ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடர் இம்மாதம் 14 ஆம் திகதி கூடவுள்ள நிலையில் வடமாகாண சபையின் சார்பில் உறுப்பினர் குழு ஒன்றை அனுப்புவது தொடர்பான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. குறித்த கோரிக்கை சாத்தியமற்றுப்போன நிலையில் தனிப்பட்ட முறையில் மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோர் ஜெனீவா செல்வதற்கு திட்டமிட்டிருக்கும் நிலையில் குறித்த மாகாணசபை உறுப்பினர்களிடம் மேற்படி தீர்மானங்களை முதலமைச்சர் தனது கையொப்பத்துடன் வழங்கியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோது, நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) முதலமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். இதன்போது மாகாணசபை சார்பில் மனித உரிமைகள் ஆணையகத்தின் அமர்வுக்ளுக்கு மாகாணசபை உறுப்பினர்கள் குழு ஒன்றை அனுப்பிவைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தோம்.
ஆனால் அது சாத்தியமற்றுப்போயிருந்தது. இதன் பின்னர் எமக்கு போக்குவரத்து செலவினங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் அதுவும் சாத்தியமற்றுப்போன நிலையில் முதலமைச்சர் முன்மொழிந்து. தமிழர் தாயகத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே எனவும் தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரியும் இரு தீர்மானங்கள் வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றை முதலமைச்சரின் கையொப்பத்துடன் வழங்குமாறு நாங்கள் முதலமைச்சரிடம் கேட்டிருந்தோம்.
அதனை வழங்குவதற்கு முதலமைச்சர் ஒப்புதல் வழங்கியிருந்த நிலையில் நேற்றைய தினம் முதலமைச்சர் என்னையும் சக மாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரனையும் அவருடைய அலுவலகத்திற்கு அழைத்து தனது கையொப்பத்துடன் கூடிய இரு தீர்மானங்களையும் எங்களிடம் கையளித்துள்ளார். எனவே நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்போம் என்றார்.