தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது இயங்கு நிலையில் உள்ளதா என்ற கேள்வி பலரிடம் எழுந் துள்ளது. கொழும்பில் கூட்டம் கூடி இரா.சம்பந்தன் அவர்கள் தனி மனிதனாக தீர்மானம் எடுக்கின்ற நடைமுறை இருக்கின்றபோது தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு ஆரோக்கியமாக இருக்கும் என்று யாரேனும் கருதுவார்களாயின் அதுவே மிகப்பெரும் மடமைத்தனமாகும்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனால் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பாதுகாத்து தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்ற சிந்தனை இருந்திருக்குமாயின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதே முதற்கடமையாக இருந்திருக்கும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்கின்ற எண்ணம் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைமையிடம் இருக்கவில்லை.
ஆக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரோடு தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்திருப்பது போன்ற காட்சியை தமிழ் மக்களுக்குக் காட்டுகின்ற அதேநேரம், இலங்கைத் தமிழரசுக் கட்சியை கூட்டமைப்புக்குள் தனி ஆதிக்கம் உள்ள கட்சியாக நிலை நிறுத்த வேண்டும் என்ற எண்ணமே தமிழரசுக் கட்சியின் தலைமையிடம் இருந்தது.
இதன் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படாமல் விடப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யாமல் விட்டதன் மூலம் அந்தக் கூட்டமைப்பு உடைந்து போவதற்கு வழி கோலப்பட்டது என்பதே உண்மை.
இப்போது ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் ஆகியோரின் ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இரா.சம்பந்தர் பெற்றுக் கொண்டதன் பின்னர் அவர் இந்த நாட்டின் தேசியத் தலைவர் என்று பிரதமரால் புகழப்படும் அளவில் அரசுக்கு நம்பிக் கைக்குரியவராக மாறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி இரா.சம்பந்தருக்கு கொடுக்கக் கூடாது என்பது நம் கருத்தன்று. மாறாக எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான கோரிக்கை 56 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் கூட்டு எதிரணியால் விடப்பட்டது. எனினும் அந்தக் கோரிக்கை நல்லாட்சியினரால் நிராகரிக்கப்பட்டதுடன் 16 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்ட இரா.சம்பந்தருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
இவ்வாறான ஒரு பதவியைப் பெறுவதற்கு முன்னதாக ஜனநாயக அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தனக்குக் கிடைப்பது நியாயமானதா? என்பதை இரா.சம்பந்தர் சீர்தூக்கிப் பார்த்து அதில் ஜனநாயகம் இருந்திருந்தால் மட்டுமே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பொறுப்பேற்றிருக் வேண்டும்.
ஆனால் இவை எதையும் பார்க்காமல்-தான் சார்ந்த கூட்டமைப்பு கட்சிகளிடம் ஆலோசனை பெறாமல் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக் கொள்ளும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று வெளியில் பேசிக் கொள்வது மிகப்பெரும் ஏமாற்று வேலை.
ஆக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடையாமல் இருக்க வேண்டும் என்று மூத்த தமிழ்த் தலைவர்கள் நினைத்திருந்தால் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்திருக்கவேண்டும்.
இதைச் செய்யாதவர்களே கூட்டமைப்பை உடைத்தனர்; உடைக்கின்றனர்; உடைப்பர்.