நீறு பூத்த நெருப்பு

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - என்பதைப் போலவே, 'அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்' - என்பதும் இலங்கைக்குப் பொருந்தாது போலிருக்கிறது.
ஐ.நா.வும் சர்வதேசமும் மிதிமிதியென்று மிதித்தும் இம்மியும் நகரவில்லை இலங்கை. இவர்கள் உண்மையாகவே மிதிக்கிறார்களா, முன்பு போலவே மிதிப்பது போல நடிக்கிறார்களா என்கிற சந்தேகம் எழுவதைத் தவிர்க்கவே முடியவில்லை.
ஐ.நா. குழுவையெல்லாம் அனுமதிக்கவே முடியாது - என்று தொடர்ந்து அடம்பிடித்துவந்த இலங்கையின் இடுப்பெலும்பை முறித்தவர், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன். அவரது அதிரடி யாழ்ப்பாண விஜயமும், கொழும்பு செய்தியாளர் சந்திப்பும் இலங்கைக்குக் கொடுக்கப்பட்ட அதிர்ச்சி வைத்தியங்கள். அதன்பிறகுதான், நவநீதம்பிள்ளையை அனுமதித்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது பௌத்தத் திமிர் பிடித்த அந்தத் தீவு.
இப்போதும், குறிப்பிட்டுச் சொல்லத்தக்க மாற்றம் எதுவும் இலங்கையில் ஏற்பட்டு விடவில்லை. ஐ.நா.குழுவையெல்லாம் அனுமதிக்கவே முடியாது - என்று ராஜபக்ச காலத்தில் அடம்பிடித்ததைப் போலவே, வெளிநாட்டு நீதிபதிகளையும் வழக்கறிஞர்களையும் அனுமதிக்கவே முடியாது என்று மைத்திரிபால காலத்தில் அடம்பிடித்துக் கொண்டிருக்கிறது அது.
அதிக சந்தடி இல்லாமல் ஐ.நா. விசாரணைக் குழு ஒன்று இலங்கைக்கு வந்து திரும்பியிருப்பது ஒன்றுதான், சமீபத்திய ஒரே முக்கிய நிகழ்வு. பலவந்தமாகக் காணாமல் போயிருப்போர் தொடர்பாக விசாரித்தறிய வந்திருந்தது அந்தக் குழு. அதில் மூன்று உறுப்பினர்கள். மூவரும் வேறு வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
திருகோணமலை கடற்படைத் தளத்தில் சித்திரவதைக் கூடம் இருந்ததையும், 2010க்குப் பிறகு கூட அங்கே கொடிய சித்திரவதைகள் இடம்பெற்றிருப்பதையும், அதன் தடயங்களாக சுவர்களில் இரத்தக்கறை மற்றும் கைரேகைகள் இருப்பதையும் அந்த மூவர் குழு அதிர்ச்சியுடன் சுட்டிக் காட்டியிருக்கிறது. இதைப்போன்ற இன்னும் பல சித்திரவதை முகாம்கள் இலங்கையில் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறது அந்தக் குழு.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சிலவற்றை நேரடியாகச் சந்தித்துப் பேசிய அந்தக் குழு, இந்தச் சந்திப்புகள் பற்றி ஊடகங்களுக்கு எதுவும் தெரிவிக்க வேண்டாம் என்று அவர்களிடம் முன்கூட்டியே தெரிவித்திருந்தது. தகவல் தெரிவித்தவர்களுக்கு ஏதாவது இடையூறு ஏற்பட்டு விடக் கூடாதே - என்கிற கவலைதான் அதற்குக் காரணம். அது இப்போதுதான் தெரியவந்திருக்கிறது. கொழும்பிலிருந்து புறப்படும் முன் அதை வேதனையோடு குறிப்பிட்டிருக்கிறார்கள் அவர்கள்.
எங்களைச் சந்தித்துப் பேசியவர்களில் பலர் அச்சுறுத்தப் பட்டுள்ளனர். அந்த சாட்சிகளைப் பாதுகாக்க இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவில் சமூகப் பிரதிநிதிகளும், பாதிக்கப்பட்டோர் மற்றும் காணாமல் போனோரின் உறவினர்களும் எந்தவித அச்சமும் அச்சுறுத்தலும் இல்லாமல் செயல்பட வழிவகுக்க வேண்டியது அரசின் கடமை. அதற்கு நேர்மாறாக, அவர்கள் அச்சுறுத்தல்களையும் பாலியல் வன்முறைகளையும் சந்திக்க வேண்டியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தக் கொடுமைகளில் புலனாய்வுப் பிரிவினர் நேரடியாக இறங்குகின்றனர் - என்பது பரவலான குற்றச்சாட்டு. இதற்கெல்லாம் அடிப்படையாக இருக்கிற பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்படவேண்டும்.
இப்படியாகத் தொடர்கிறது அந்த மூவர் குழுவின் அறிக்கை
மகிந்த ராஜபக்சவின் கைத்தடிகள், இந்த அறிக்கையால் மேலும் கடுப்பாகியிருக்கிறார்கள். பாரீஸ் பயங்கரத்தைக் கேடயமாகப் பயன்படுத்தி, போர்க்குற்ற விசாரணை முயற்சிக்கே முற்றுப்புள்ளி வைக்க மேற்கொண்ட முயற்சியில் மண் விழுந்துவிடுமோ என்கிற பயம் அவர்களுக்கு!
எரிகிற நெருப்பில் எண்ணெயை வார்ப்பது மாதிரி, இதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை வேறு வந்து சேர்ந்திருக்கிறது. 'பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், வட கிழக்கில் நின்றுகொண்டிருக்கிற இராணுவத்தைக் குறைக்கவேண்டும், இராணுவத்தின் வசம் இருக்கிற தமிழர் காணிகளை (நிலங்களை) அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும், போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்றால்தான் அது நம்பகமானதாக இருக்கும்' என்றெல்லாம் வலியுறுத்தியிருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.
பாரீஸ் பயங்கரத்தைக் காட்டி, ஐரோப்பிய நாடுகளைக் கவிழ்க்கப் பார்த்தது இலங்கை. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலை இலங்கைக்குச் சாதகமாக இல்லை என்பது மட்டும் தான் ஆறுதலான அம்சம். விசாரணையும் அவசியம், வெளிநாட்டு நீதிபதிகளும் அவசியம் என்கிறது ஐரோப்பா.
'வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கைக்குள் அனுமதிப்பது, நாட்டுக்குச் செய்கிற பச்சைத் துரோகம்..... அரசு அப்படியொரு முடிவெடுத்தால் மக்கள் அதை உறுதியோடு எதிர்க்க வேண்டும்' - என்கிற கைத்தடிகளின் குரல் இலங்கை முழுக்கக் கேட்டுக் கொண்டிருக்கிறது.
ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவந்த உதவாக்கரை தீர்மானத்தில் இருக்கிற ஒரே உருப்படியான வார்த்தை 'வெளிநாட்டு நீதிபதிகள் விசாரணையில் பங்கேற்க வேண்டும்' என்பதுதான்!
தானும் சேர்ந்தே அந்தத் தீர்மானத்தைக் கொண்டுவருவதாக அக்டோபரில் பீற்றிய இலங்கை அதிபர் மைத்திரிபாலா, 'வெளிநாட்டு நீதிபதிகள் - என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இலங்கை அரசியல் சட்டம் அதை அனுமதிக்காது. எனவே, நடக்க இருப்பது முழுக்க முழுக்க உள்நாட்டு விசாரணை தான்.... நம்மை நாமே தான் விசாரித்துக் கொள்வோம்' என்று கூசாமல் பேசுகிறார் இப்போது!
இப்படியொரு சூழலில், காணாதுபோனோர் தொடர்பாக விசாரிக்க வந்த ஐ.நா.குழு உறுப்பினர்கள் மன வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிற உண்மைகளும், ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையும் முக்கியத்துவம் பெறுகின்றன.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்தார்கள் - என்கிற ஒரே காரணத்துக்காக, நீண்ட நெடுங்காலமாக விசாரணையே இல்லாமல் அரசியல் கைதிகளாக சிறை வைக்கப்பட்டிருப்போர் விடுதலை பெற்றாக வேண்டும் என்கிற விழிப்புணர்ச்சி ஈழத்தில் வலுவடைந்துள்ள நிலையில், ஐ.நா.குழுவின் வருகை மேலதிக முக்கியத்துவம் பெறுகிறது.
அப்படியெல்லாம் அரசியல் கைதிகள் யாரும் சிறைகளில் இல்லை - என்று தொடக்கத்தில் இலங்கை அரசு உறுதியாக மறுத்தது. அரசு சொல்வது பொய் என்பதை அம்பலப்படுத்துகிற விதத்தில் பல்வேறு சிறைகளில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் ஒரே சமயத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். அது, அவசரப்பட்டு அறிவிக்கப்பட்ட போராட்டம் அல்ல, அறிவுக் கூர்மையுடன் கூடிய இராஜதந்திரம். அந்தப் போராட்டத்தால்தான், சிறைகளில் அரசியல்கைதிகள் இருக்கிற உண்மையை அரசு ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தமிழர் தாயகத்தில் நடந்த முழு அடைப்புப் போராட்டத்தின் வெற்றி, தமிழினம் நீறுபூத்த நெருப்பாகத் தான் இருக்கிறது என்பதை உலகுக்கு உணர்த்தியதையடுத்து, இன்று ஒட்டுமொத்த உலகும் 'அரசியல் கைதிகளை விடுதலை செய்' என்று இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கிறது.
சிறையிலிருக்கிற இந்தப் புலிகள் போர்க்குற்றங்களில் தொடர்புடையவர்கள். விசாரணைகளிலிருந்து இது தெரிய வந்திருக்கிறது. போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டாக வேண்டும் - என்பதுதான் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் அல் ராத் ஹுசெய்னின் நிலை. அதை மறந்துவிட்டு, உள்ளக விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படும் முன்பே இந்தப் புலி செயற்பாட்டாளர்களை விடுவிப்பது சரியல்ல' என்று நைச்சியமாக நச்சூசி போடுகிறது சிங்கள நாளேடான - திவயின.
எட்டுகோடி தமிழக மக்களின் முதல்வரல்லவா - என்று கூட பாராமல், சகோதரி ஜெயலலிதா குறித்து பொறுக்கித்தனமாக கார்ட்டூன் போட்ட திவயின தான், இப்போது இப்படி எழுதுகிறது. எந்த வழக்கும் இல்லாமல் 20 ஆண்டுகளாக சிறையில் வைக்கப்பட்டிருந்த அப்பாவிகள் மீது 'புலிகள்' என்று முத்திரை குத்தப் பார்க்கிறது.
சிறையில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என்று கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்துவிட்டு, அரசியல் கைதிகள் போராடிய பிறகு உண்மையை ஒப்புக் கொள்கிறது இலங்கை என்கிற அவலட்சணம். பௌத்த சிங்கள இலங்கையின் லட்சணம் வேறெது? இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இது புரிகிறதா இல்லையா?
அமெரிக்காவைக் குறை சொல்ல முடியாது. அது ஒரு வியாபாரி. நண்பனாக யாரையும் வைத்துக்கொள்ளாது, கூட்டாளியாகத்தான் வைத்திருக்கும். இந்தியா அப்படியில்லை. இலங்கைதான் என் நண்பன் - என்று இனப்படுகொலை முடிந்த பிறகு கூட ஒற்றைக்காலில் நின்ற தேசம். 'ஏண்டா இப்படியெல்லாம் கோல்மால் பண்றீங்க' என்று நண்பனிடம் ஒரு வார்த்தை கேட்க வேண்டாமா அது!
சட்டப்பூர்வமாகச் செயல்படும் இலங்கைச் சிறைகளில் ஆண்டுக்கணக்கில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதையே மறைக்க முயன்ற இலங்கை அரசு, சட்ட விரோதத் தடுப்பு முகாம்களில் ஆயிரமாயிரம் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை தானாகவே ஒப்புக்கொள்ளப் போகிறதா என்ன? தானே பழுக்காத கனியைத் தடியால் அடித்துத்தானே பழுக்க வைக்க வேண்டும்... அந்த வேலையைத்தான் செய்திருக்கிறது காணாது போனோர் தொடர்பான ஐ.நா.விசாரணைக் குழு.
சட்டவிரோத தடுப்பு முகாம்கள் இருக்கின்றன - என்று முதலில் குற்றஞ்சாட்டியவர் வடமாகாண சபை முதல்வர் விக்னேஸ்வரன். அதற்குப்பிறகு, தமிழர் நலனில் அக்கறை கொண்ட கறுப்பினச் சகோதரி யாஸ்மின் சூகாவின் மனித உரிமை அமைப்பு ஒன்று, இலங்கையில் சட்ட விரோதத் தடுப்பு முகாம்கள் இருப்பதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது. மிகவும் கொடூரமான ஒரு சித்திரவதை முகாம் இருக்கிற இடத்தைக் கூட வரைபடம் மூலம் காட்டியிருந்தது சூகாவின் அமைப்பு. அப்போதெல்லாம், இதை மறுத்தது இலங்கை. இப்போது, ஐ.நா.குழுவே அந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது. இதை மறுக்கப் போகிறார்களா, ஏற்கப் போகிறார்களா?
இலங்கை அரசு நடத்துகிற சட்டவிரோதத் தடுப்பு முகாம்கள் எத்தனை, அந்தச் சித்திரவதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு, அவர்களில் சித்திரவதைகளுக்குப் பலியானவர்கள் எவ்வளவு பேர், உயிரோடிருப்பவர்கள் எவ்வளவு பேர், அந்த முகாம்களுக்கு பொறுப்பானவர்கள் யார், இலங்கை அரசின் உயர்மட்டத்தில் இதையெல்லாம் ஒருங்கிணைப்பது யார் - என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்கள், பாதிக்கப்பட்ட எமது மக்கள்.
விக்னேஸ்வரனிடம் இதுபற்றிப் பேசியபோது எமது உறவுகள் சிந்திய கண்ணீரின் ஈரம் காய்வதற்கு முன்பே, ஒவ்வொரு உண்மையாக அம்பலமாகிக் கொண்டிருக்கிறது. 'உண்மைகளை அறியாமல் எப்படி நல்லிணக்கம் சாத்தியம்' - என்று விக்னேஸ்வரன் எழுப்பிய கேள்வி, அந்தக் கண்ணீரால் தானே எழுதப்பட்டது!
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை -
என்கிறான் வள்ளுவன்.
வாகரை முதல் முள்ளிவாய்க்கால் வரை விரட்டி விரட்டி நசுக்கப்பட்ட எம் இனத்தின் கண்ணீர்தான், இலங்கையின் இறைவனைப்போல் அரியணையில் அமர்ந்திருந்த மகிந்த மிருகத்தைக் குப்பைக்கூடையில் தூக்கியெறிந்தது. ஒரு இனப்படுகொலையைச் செய்து முடித்ததுடன், அதை மூடி மறைக்கவும் முயன்ற குற்றத்துக்கு அதுமட்டுமே தண்டனையில்லை. இன்னும் பாக்கி இருக்கிறது.
மகிந்தன் செய்த அதே குற்றத்தைத்தான் செய்கிறார்கள் ரணிலும் மைத்திரியும்! எந்த இனப்படுகொலையை மூடி மறைக்க முடியாதோ, அந்த இனப்படுகொலையை மூடிமறைக்க முயல்கிறார்கள். இதற்கான விலையை நிச்சயமாக அவர்கள் தர வேண்டியிருக்கும்.
சர்வதேசத்தின் கண்ணில் மண்ணைத் தூவி, சித்திரவதை முகாம்களை நடத்திக் கொண்டிருக்கின்றன, பௌத்த சிங்கள மிருகங்கள். பாலியல் வன்முறைகள் மூலம் எமது இனத்தைப் பழி வாங்க முயற்சிக்கின்றன. 'பெண்கள் மீது மட்டுமல்ல, ஆண்கள் மீதும்....' என்கிற வார்த்தைகள், எம் இனத்துக்கு இழைக்கப்படுகிற கொடுமையின் கடுமையை விலாவாரியாக விவரிக்கின்றன.
இவ்வளவுக்குப் பிறகும் - 'நீயே உன்னை விசாரித்துக் கொள்ளலாம்' என்று அந்த மிருகங்களிடம் சொல்கிற சர்வதேசத்தைப் பார்க்கும்போது 'தன்னிரக்கம்' வரவில்லை நமக்கு! அப்படிச் சொல்கிற அவர்களைப் பார்த்துத்தான் பரிதாபப் படுகிறோம். தனக்கான நீதியை சர்வதேசம் வழங்கத் தவறிய நிலையில், அந்த நீதியைத் தனக்குத் தானே தேடிக் கொண்ட இனம் தமிழினம். அந்த வரலாறுதான் திரும்ப வேண்டுமென்கிறார்களா? சர்வதேசம் தான் இதற்குப் பதில் சொல்லவேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியம், 'பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விலக்கு' என்கிறது. ஐ.நா.குழு வந்து, சித்திரவதை முகாம் இருக்கிறது என்று தெள்ளத் தெளிவாகச் சொல்கிறது. இவ்வளவும் சொல்லிவிட்டு, 'நீயே உனக்கு நீதிபதி' என்று சொல்வது, அயோக்கியத்தனமா இல்லையா? இலங்கை சித்திரவதை முகாமை நடத்துமா, நீதி விசாரணையை நடத்துமா? அல்லது இரண்டையும் சேர்த்தே நடத்துமா?
நான் அடிப்பதைப் போல அடிக்கிறேன், நீ அழுவதைப் போல அழு - என்று இலங்கையுடன் சொல்லிவைத்துவிட்டு விளையாடுகிற கேலிக்கூத்து தொடர்ந்ததென்றால், நச்சுப் பெருச்சாளியை நாமே நாலு மிதி மிதிக்க வேண்டியதுதான் - என்கிற எண்ணம் தான் பாதிக்கப்பட்ட இனத்துக்கு எழும். அதன் அழுகையிலிருந்துதான், அடுத்த கட்டம் ஆரம்பிக்கும். சர்வதேசத்துக்கு இது விளங்குகிறதோ இல்லையோ - இந்தியாவுக்கு இது விளங்குகிறதா இல்லையா?
புகழேந்தி தங்கராஜ் -
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila