ஐ.நாவில் வெளியான அமெரிக்க திட்ட வரைவு...! எதிர்பார்ப்பில் ஏமாற்றமா.....?

(2ம் இணைப்பு)
 
இலங்கை தொடர்பிலான அமெரிக்க பிரேரணை ஜெனிவா நேரம் இன்று மாலை 5;30 மணிக்கு வெளியாகியுள்ளது.
இத் திட்ட வரைவில் எதிர்பார்த்ததை விட சில சரத்துக்கள் வித்தியாசமான முறையில் மாற்றி திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக கலப்பு நீதி மன்றம் எனக் குறிப்பிடப்பட்டிருந்த சொற்பதம் விஷேட சபை என மாற்றப்பட்டதுடன் அதனை விசாரிக்கும் நீதிபதிகள் பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இவ் வரைவு எதிர்வரும் 30ம் திகதி சபையின் விவாதிக்கப்படும்போது மேலும் ஒரு சில மாற்றங்களுக்கு உள்ளாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் போதிலும் , இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படாமல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டே நிறைவேற்றப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஜெனிவாவில் உள்ள சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும் கலப்பு நீதி மன்றம் என்னும் சொற்பதம் நீக்கப்பட்டமையானது மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜெனிவா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2ம் இணைப்பு
போர்க்குற்றம் தொடர்பில் திருத்த யோசனை அமெரிக்க சார்பு நாடுகள் முன்வைத்தன. ஹைபிரைட்டுக்கு பதில், இலங்கையின் நீதித்துறையுடன் சர்வதேச பங்களிப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பித்த யோசனையில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இன்று நகல் யோசனை ஒன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சர்வதேச சட்ட உரிமை மீறல்கள், மனித உரிமைமீறல் போன்றவற்றை விசாரணை செய்ய இலங்கையின் இறைமைக்கு உட்பட்ட பாரபட்சமற்ற இலங்கையின் நீதித்துறை பொறிமுறை உருவாக்கப்பட்டு; அதில், சுயாதீன நீதி நிறுவனங்கள் இணைக்கப்படவேண்டும்.
அத்துடன் பொதுநலவாய நாடுகள் அலுவலகம், சர்வதேச நீதிபதிகள், சர்வதேச பாதுகாப்பு சட்டத்தரணிகளும் பங்கேற்கவேண்டும் என்றும் யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்ட ஹைபிரைட் என்ற கலப்பு நீதிமன்ற அம்சம் இதில் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த யோசனைக்கு ஐக்கிய அமரிக்கா, முன்னாள் யுகோஸ்லேவியா குடியரசு, மெசிடோனியா, மொன்டிக்ரோ, பிரித்தானியா, வட அயர்லாந்து ஆகியவற்றின் அனுசரணையுடன் இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
“நல்லிணக்கத்தை மேம்படுத்தல்” இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் பொறுப்புக்கூறல்” என்ற தலைப்பின் கீழ் இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரையில் இந்த யோசனையில் திருத்தங்களை முன்வைக்கமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனையில், இலங்கையில் தனிப்பட்டவர்கள், மனித உரிமை காப்பாளர்கள், மதத்தலங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை நடத்தவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
நீதி அமைப்பில் இலங்கையில் அனைத்து மக்கள் மத்தியிலும் நம்பிக்கையை உருவாக்கும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டை வரவேற்பதாகவும் யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த யோசனையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் கண்காணித்து தமது 32வது அமர்வில் அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும்.
இதனையடுத்து 34வது அமர்வில் இது தொடர்பில் கலந்துரையாடப்படவேண்டும் என்றும் திருத்த யோசனையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பான திருத்த யோசனை- மேலதிக இணைப்பு
இலங்கையின் போர்க்குற்ற விசாரணையின்கீழ் இலங்கை அரசாங்கமும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகமும் எடுத்துக்கொண்ட உண்மையை கண்டறியும் முயற்சிகள் இந்த யோசனையில் வரவேற்க்கப்பட்டுள்ளன
இதில் இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சியும் பாராட்டப்பட்டுள்ளது. அத்துடன் உண்மையை கண்டறியும் விடயத்தில் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள அரசாங்கம் இணங்கியமையும் வரவேற்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் மேற்கொண்ட மனித உரிமை வன்முறைகள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று யோசனையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் சாட்சிகளை பாதுகாக்கும் சட்டம், கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகள் திருப்பிதரப்பட்டமை, பல்வேறு முக்கிய கொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள், பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை மீள்பரிசீலித்தல், முன்னர் அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை வெளியிடும் முயற்சி, இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் என்பன இந்த யோசனையில் வரவேற்ப்பை பெற்றுள்ளன.
3ம் இணைப்பு

அமெரிக்கத் தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது!

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த அமெரிக்கத் தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் எவை என்பது இன்னமும் தெளிவாக தெரியாத நிலையில், அவற்றில் உள்ள 12 விடயங்கள் நீக்கப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கத்தால் அமெரிக்காவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இன்றையதினம் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நண்பகல் வேளை வெளியிடப்படும் என கூறப்பட்டபோதிலும், பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்னர் இன்றைய அமர்வு நிறைவு நேரத்திலேயே அது சமர்ப்பிக்கப்பட்டதாக ஜெனீவா தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை நடத்தப்படவேண்டும் என பல நாடுகளும் ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில் ரஸ்யா, சீனா, கியூபா,பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக உள்ளக விசாரணையே நடப்பட வேண்டும் என தெரிவித்துள்ளன

தொடர்புடைய செய்திகள்


Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila