தடம் புரளும் ஐ.நா

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் அறிக்கை சிங்கள இராஜதந்திரத்திற்குக் கிடைத்த பெரும் அடி. தமிழ் மக்களுக்கு விமோசனம் பிறந்து விட்டது என்பதுதான் தமிழ் மக்கள் சார்ந்த கருத்தாக இருக்கின்றது.
ஐ.நா மனித உரிமைப் பேரவை பரிந்துரைத்துள்ள கலப்பு சிறப்பு நீதிமன்றப் பொறிமுறை நடைமுறைக்கு வருமா? அவ்வாறு வந்தால் தமிழர்களின் நகர்வு எவ்வாறு இருக்கவேண்டும். அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி தமிழர்கள் தரப்பு சிந்திப்பதாகத் தெரியவில்லை.
கலப்பு சிறப்பு நீதிமன்றப் பொறிமுறைக்கப்பால் உள்ளக விசாரணை நோக்கி ஐ.நா. மனித உரிமைப் பேரவையை இலங்கை நகர்த்துமாக இருந்தால் தமிழ் மக்ககள் அதற்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது குறித்துச் சித்தித்ததாக வேண்டும். ஏனெனில் சிங்கள இராஜதந்திரம் மிக வேகமாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் காய்களை நகர்த்தத் தொடங்கிவிட்டது.
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் அறிக்கை இலங்கையை சற்றுத் தடுமாற வைத்தது என்பது உண்மைதான். அந்தத் தடுமாற்றம். சிங்கள இராஜதந்திரத்தை தடுத்து நிறுத்தி விடவில்லை. தூரநோக்குடன் செயற்பட்டு தனது நலனை முன்னிலைப்படுத்திக் காய்களை நகர்த்துவதற்கு அதனைத் தூண்டியுள்ளது.
அந்தவகையில் இலங்கையின் இன்றைய தேசிய அரசாங்கம் தனது ஒவ்வொரு அடியினையும் மிக நிதானமாகவே எடுத்து வைக்கின்றது. குறிப்பாக சர்வதேச வலைப்பின்னலில் இருந்து எவ்வாறு தன்னைப் பாதுகாத்துக் கொள்வது என்பதுதான் அதன் முன்னுள்ள பிரச்சினை.
சர்வதேச வலைப்பின்னனில் இருந்து விடுபடுவதற்கான வேலைத்திட்டங்கள் பொதுத் தேர்தலுக்கு முற்பட்ட நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில் முன்;னுரிமை கொடுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டன. அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றனர்.
அச்செய்தியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறே நாட்டு மக்களுக்கு அறிவித்தார். அதாவது இலங்கை குறித்து இரண்டுபட்டுக் கிடந்த சர்வதேசத்தை இலங்கை நோக்கி ஒன்றுபடுத்தினோம் என்பதுதான் அந்த வெற்றிச் செய்தியாகும்.
இந்த நகர்வு அத்துடன் முற்றுப் பெறவில்லை. அமெரிக்காவின் நிலைப்பாட்டில் திடீர்த் திருப்பத்தை ஏற்படுத்த வைத்துள்ளனர் இலங்கையின் ஆட்சியாளர்கள். அதாவது சர்வதேச விசாரணை என்ற நிலைப்பாட்டில் இருந்து உள்ளக விசாரணை நோக்கி நகர்த்தியுள்ளனர்.
ஏற்கனவேநீதியரசர் பதவி வழங்கப்பட்டு விட்டது. தற்போது எதிர்க்கட்சிப் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது 54 பொதுஜன ஐக்கிய முன்னணி உறுப்பினர்கள் கையொப்பம் இட்டு ஜனாதிபதியிடம் கையளித்த பின்பும் 16 இடங்களைப் பெற்ற கூட்டமைப்புக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டதன் பின்னணியை இன்று தமிழ் மக்கள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் ஐ.நா. மனித உரிமை பேரணியில் ஆற்றிய உரையில் இருந்து விளங்கிக் கொள்ளலாம்.
சிங்களத் தலைமைகள் தமது குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்வதற்கு தமிழ் முக்கியஸ்தர்களையும் அரசியல் தலைவர்களையும் எவ்வளவு இலாவகமாக இடம் மாற்றி தமது காரியத்தைச் சாதித்துக் கொள்கின்றன என்பது ஒன்றும் புதிதல்ல.
1947ல் டட்லி சேனநாயக்க சுதந்திரத்தை கையகப்படுத்திக் கொள்வதற்காக அமைச்சர் பரிவாரங்களுடன் வடக்குக்குப் படையெடுத்தார். பிறகு தமிழரைக் கொண்டே சுதந்திரத்தை உறுதி செய்து கொண்டார்.
பிரேமதாஸா ஐந்து லிங்கங்கள் பற்றிப் பேசினார். ஜே. ஆர் ஜெயவர்த்தன பிரதம நீதியராசராக சர்வானந்தாவையும் பொலிஸ் மாஅதிபராக இராஜசிங்கம் அவர்களையும், சட்டமா அதிபராக பசுபதி அவர்களையும் நியமித்துள்ளதாக குறிப்பிட்டதுடன் முக்கிய பதவிகளில் தமிழர்கள் அமர்த்தப்பட்டுள்ளதால் தமிழர்களுக்கு என்ன குறை என்று கேட்டார்.
மஹிந்த ராஜபக்ச தமிழ் அரசியல் வாதிகளில் ஒருபகுதியினரைத் தன்னுடன் வைத்துக்கொண்டு தமிழர்கள் அனைவரும் தம்பக்கம் என்றார். இன்று தமிழ்த் தேசியம் பேசும் பெரும்பாலானவர்கள் அரசுடன் உறவாடிக்கொண்டு இருக்கின்றனர். இந்த உறவு தமிழ் மக்களுக்குத் தெரியாது என்று நினைக்கலாம். ஆனால் அது பரம இரகசியமல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இன்றும் அதேநிலையே தொடர்வதாக உணர முடிகின்றது
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் ஐ. நா உரையும் அதனை அடியொற்றியதாக அமைந்துள்ளது. அந்தவகையில் இலங்கையின் ஆட்சியாளர்கள் கடந்த காலங்களைப் போன்று தமிழ்த் தலைமைத்துவங்களின் விரல்களால் தமிழ் மக்களின் கண்களைக் குத்திவிடும் நகர்வை மேற்கொள்வதாகவே உள்ளது.
ஏனெனில் இலங்கை அரசாங்கம் சார்வதேச ரீதியில் ஒரு பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்ற இன்றைய நிலையில் கூட ‘தகர்ந்து போகும் வாக்குறுதிகளுடனேயே சர்வதேச அரங்கில் நிற்கின்றது.
இனவிவகாரத் தீர்வுக்கான எவ்வித நகர்வையும் மேற்கொள்ளாது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் கொண்டுவரும் போது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டும் என்று சிங்களத் தலைவர்கள் வழமையான பாணியில் தகர்ந்து போகும் வாக்குறுதிகளை வழங்கி நிற்கின்றது.
மொத்தத்தில் தமிழர் தரப்பின் செயற்பாடுகள் இலங்கை அரசை சர்வதேச அரங்கில் இருந்து பிணை எடுக்க உதவுமே தவிர அரசியல் ரீதியில் தமிழ் மக்களுக்கு விடிவோ விமோசனமோ ஏற்படும் என்று நம்புவதற்கில்லை. ஆனால் தேசிய அரசாங்கத்தின் நல்லாட்சி பற்றியும் ஐ.நா. அறிக்கை குறித்தும் தமிழ்த் தலைமைகள் சிலர் சிலாகித்துப் பேசுகின்றனர்.
கடந்த 17ம் திகதி தினமணி தீட்டிய ஆசிரியர் தலையங்கம் யதார்த்தத்தைப் பேசுகின்றது. பொதுவாகவே இந்திய ஊடகங்கள் அனைத்தும் ஐ. நா மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் இலங்கைக்குக் கிடைத்த பெரும் வெற்றி என்றே கூறுகின்றன.
இது ஒருவகையில் இந்தியாவுக்குக் கிடைத்த பெருவெற்றியாகவே கருத வேண்டியுள்ளது.  இந்த வெற்றியை முழுமையான வெற்றியாக்கும் வகையில் சிங்கள் இராஜதந்திரிகள் ஜெனீவாவில் நகர்வுகளை மேற்கொள்வதாகவே அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கலப்பு சிறப்பு நீதிமன்றத்துக்குப் பதிலாக உள்நாட்டு நீதிபதிகளைக் கொண்ட உள்ளக விசாரணை குறித்த தனது எண்ணத்தை ஐ. நா பேரவையில் திணித்துவிட இலங்கை கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டு வருகின்றது. இதில் இலங்கை வெற்றி பெறும் என்பதில் எவ்வித கருத்து வேறுபாடுகளுக்கும் இடமில்லை.
இந்த வெற்றியை இலகுவாக்கிக் கொள்ள அமெரிக்காவின் உதவியை இலங்கை நாடியுள்ளதாகவும் அமெரிக்காவுக்கு கடும் அழுத்தத்தினைப் பிரயோகித்து வருவதாகவும் அறியமுடிகின்றது.
இதற்கு இந்தியா முழு ஆதரவை இலங்கைக்கு வழங்கி வருவதாகவும் இறுதியில் உள்ளக விசாரணையை வலியுறுத்தும் பிரேரணை ஐ.நா மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்படுவதற்கான சாத்தியக் கூறுகளே கூடுதலாக இருப்பதாகவும் ஜெனீவாத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ கலப்பு சிறப்பு நீதிமன்றம் குறித்து வெளிப்படையாக கருத்துக்கள் முன்வைக்காவிட்டாலும் அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சரையும் அமைச்சர் ராஜித சேனாரத்ன போன்றவர்களை இதற்கு எதிராகப் பேசவைத்துள்ளனர்.

தனக்கு கலப்பு சிறப்பு நீதிமன்றம் குறித்து ஏதும் தெரியாது என்று குறிப்பிடும் பிரதமர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கு உள்ளக விசாரணை குறித்து வழங்கிய உறுதிமொழியை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
மறுபுறம் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர இறுதிக் கட்டப் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் உட்பட மனித குலத்துக்கு எதிரான கொடூரங்கள் தொடர்பான விசாரணைக்கு வெளிநாட்டுத் தலையீடுகள் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் ஜனவரிமாதம் உள்ளக விசாரணைப் பொறிமுறை அமைக்கப்படும் என்றும் 18 மாதங்களுக்குள் குறித்த விசாரணை முடிவுக்குக் கொண்டுவர தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கலப்புச் சிறப்பு நீதிமன்றப் பொறிமுறை குறித்து ஐ.நா மனித உரிமைப் பேரவை அடுத்தகட்ட நகர்வுக்குப் போகும் முன்பே இலங்கை உள்ளக விசாரணை நோக்கி காய்களை நகர்த்தத் தொடங்கி விட்டது என்பதைத்தான் மேற்கூறப்பட்ட சம்பவங்கள் உணர்த்தி நிற்கின்றன.
இலங்கையின் இந்த நகர்வுக்கு இந்தியாவும் அமெரிக்காவும் பச்சைக் கொடிகாட்டடியதாகவே கருத முடிகின்றது. எது எப்படியிருப்பினும் கலப்புச் சிறப்பு நீதிமன்றம் நடைமுறைக்கு வருவது சாத்தியமற்றது என்பதையே நடைபெறும் நிகழ்வுகள் கோடிட்டுக் காட்டுகின்றன.
ஒன்றில் முற்றுமுழுதான உள்ளக விசாரணை அல்லது ஐ. நா மனித உரிமைப் பேரவையிடம் ஆலோசனை வழிகாட்டல், தொழில்நுட்ப உதவி இவைகளுடனான உள்ளக விசாரணை என்பதே தற்போதுள்ள தெரிவுகளாக உள்ளன.
ஐ.நா மனித உரிமைப் பேரவையில் ஏற்படப் போகின்ற இந்த சடுதியான மாற்றத்தினைத் தமிழ்த் தரப்பு எவ்வாறு முகங்கொடுக்கப் போகின்றது, இதற்கான சர்வதேச ரீதியிலான நகர்வுகள் என்ன என்பதுமே இன்றைய கேள்வியாக உள்ளது.
சர்வதேச நெருக்கடியிலிருந்து இலங்கையைப் பிணை எடுப்பதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் தயாராகிவிட்டன. இந்த ஒரு பின்னணியில் தமிழர் தரப்பு இனவிவகாரத் தீர்வில் இலங்கை அரசாங்கத்தை எந்தளவிற்கு வழிக்குக் கொண்டு வருவதற்கான நகர்வுகளை மேற்கொள்ளப் போகின்றன என்பதே தமிழ் மக்களின் கேள்வியாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
மொத்தத்தில் ஐ. நா மனித உரிமைப் பேரவை தமிழ் மக்களுக்கு வழங்கப் போவது பெரும் ஏமாற்றமே என்பதைத் தவிர வேறுஒன்றும் கூறுவதற்கி;ல்லை.
வி. தேவராஜா
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila