஏற்படுத்தி நாட்டை சுடுகாடாக்கும் முயற்சி முன்னெடுக்கப்படவுள்ளது. இதனை தோல்வியடையச் செய்வோம்.
அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு, உள்ளக விசாரணை முத்திரைகுத்தி முன்னெடுக்கப்படவுள்ள முயற்சியை தோல்வியடையச் செய்வோம்.19ஆவது திருத்தம் மீள்திருத்தம் செய்யப்பட வேண்டும். 13ஆவது திருத்தத்தில் பலாத்காரமாக ஏற்படுத்தப்பட்ட பிரிவினைவாத பிரிவுகளை நீக்க வேண்டும்.
மற்றும் ஹலால் விரோத மோதல் உட்பட அளுத்கம வன்முறைகள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி அதன் பின்னணியிலுள்ள சதித்திட்டத்தை பகிரங்கப்படுத்த வேண்டும். குற்றம்செய்தவர்கள் தண்டிக்கப்பட்டு தேசிய ஒற்றுமை பாதுகாக்கப்படவேண்டும்.
ஆகிய ஐந்து விடயங்களை வலியுறுத்தும் உடன்பாடே நேற்று கையெழுத்திடப்பட்டுள்ளது.இதில் பல்வேறு பௌத்த பிக்குகள், சிங்கள அடிப்படைவாத அமைப்புகளின் தலைவர்கள், அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.