அமெரிக்கா சமந்தா பவரை அனுப்பி வெளிப்படுத்திய சமிக்ஞை யாருக்குப் புரிந்தது?

Samantha_Powerஈழத்துக் கதிரவன்.
 ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் இலங்கைக்கு வருகை தந்து பல தரப்புக்களையும் சந்தித்திருக்கின்றார். முக்கியமாக இலங்கை அரச தரப்பையும், தமிழ் மக்களின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சந்தித்திருக்கின்றார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த சமந்தா அவர்கள், வடமாகாண முதலமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடிதையும், ஒஸ்மானியா கல்லூரி மாணவிகளுடன் எல்லே விளையாடியதையும் கூறலாம். சமந்தாவை சந்தித்த வட மாகாண முதலமைச்சர் விக்ணேஸ்வரன், இலங்கையில் இன்னும் தமிழ் மக்களை சந்தேகக் கண்ணுடனேயே பார்ப்பதாகவும், நல்லாட்சி என்பதை தமிழ் மக்களிடையே திணிப்பது போன்ற அரசியற் செயற்பாடுகளே காணப்படுவதாகவும், வெளிப்படையாக கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார். அப்போது கருத்துத் தெரிவித்த சமந்தா அவர்கள், தமிழ் மக்களின் விடயங்களைக் கையாளும்போதும், அது தொடர்பான தீர்மானங்களை எடுக்கும்போதும் தமிழ் மக்களிடையே கருத்துப் பரியமாற்றங்களைச் செய்வது அவசியம் என்பதை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், இலங்கை அரசுகள் எப்போதுமே விரைவான செயற்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்றும், அவர்கள் செயல்வடிவம் கொடுப்பதற்கு தேவைக்கு அதிகமாகவும் கால தாமதத்தைக் கொண்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றார். இதேவேளை சமந்தாவை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு அமெரிக்கா வற்புறுத்தலைச் செய்யவேண்டுமென கூறியிருக்கின்றார்கள். இது தவிரவும், அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் மீள ஒப்படைக்கப்;படுவது, அதிகரித்த இராணுவ பிரசன்னத்தை குறைத்தல், நிலையான அரசியல் தீர்வு, போன்ற பலவிடயங்களையிட்டும் விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளனர். இவற்றுக்கு பதிலளித்த சமந்தா அவர்கள், ஐக்கிய இலங்கைக்குள், இங்கு வாழும் அனைத்து இன மக்களும், கௌரவமான அரசியல் அதிகாரங்களுடன் வாழ்வதை உறுதிப்படுத்துதல், ஐ.நா மனித உரிமை ஆணையகத்தில் அமெரிக்கா தனது உறுப்புரிமையை இவ்வருடத்துடன் இழந்தாலும், நிரந்தர வதிவிடப்பிரதி என்றவகையிலும், வேறு வழியாகவும் இலங்கைக்கு நெருக்கமாக செயற்படுவதாகவும் குறிப்புக் காட்டியிருக்கின்றார். ஆனாலும் இவ்விஜயத்தின்போது, அரசாங்கத் தரப்போடு அவர் நடத்திய பேச்சுக்கள் எவை என்பதையோ, அரசு தெரிவித்தவை என்ன என்பதையோ, இரு தரப்பும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. ஆனால், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருடனான சந்திப்புக்களின்போது, புதிய அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளை வரவேற்றார். நாட்டில் ஜனநாயகத்தை உறுதி செய்வது, வறுமையை ஒழிப்பது உள்ளிட்ட பல விடயங்களில் புதிய அரசாங்கம் செயற்பட்ட விதத்தை அவர் பெரிதும் வரவேற்றிருக்கின்றார். முக்கியமாக ஆசியாவின் அரசியலில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால அவர்கள் புதிய அத்தியாயத்தை எழுத முயற்சிப்பதை சமந்தா பெரிதும் வரவேற்றிருக்கின்றார். அதாவது ஆபிரிக்காவிலும், ஆசியாவிலும் உள்ள தலைவர்கள் பெரும்பாலும் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் நிலையில் இலங்கை ஜனாதிபதி, தனது அதிகாரங்களை விட்டுவிட்டு பாராளுமன்றத்தை சக்திமிக்கதாக மாற்றுவதற்கு எடுக்கும் முயற்சிகளை வெகுவாக பாராட்டியுள்ளார். இவ்வாறு ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் அவர்கள் அரச தரப்பை பாராட்டியும், வரவேற்றும் உற்சாகப்படுத்தியுள்ளதோடு, தமிழர் தரப்பை வேறொரு கோணத்தில் அணுகியுள்ளார். அமெரிக்கா தனது நலன்களிலிருந்தே எந்தவொரு அசைவையும் செய்யும் என்பது ஒன்றும் இரகசியம் இல்லை. அது உலகம் அறிந்த பரகசியம். ஆனால் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்திற்குப்பிறகு அமெரிக்கா கௌரவமான நிலையோடு இலங்கையோடு நெருங்கி வருகின்றது. அதன் ஒரு தேவைப்பாட்டுடன் தமிழ் மக்களையும் ஒரு கருவியாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. இந்தச் சூழலை தமிழ்த் தலைமைகள் புரிந்து கொண்டு நெருங்கிவரும் அமெரிக்காவை எமது இலக்குகள் நோக்கி எவ்வாறு கையாளப்போகின்றோம் என்பதை ஆழமாக சிந்திக்க வேண்டும். பொதுவாக அமெரிக்காவையோ, வேறு சர்வதேச அமைப்புக்களையோ ஒரு இனம் கையாள்வதற்கு முதலில் பெரும்பான்மை ஒற்றுமையையும், பன்முகத்தன்மையையும், பரந்த கருத்துப் பகிர்வுத் தன்மையையும் கொண்டிருப்பதே அவசியமாகும். தமிழ் மக்களின் அரசியல் வழியிலும், ஆயுத வழியிலும் பல தரப்புகள் இருந்தபோதும், அவர்களிடையே ஒற்றுமை இருக்கவில்லை. அந்த ஒற்றுமையின்மையே பல தோல்விகளையும், இழப்புக்களையும் தமிழ் மக்களுக்கு பரிசளித்தது. எனவே அந்தத் தவறுகளை அனுபவங்களாகப் பெற்றுக் கொண்டு, உள்ளக முரண்பாடுகளையும், விமர்சனங்களையும் களைந்து தற்போது தலைமை வகிப்போர் பொது இலக்கு நோக்கி ஒற்றுமைப்பட வேண்டும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila