திருமலையில் கடற்படைத் தளத்தில் இரகசிய தடுப்புக்காவல் – சித்திரவதை முகாம் இருந்துள்ளது என்பதை இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழு கடந்த வாரம் உறுதிப்படுத்தியிருக்கின்றது. குறிப்பிட்ட முகாமுக்கு நேரில் விஜயம் செய்து முகாம் எவ்வாறு, எப்போது செயற்பட்டது என்பதற்கான ஆதாரங்களையும் திரட்டி இந்தக் குழு வெளியிட்டிருப்பது இலங்கை அரசியல் வட்டாரங்களில் மட்டுமன்றி, சர்வதேச அரங்கிலும் அதிர்ச்சியலைகளைத் தோற்றுவித்திருக்கின்றது. மிகவும் இரகசியமாகப் பேணப்பட்டுவந்த இந்த முகாமை ஐ.நா. அதிகாரிகள் எவ்வாறு கண்டறிந்து, அங்கு சென்றார்கள் என்ற கேள்விகளுக்கும் இப்போது பதில் கிடைத்திருக்கின்றது.
ஐ.நா. நிபுணர் குழு பெருமளவு தகவல்களை அம்பலமாக்கியிருக்கும் நிலையில்தான் இந்த முகாம் தொடர்பில் முழு அளவிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் இப்போது உறுதியளித்திருக்கின்றது. இலங்கையின் ஒரு பகுதியிலுள்ள இந்த முகாம் குறித்து அரசாங்கமே “அறியாதிருந்த” நிலையில், வெளிநாட்டிலிருந்து வந்திருந்த ஐ.நா. குழு அதனைக் கண்டறிந்து உறுதிப்படுத்தியிருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றது. அதேவேளையில், ஐ.நா.குழுவின் அறிக்கை வெளியானதையடுத்து கடற்படை அதிகாரிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இருந்தபோதிலும், அரச தரப்போ கடற்படைத் தலைமையோ இதனை உறுதிப்படுத்தவில்லை.
பெப்ரவரியில் வெளியான தகவல்
திருமலை முகாம் குறித்த தகவல்கள் முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனால்தான் முதலில் அம்பலப்படுத்தப்பட்டது. கடந்த பெப்ரவரி மாதத்தில் பாராளுமன்றத்தில் இது தொடர்பான தகவல்களை அவர் வெளிப்படுத்தினார். திருமலையில் இரகசிய தடுப்புக் காவல் – சித்திரவதை முகாம் ஒன்று இருப்பதாக தகவல் கிடைத்திருப்பதாகத் தெரிவித்த அவர், அங்கிருந்து தப்பிவந்த ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் இந்த விபரங்களை தான் வெளிப்படுத்துவதாகவும் சொல்லியிருந்தார்.
இதனையடுத்து அனைத்துலக மனித உரிமைகள் நிபுணர் யஸ்மின் சூகா தலைமையிலான இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான அனைத்துலக திட்டம் என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இரகசிய முகாம்கள் குறித்து மீண்டும் கூறப்பட்டிருந்தது. இலங்கை அரசாங்க மற்றும் பாதுகாப்புப் படைகளின் உயர் மட்டத்தினால், சித்திரவதைகளும், பாலியல் வன்முறைகளும் எவ்வாறு நன்கு
விசாரணை நடத்தாத அரசு
இவ்வளவுக்குப் பின்னரும் குறிப்பிட்ட முகாம் தொடர்பில் எந்தவிதமான விசாரணைகளும் அரச தரப்பால் முன்னெடுக்கப்படவில்லை. அவ்வாறு முகாம்கள் எதுவும் இல்லை எனக் கூறுவதில்தான் படைத்தரப்பும், அரச தரப்பும் கவனமாக இருந்தன. முன்னாள், ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களின் ஊழல்களை விசாரிக்க குழுக்கள் அமைக்கப்பட்டன. இருந்தபோதிலும் இந்த முகாம்கள் தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எந்தவிதமான விசாரணையையும் நடந்த அரசாங்கம் முன்வந்திருக்கவில்லை.
‘கோட்டாபய’ எனும் பெயர் கொண்ட இரகசிய தடுப்பு முகாம் திருமலையில் இருந்தது. அதில் 700 பேர் வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்போது அவ்வாறான முகாம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் முன்னர் இருந்தது. இதற்கான சாட்சியங்கள் என்னிடம் உண்டு என சுரேஷ் பிரேமச்சந்திரன் அப்போது தெரிவித்திருந்தார். அந்த முகாமில் இருந்தவர்கள் எங்கே என்ற கேள்வியையும் அவர் அப்போது எழுப்பியிருந்தார்.
சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்த தகவல்கள், இப்போது ஐ.நா. வெளியிட்டிருக்கும் அறிக்கை என்பவற்றைப் பார்க்கும் போது முக்கியமான கேள்விகள் எழுகின்றன. அந்த முகாமில் இருந்தவர்கள் யார்? அவர்கள் இப்பொழுது எங்கே? எதற்காக தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்கள்? என்ற கேள்விகளுக்குப் பதில்காண்பது அவசியம். இறுதிப்போரின்போது சரணடைந்து படையினரால் பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டு பின்னர் காணாமல்போனவர்கள். இங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தார்களா போன்ற கேள்விகளுக்குப் பதில்காண்பது அவசியம்.
இந்த நிலையில்தான் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை இப்போது வெளிவந்திருக்கின்றது. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த தகவல்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்கூட, அது குறித்து விசாரிக்க தயாராகவிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றது. ஐ.நா.குழுவே இரகசிய முகாமை உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில், இதனை ஒரேயடியாக மறுதலிக்கும் நிலையில் அரசாங்கம் இருக்கவில்லை என்பதும் தெரிகின்றது.
ஐ.நா. குழுவுக்கு இரகசிய ஆவணம்
“உண்மை மற்றும் நீதிக்கான அனைத்துலக திட்டம்” என்ற அமைப்பினரே ஐ.நா. குழுவுக்குத் தேவையான தகவல்களைக் கொடுத்து அவர்களை அங்கு செல்வதற்குத் தூண்டியிருக்கின்றார்கள். ஐ.நா. குழு இலங்கை புறப்படுவதற்கு முன்னர் இது தொடர்பான இரகசிய ஆவணம் ஒன்று அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த ஆவணத்தில் இரகசிய முகாம் அமைந்துள்ள இடத்தைக் காட்டும் துல்லியமான வரைபடம், செய்மதிப் படங்கள் என்பவற்றுடன், இதனுடன் தொடர்புபட்டவர்களின் விபரங்களும் முழுமையாக இணைக்கப்பட்டிருந்தது. அதன்மூலமாகவே குறிப்பிட்ட இடத்தை அவர்களால் இலகுவாகச் சென்றடைய முடிந்தது.
போர்க்காலத்திலும், போர் முடிவுக்கு வந்த பின்னரும் நாட்டின் பலபகுதிகளிலும் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தமை இரகசியமானதல்ல. இவற்றில் பெரும்பாலானவை சட்டரீதியான முகாம்கள். சட்டவிரோதமான இரகசிய தடுப்பு முகாம்கள் பலவும் பாதுகாப்புத் தரப்பினரால் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டுவந்ததாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியிருந்தன. இந்தக் குற்றச்சாட்டை பாதுகாப்புத் தரப்பினரும் அரசாங்கமும் மறுதலித்தே வந்துள்ளார்கள். ஐ.நா. நிபுணர்குழு தற்போது வெளியிட்டிருக்கும் தகவல்கள் இந்த மறுதலிப்பை நிராகரிப்பதாக அமைந்திருக்கின்றது. உண்மை மற்றும் நீதிக்கான அனைத்துலக திட்டம் வெளியிட்ட அறிக்கைகயிலும், இவ்வாறான 41 முகாம்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்போது, ஐ.நா. வெளியிட்டுள்ள தகவல்கள் முழுமையானதல்ல. குற்றச்சாட்டுக்கள் உண்மை என்பதை ஐ.நா. உறுதிப்படுத்தியிருக்கின்றது. இது தொடர்பில் ஐ.நா. குழு வெளியிட்டிருக்கும் தகவலில், “திருகோணமலை கடற்படை தளத்தில், நிலத்தடி இரகசிய தடுப்பு முகாமில் பெரும் எண்ணிக்கையானோர் நீண்டகாலம் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டிருக்கலாம் என்று புரிந்து கொள்ள முடிகிறது. இது உயர் மட்டங்களுக்கு தெரியப்படுத்தாமல் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. பல உயிர்கள் இழந்திருக்க கூடும் என நம்பப்படும் வகையில் மிகவும் பாரதூரமான விசாரணைகள் இங்கு நடைபெற்றிருக்கலாம் என்றே நாம் நம்புகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஐ.நா. குழு அறிக்கை
நேரில் அவதானித்த தகவல்களின் அடிப்படையிலேயே தமது அறிக்கையை இந்தக் குழு வெளியிட்டிருக்கின்றது. ஒரு குறுகிய கால வியத்தையே ஐ.நா. குழு மேற்கொண்டிருந்தது. ஒரு விரிவான விசாரணையை அவர்கள் மேற்கொண்டிருக்கவில்லை. அவதானிப்புக்களை மட்டுமே அவர்கள் மேற்கொண்டு அதனை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். திருமலை முகாம் போன்ற வேறு முகாம்களும் இருந்திருக்கலாம் என்ற கருத்தை வெளியிட்டுள்ள இந்தக் குழு, இவை தொடர்பான தகவல்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளது.
இறுதிப்போரின்போது காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு திருமலையில் கண்டுபிடிக்கப்பட்ட முகாம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையலாம். ஐ.நா. குழு தெரிவித்திருக்கும் தகவல்களையிட்டு விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் இப்போது தெரிவித்திருக்கின்றது. அடிப்படையான தகவல்களை ஐ.நா. குழு உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில் நம்பகத்தன்மையான ஒரு விசாரணையை இவ்விடயத்தில் அரசாங்கம் முன்னெடுக்குமா என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது. போர்க் குற்றச்சாட்டு குறித்த விசாரணைகளை முழுமையாக்குவதற்கு இந்த முகாம் குறித்த விசாரணையும் அவசியம்.
இந்த முகாம் அமைக்கப்பட்டிருந்த முறை, அதாவது இந்த முகாமின் இருப்பிடத்தை யாரும் கண்டு கொள்ள முடியாத வகையில் இது அமைக்கப்பட்டடிருந்தது, இங்கு காணப்பட்ட இரத்தக்கறைகள் என்பன இது ஒரு சித்திரவதைக் கூடமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற உறுதியான முடிவுக்கு ஐ.நா. குழுவைத் தள்ளியுள்ளது. இது தொடர்பில் உரிய விசாரணைகளை அரசாங்கம் மேற்கொள்ளாவிட்டால், சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கலாம். “உண்மை மற்றும் நீதிக்கான அனைத்துலக திட்டம்” வெளியிட்டுள்ள அறிக்கை இதனை உறுதிப்படுத்தியிருக்கின்றது. விசாரணையை நடத்துவது உள்நாட்டில் நெருக்கடியை அதிகரிக்கும். விசாரணையைத் தவிர்ப்பது சர்வதேச அழுத்தங்களை அதிகரிக்கும். நல்லாட்சி அரசாங்கம் என்னதான் செய்யப்போகின்றது?