
இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி அங்கு மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் நடந்து இருப்பதை உறுதி செய்தது.
இதையடுத்து ஜெனீவாவில் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 30–வது கூட்டத்தில் மனித உரிமை ஆணையர் 19 பக்க அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் பற்றி இலங்கை அரசு சர்வதேச நாடுகளின் நீதிபதிகளைக் கொண்ட சர்வதேச கலப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தது.ஆனால் இலங்கை அரசு உள்நாட்டு விசாரணைதான் நடத்துவோம், இதில் சர்வதேச நீதிபதிகள் மற்றும் சட்ட வல்லுனர்களின் யோசனைகளை ஏற்றுக் கொள்வோம் என்றும் கூறி வருகிறது.
மேலும் ஜனவரி மாதம் உள்நாட்டு விசாரணையை தொடங்கப் போவதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு விசாரணை நடத்தினால் அது இலங்கை அரசுக்கு சாதகமாக இருக்கும். தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்று கூறி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டசபை தீர்மானத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதமும் எழுதினார்.இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா முதலாவதுவரைவு தீர்மானம் தாக்கல் செய்தது. அதில் இலங்கை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு இருந்தன.
இதற்கு இலங்கை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள் குழுவினருடன் இலங்கை குழுவினர் தொடர்ச்சியாக விவாதங்கள் நடத்தினர்.
இதையடுத்து இறுதியாக திருத்தப்பட்ட வரைவு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா இன்று தாக்கல் செய்தது. அதில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் பரிந்துரைத்த சர்வதேச நீதிமன்றம் பற்றி எதுவும் குறிப்பிடப்பட வில்லை.
போர்க்குற்ற புகார்களை இலங்கையின் நீதித்துறை அமைப்பே விசாரிக்கலாம் என்றும் காமன்வெல்த் நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளும், வக்கீல்களும், விசாரணை அதிகாரிகளும் இந்த விசாரணை அமைப்பில் இடம் பெறலாம் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகளை நிலை நாட்டுபவர்கள், சிறு பான்மையினர், வழிபாட்டு தலங்கள் ஆகியோர் மீது தாக்குதல் நடத்திய தனி நபர்கள் குறித்தும், குழுக்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த புதிய வரைவுத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு மேலும் திருத்தங்கள் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.அதன் பிறகு இறுதி தீர்மானம் வருகிற 30ம் திகதி ஐ.நா. மனிதஉரிமைகவுன் சிலில்வாக்கெடுப்பு நடைபெறும்.
அமெரிக்காவின் இந்த வரைவு தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. இதுபற்றி வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் சுவரூப் கூறியதாவது:–
இந்தியாவைப் பொறுத்தவரை நாம் எப்போதுமே இயற்கையாகவே நீதிக்கான விசாரணையை ஆதரிக்கிறோம். அந்த வகையில் இலங்கையின் இறையாண்மைக்கு மதிப்பளிக்கிறோம்.
எனவே எதிர்மறையான கருத்துக்களையும் சந்தித்து அதற்கான வழி காண வேண்டும். இறுதி வரைவு தீர்மானம் வரும்போது, அது ஏகமனதாக இலங்கை அரசால் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
இலங்கை அரசு ஒரு மித்த வகையில் ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்மானத்தை ஒவ்வொருவரும் ஏற்க கூடிய வகையில் ஏகமனதாக நிறைவேற்ற வேண்டும். இலங்கை அரசு தற்போது மனித உரிமை கமிஷன் கவுன்சிலுடன் ஒருங்கிணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் நிலையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதில் இந்தியாவின் நிலை தெளிவாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை வரவேற்பதாக இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு சட்ட வல்லுனர்கள் இடம் பெறும் விசாரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழு ஒத்துழைப்பையும் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.