எங்கள் மீது உங்கள் சிலருக்கு பிடிப்பில்லாமல் இருக்கலாம். எனினும் எங்கள் அனைவரதும் நோக்கம் எங்கள் இனம் வாழவேண்டும் என்பதாகும்.
வடக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடந்த போது தமிழ் மக்கள் வாக்களித்த வேகம் கண்டு இந்த உலகமே வியந்தது. தேர்தல் தினத்தன்றும் கூலி வேலைக்குப் போனால்தான் அன்றைய சீவனோபாயம் நடக்கும் என்ற நிலைமை இருந்த போதும் கூட, எத் தனையோ பேர் வாக்களிப்பதை ஒரு விரதமாகக் கருதி அதிகாலையிலேயே விழித்து, நேரத்தோடு வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று வாக்களித்த அந்த வாக்குகளே உங்களுக்குப் பதவி தந்தன.
உங்கள் பதவியை தீர்மானித்த புள்ளடிகள் ஒவ்வொன்றும் சாதாரணமானவையல்ல. அது வாக்களித்த ஒவ்வொரு தமிழ் மகனதும் எண்ணிறைந்த எண்ணங்களை, கற்பனைகளை, இன உணர்வுகளை தாங்கிக் கொண்டவை.
உங்களால் தங்களுக்கு விடிவு கிடைக்கும் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு நாம் தீங்கு விளை விப்போமாக இருந்தால் அதற்கான தண்டனை என்ன என்பதை கருடபுராணம் மிகத் தெளிவாகக் கூறியுள்ளது. ஆம், கருடபுராணத்தை ஒரு சமயம் கடந்த தண்டனைக் கோவையாகக் கருதவேண்டும் என்பது நம் தாழ்மையான கருத்து.
அன்புக்குரிய வடக்கு மாகாண சபை உறுப்பினர் களே!
உங்கள் சம்பள விபரம் தொடர்பில் விவாதம் நடந்ததாக அறிந்தோம். மிகவும் கவலையாக இருந்தது.
ஒருமுறை ஜப்பானியத் தூதுவர்கள் யாழ்ப்பா ணத்துக்கு வருகை தந்த போது, எங்களுக்கு வாகனம் தேவை என்று நீங்கள் கேட்டீர்கள். இப்போது உங்கள் சம்பளம் தொடர்பில் விவாதம் நடத்துகிறீர் கள். இவற்றைச் செய்யாதீர்கள் என்று நாம் சொல்லவில்லை.
மாறாக சம்பளத்தை அதிகரிப்பதாக இருந்தால் அதை உங்களுக்குள் கதைத்து உரிய ஒப்புதல்க ளைப் பெற்று அலுவலை செய்து முடியுங்கள். அதற்காக சபை நேரத்தில் உங்கள் சம்பள அதிகரிப்புத் தொடர்பில் விவாதம் நடத்தி வில்லங்கப்படாதீர்கள். அது கல்லறைகளில் கண்மூடித் துயிலும் எம் பிள்ளைகளின் தியாகத்தை கேவலப்படுத்திவிடும்.
தமிழ்ப்பற்றுக் கொண்ட மாகாண சபை உறுப்பினர்களே! உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அருமந்த தலைவர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் நமக்குக் கிடைத்துள்ளார்.
இப்போதைய நிலையில் இது ஒன்றுதான் தமிழர்கள் செய்த புண்ணியம் என்று கருதவேண்டும்.
நாம் கேட்கிறோம்; முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கதிரையில் உங்கள் ஒருவரை இருத்திவிட்டு அவரை நீங்கள் ஆதரிப்பீர்களா? என்று கற்பனை செய்து பாருங்கள்.
அவ்வாறாக நீங்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய எவரும் உங்களில் இருக்க முடியாது. சிலவேளை அவரவர் முதலமைச்சராக வரவேண்டும் என்று நினைத்திருக்கலாமே தவிர, ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன் தவிர்ந்த எவரையும் முதலமைச்சராக ஏற்றுக் கொள்ள முடியாத நிலைமை உங்களிடமும் தமிழ் மக்களிடமும் இருக்கிறது.
அதுமட்டுமல்ல இன்றைய சூழ்நிலையில் தமிழர்களின் ஏகோபித்த தலைவராகவும் வடக்கு மாகாண முதலமைச்சரே இருக்கக் கூடியவர். அப்படியாயின் முதலமைச்சரோடு சேர்ந்து எங்கள் வடக்கு மாகா ணத்தை கட்டி எழுப்ப முடியுமல்லவா?
அவரின் வெளிப்படைத் தன்மையான உரையில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் அவருடன் தனிப்பட்ட முறையில் கதையுங்கள். உங்கள் நேர்மைத்தனத்தை அவரிடமும் தமிழ் மக்களிடமும் நிரூபியுங்கள். இதை நீங்கள் செய்ய வேண்டும்.
விலைபோன தலைமைகள் வடபகுதியை ஆட்டிப் படைக்கின்ற அநீதியை வெட்டிச் சரிப்போம் என்று மாவீரர்களை நினைவுகூரும் இந்தப் புனிதமான கார்த்திகை மாதத்தின் மீது சத்தியம் செய்யுங்கள் தமிழினம் நிச்சயம் மகிழ்ச்சிக் கடலில் குளிக்கும்.