கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் தென்னைமரவாடிக் கிராமத்தில் பெரும்பான்மையின மக்களின் அத்துமீறல் நடவடிக்கைகள் தொடர்வதால் பிரதேச மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் பிரதேச மக்களை சந்தித்து அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைரசலிங்கம் கலந்துரையாடினார். திருகோணமலை மாகாண விவசாய அமைச்சில் நடந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கமும் கலந்து கொண்டார்.
தென்னைமரவாடி தமிழ் மக்கள் காலம் காலமாக வாழ்ந்த வரலாற்றுச் சிறப்பும் பண்பாட்டு முக்கியத்துவமும் மிக்க பூர்வீக தமிழ் கிராமம். 1983 இன வன்செயல்களின் பின்னர் இந்த மக்களின் வயல் நிலங்களை பெரும்பாண்மையின மக்கள் ஆக்கிரமித்து பயிர் செய்து வந்தனர்.
தமது வாழ்வாதாரத்தின் அடிப்படையாக அமையும் விவசாய நிலங்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு மக்கள் கோரியபோதும் நீண்டகாலமாக இழுத்தடித்த பின்னர் பல்வேறு கோரிக்கைகள், போராட்டங்களை கடந்து விவசாய நிலங்களை தமிழ் மக்களிடம் ஒப்படைத்தனர்.
ஆனாலும் குறித்த விவசாய நிலங்களில் தமிழ் மக்கள் பயிர்ச்செய்கையில் ஈடுபடும்போது இடையூறு விளைவிக்கும் அத்துமீறல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக தென்னைமரவாடி பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
அத்துமீறி வயல் நிலங்களில் விவசாயத்தில் ஈடுபடுவது விவசாயத்தில் ஈடுபடும் தமிழ் மக்களுக்கு இடையூறு விளைவிப்பது, வயல் வரம்புகளை சேதம் செய்வது, நீர் விநியோகிக்கப்படும் வாய்கால்களை மறிப்பது என பலவிதமான தொந்தரவுகளை பெரும்பான்மையின மக்கள் மேற்கொள்வதாக மக்கள் கூறுகின்றனர்.
இவ்வாறான நடவடிக்கைகள் கடந்த காலத்தில் இன வன்செயல்கள் எதற்காக மேற்கொள்ளப்பட்டதோ அதற்காகவே தொடர்ந்தும் அப் பகுதியில் குடியேறிய பெரும்பான்மையின மக்கள் மெற்கொள்ளப்படுகின்றன என்று அண்மையில் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறியிருந்தனர்.
தமது வாழ்வாதார தொழிலை பாதிக்கச் செய்து தம்மை தமது சொந்த நிலத்திலிருந்து துரத்தி அவற்றை அபகரிக்கவே இவ்வாறான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் இதற்கு ஒரு சில பெரும்பான்மையின அரசியல்வாதிகள் தொடர்ந்து பின்நிற்பதாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
இந்த விடயங்கள் குறித்து பிரதேசத்திலிருந்து அழைக்கப்பட்ட மக்கள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருக்கு எடுத்துரைத்தனர். பல்வேறு தரப்பட்டவர்களிடமும் கடந்த காலத்தில் இதை குறித்து சுட்டிக்காட்டிய பின்னரும் பல ஊடங்கள் இதை கவனப்படுத்திய பின்னரும் நிலமை அவ்வாறே தொடர்வதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டனர்.
நல்லாட்சி அரசாங்கம் நல்லிணக்கம் குறித்து பேசுகின்ற இக்கால கட்டத்தில் தாம் இவ்வாறு நெருக்கடிக்கு உள்ளாகுவதாகவும் தம்மை தமது சொந்த நிலத்தில் நிம்மதியாக வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் அதற்கு அரசை நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கோரினர்.
தென்னை மரவாடி மக்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் போராட்டம் தொடர்பில் குளோபல் தமிழ் கடந்த காலத்தில் வெளியிட்ட பதிவுகள்
தமது நிலங்களை கோரி தென்னைமரவாடி மக்கள் அகிம்சைப் போராட்டம் http://bit.do/bvT69
நிலத்திற்காய் போராடும் தென்னைமரவாடி மக்கள் http://bit.do/bvT7c
தென்னமரவாடி தமிழ் மக்களின் பூர்வீக வயல் காணியை அபகரிக்க முயற்சி http://bit.do/bvT7h