2005ஆம் ஆண்டில் இலண்டன் பி.பி.சியின் உலக சேவை அமைப்பில் இருந்து ஸ்ரீபன் என்ற வெளி நாட்டவர் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலைப் போதிப்பது அவரின் பணியாக இருந்தது. முரண்பாடுகளை சீர் செய்வது என்ற விடயத்தில் ஓர் உதாரணத்தை கூறினார்.
இரண்டு குடும்பங்களின் வீட்டு எல்லையில் ஓர் ஒரேஞ் மரம். அந்த மரம் காய்க்கின்ற ஒரேஞ் பழம் யாருக்கு என்பதில் இரு வீட்டாருக்கும் பிணக்கு ஏற்பட்டது. இரு வீட்டாரும் தமக்குள் இருந்த பிணக்கை தாங்களாகவே தீர்த்துக் கொண்டனர். ஒரு குடும்பத்துக்கு ஒரேஞ் சாறு தேவைப்பட்டது. மற்றைய குடும்பத்துக்கு ஒரேஞ் தோல் தேவைப் பட்டது. இரு குடும்பங்களும் இணைந்து, ஒரேஞ் பழச்சாறை ஒரு குடும்பமும் தோலை மற்றைய குடும்பமும் எடுத்துக் கொண்டன. இதனால் அந்த முரண்பாடு நீங்கியது என்று தனது உதாரணத்தை முன்வைத்தார்.
தோல் தேவையானவர் அதனை என்ன செய்திருப்பார் என்பது பற்றி ஸ்ரீபன் எதுவும் கூறவில்லை.
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நடக்கின்ற நிகழ்வுகளைப் பார்க்கின்ற போது ஸ்ரீபன் கூறிய உதாரணம்தான் ஞாபகத்துக்கு வந்தது.
அதாவது இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை என்பது அடியோடு கைவிடப்பட்டது. பின்னர் கலப்பு நீதிமன்றம் என்ற கதை விடப்பட்டது. கலப்பு நீதிமன்றத்துக்கு இலங்கை அரசு எதிர்ப்புத் தெரிவிக்க, உடனடியாக அமெரிக்கா ஒரு பொறிமுறையை முன்வைத்தது.
அந்தப் பொறிமுறை; இலங்கை நீதிமன்றப் பொறி முறையின் கீழ் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகளின் ஒத்துழைப்புடன் விசாரணையை முன் னெடுப்பது என்பதாக இருந்தது.
அமெரிக்காவின் இந்த முன்மொழிவை இலங்கை அரசு வரவேற்று தனக்குக் கிடைத்த பெருவெற்றி என்று கூறியுள்ளது. அதேநேரம் சிங்கள ஊடகங்களும் சர்வதேச விசாரணையில் இருந்து இலங்கை தப்பித்துக் கொண்டதான செய்திகளை வெளியிட் டுள்ளன.
இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந் தப் பொறிமுறைக்கு வரவேற்புத் தெரிவித்துள்ளது.
இங்குதான் ஸ்ரீபனின் உதாரணம் பொருந்துகிறது. அதாவது அமெரிக்காவின் முன்மொழிவு தனக் குக்கிடைத்த வெற்றி என்று இலங்கை அரசு கூறும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை வர வேற்கிறது எனில், ஒரேஞ் சாறு இலங்கை அரசுக்கு; ஒரேஞ் தோல் தமிழ் மக்களுக்கு என்பதாக நிலைமை முடிந்து போகிறது.
ஆம் இலங்கை அரசு, தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு, அமெரிக்கா என்ற முக்கூட்டுச் சக்திகள் ஏற்கெனவே தீட்டிய திட்டம்தான் இது. சர்வதேச விசாரணை என்ற கோரிக்கையை வலுவிழக்கச் செய்வதற்காக இடைஇடையே சில நாடகங்கள். அந்த நாடகங்கள் அனைத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொழும்புத் தலைமை ஏலவே தெரிந் திருந்த உண்மை.
நாம் என்ன செய்ய முடியும்? ஒரேஞ் பழம் வேண்டும் என்று நடத்திய போராட்டம் இப்போது ஒரேஞ் தோல் தந்தால் போதும் என்று கூறும் அளவில் முடிந் துள்ளது. தமிழ்த் தலைமைக்கு பாலாபிஷேகமும் பஞ்சாமிர்தப் படைப்பும் நடந்தாயிற்று. ஏதோ நடப்பதைக் கண்டு கொள்வோம் அவ்வளவுதான்.