லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்

லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து அரச தரப்பின் முக்கிய சான்றாக முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நிராகரித்துள்ளார்.
2005.08.12ம் திகதி விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த, தற்பொழுது மரணமடைந்துள்ளவர்களான வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டுஅம்மான், சிவசங்கர் வினோதன் மற்றும் சாள்ஸ் மாஸ்டர் கோமதி மதிமேகலா ஆகியோருடன் இணைந்து சதி செய்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை கொலை செய்தமைக்கு உடந்தையாக செயற்பட்டதாக சகாதேவன் ஆரோக்கியநாதன் கருதப்படுகிறார்.
பயங்கரவாதச் தடைச்சட்டதின் கீழ் சகாதேவன் ஆரோக்கியநாதனுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் ஐந்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு 2008ம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் எதிரியான இசிதோர் ஆரோக்கிய நாதனுக்கு எதிராக மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேயகோன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் உண்மை விளம்பல் விசாரணை நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து அரச சட்டத்தரணி நவாவி தனது சமர்ப்பணத்தில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இந்த வழக்கின் இரண்டாம் எதிரியான இசிதோர் ஆரோக்கியநாதன் 31-05-2008ம் ஆண்டு பொலிஸாரின் எந்த விதமான சித்திரவதையும் அச்சுறுதலும் இல்லாமல் சுய விருப்பத்திலேயே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜே ஆர். ஜயவர்தனவிற்கு வழங்கியுள்ளார் என அரச சட்டத்தரணி தனது வாதத்தை முன்வைத்தார்.
இதன்போது அரச சட்டத்தரணி முன்வைத்த சமர்ப்பணத்திற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த இரண்டாம் எதிரியின் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா இரண்டாம் எதிரியினால் சுயவிருப்பில் வழங்கப்பட்டதாக அரச தரப்பால் முக்கிய சான்றாக முன்வைக்கப்பட்டுள்ள குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயமாக வழங்கப்பட்டதல்ல என வாதாடினார்.
மேலும் அவர் தனது வாதத்தில்,
“இந்த வழக்கின் இரண்டாம் எதிரி தனது சாட்சியத்தில் தான் சுய விருப்பத்தில் எந்த வாக்கு மூலமும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு வழங்கவில்லை எனவும் தன்னை கைது செய்த தினத்திலிருந்து குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் கையொப்பம் இடும்வரை பொலிஸார் சித்தரவதை செய்ததாகவும் தனது உடலில் சித்திரவதையினால் ஏற்படுத்தப்பட்ட காயங்களை நீதிமன்றம் அனுமதித்தால் நீதிமன்றிற்கு காட்டமுடியும் எனவும் சாட்சியமளித்துள்ளார்.
சட்ட வைத்திய அதிகாரியின் சாட்சியத்தை சிரேஸ்ட சட்டத்தரணி குறுக்கு விசாரணை செய்கையில் சட்ட வைத்திய அதிகாரி இரண்டாம் எதிரியின் உடலில் சித்திரவதையால் ஏற்பட்ட கடும் காயங்கள் இரண்டாம் எதிரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட காலத்தில் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் சித்திரவதை செய்யப்பட்டு குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் பெறப்பட்டது என்பதை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
மேலும், குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதியப்படும் பொழுது பொலிஸ் பரிசோதகர் இரங்கநாதன் 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி மதியம் 2.30 மணிக்கு உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கும் இரண்டாம் எதிரிக்கும் சிங்கள தமிழ் மொழி பெயர்ப்பாளராக செயற்பட்டார் என அரசு தரப்பால் முன்வைக்கப்பட்டள்ளது.
இந்த சாட்சியங்கள் உண்மைக்கு புறப்பானவை என நீதிமன்றில் சாட்சியங்கள் மூலமும் ஆவணங்கள் மூலமும் எதிரி தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக வாதாடியதுடன் எதிரிதரப்பால் நீதிமன்றில் சமர்ப்பித்த ஆவணத்தில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதியப்பட்டதாக அரசதரப்பால் கூறப்படும்.
அதே நாளில் அதே நேரத்தில நகுலா பத்மநாதன் என்ற வேறு ஒரு கைதியின் வாக்குமூலத்தை பொலிஸ் பரிசோதகர் இரங்கநாதன் பதிவு செய்துள்ளார் என்பதனை உறுதிப்படுத்தும் ஆவணத்தை நீதிமன்றில் சமர்பித்ததுள்ளார்.
இத்துடன் ஒரே நாளில் ஒரே நேரத்தில் இருவேறு கைதிகளின் வாக்கு மூலங்களை பதிவு செய்ய முடியாதென்பதால் பொலிஸ் பரிசோதகர் இரங்கநாதனின் சாட்சியம் உண்மைக்கு புறப்பானது என்பதாலும் எதிரியின் உடலில் பொலிஸாரினால் சித்திரவதை செய்தமைக்கான காயங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் சாட்சியத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாலும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயவிருப்பில் வழங்கப்பட்டதல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை நிராகரிக்கும்படி வாதாடியுள்ளார்.”
இரு தரப்பினரதும் வாத பிரதிவாதங்களையடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேயகோன் கே.வி. தவராசாவின் சட்ட வாதத்தை ஏற்று அரச சான்றாக சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்ட எதிரியால் வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் எதிரியினால் சுயவிருப்பில் வழங்கப்படவில்லையென அரச தரப்பு விண்ணப்பத்தை நிராகரித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் சிரேஸ்ட அரச சட்டத்தரணி மொகமட் நவாவி ஆஜரானதுடன் முதலாம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி செல்வி தர்மராஜாவின் அணுசரனையில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா ஆஜராகியுள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila