எந்தவொரு கட்சியின் உறுப்பினராகவும் தாம் இல்லையென அறிவித்திருக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன், தம்மைத் தெரிந்தெடுத்து முதலமைச்சர் பொறுப்பைத் தந்துள்ள வடமாகாண மக்களே தமது கட்சி என்று சுமந்திரனுக்கு அளித்துள்ள பதிலில் அழுத்திக் கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழரின் அரசியல் அரங்கில் இப்போது பரபரப்பாகப் பேசப்படுவது முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்குமிடையிலான சொற்போர்.
ஆஸ்திரேலியாவில் வைத்து விக்னேஸ்வரனைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென தாம் கேட்டிருப்பதாக சுமந்திரன் பகிரங்கமாக அறிவித்ததிலிருந்து இந்த நாடகம் ஆரம்பமானது.
ஆழம் அறியாது காலை விடுவதுபோல தெரியாத்தனமாக இந்த விளையாட்டில் இறங்கிய சுமந்திரன் இப்போது ஆப்பிழுத்த நிலைக்குத் தள்ளப்பட்டு தத்தளிக்கிறார்.
சுமந்திரனின் நோக்கையும் போக்கையும் எடுத்துக்காட்டி, ஷமுதலமைச்சரின் பலம் அறியாது சுமந்திரன் துள்ளக்கூடாதுஷ என்ற தலைப்பில் கடந்த வாரம் இந்தப் பத்தி எழுதப்பட்டது.
அதன் பின்னர் சுமந்திரனுக்கான முதலமைச்சரின் பதில் வெளிவந்தது. அரசியல் சாணக்கியமும் நீதித்துறை அனுபவச் சாதுரியமும் நிறைந்த ஓர் அறிக்கையை முதலமைச்சர் வெளியிட்டார்.
உண்மை சுடும் என்பதை இந்த அறிக்கையின் அனைத்து வரிகளும் நிலைநாட்டியுள்ளன.
இதற்குப் பதில் என்ற பெயரில் உப்புச் சப்பில்லாத ஒரு அறிக்கையை சுமந்திரன் வெளியிட்டுள்ளார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
ஆனாலும் கூட்டமைப்பின் எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் தங்கள் சகாவான சுமந்திரனுக்கு ஆதரவாக இதுவரை வாய் திறக்கவில்லை என்பதைக் கவனித்தால் உண்மை எந்தப் பக்கம் உள்ளது என்பது புரியும்.
முதலமைச்சரின் அறிக்கை வெளியான பின்னர் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஓர் அறிக்கையை வெளியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
“உள்ளக முரண்பாடுகளைப் பகிரங்கப்படுத்தி விவாதிக்க வேண்டாம்” என்று இருதரப்பினரிடமும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
சுமந்திரன் ஆஸ்திரேலியாவில் பிரச்சனையை ஆரம்பித்த வேளையில் கட்சியின் தலைவர் என்னும் வகையில் அப்போதே சுமந்திரனைக் கண்டித்திருந்தால் நிலைமை இந்தளவுக்கு வந்திராது.
ஆனால் முதலமைச்சரின் விளக்கமான விரல் சுட்டும் அறிக்கை வெளியான பின்னர் தமிழரசுக் கட்சியின் மூலவேர் ஆட்டம் கண்டு விடலாமெனும் அச்சமே மாவையரின் அறிக்கை வெளிவரக் காரணமாயிற்று.
முதலமைச்சரின் நியாயமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப் புறப்பட்ட சுமந்திரன், மாறாக, வடமாகாணசபை வினைத்திறன் உள்ளதாக செயற்பட வேண்டுமென தேவையற்ற இலவச ஆலோசனை மட்டும் வழங்கிவிட்டு கதையை முடித்து விட்டார்.
“வடமாகாண முதலமைச்சராக விக்னேஸ்வரனை நியமிப்பதென்பது திரு.சம்பந்தனால் விசேடமாக மேற்கொள்ளப்பட்ட தெரிவு” என சுமந்திரனின் அறிக்கையின் ஒரு வரி கூறுகின்றது.
எல்லாமே கூட்டமைப்பின் முடிவு என்று சொல்லப்படுபவை அனைத்தும் சம்பந்தன் என்ற ஒருவரின் தன்னிச்சையான முடிவு என்பதை இந்த வரி அம்பலப்படுத்தி நிற்கின்றது.
கூட்டமைப்பின் சகோதரச் கட்சிகள் (தமிழரசுக் கட்சி தவிர) இதுவரை காலமும் புகார் செய்து வந்த ஒரு குற்றச்சாட்டை சுமந்திரன் தெரிந்தோ தெரியாமலோ இப்போது ஒப்புக் கொண்டதாகி விட்டது.
கூட்டமைப்பு என்பது தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான போக்கில் இயங்குகிறது என ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ ஆகிய கட்சிகள் இதுவரை காலமும் கூறி வந்ததை உண்மையென நிரூபித்தமைக்காக இவர்கள் சுமந்திரனுக்கு மறவாமல் நன்றி சொல்ல வேண்டும்.
இனி, முதலமைச்சரது அறிக்கையின் சில முக்கிய பகுதிகளை ஆராய்வது காலத்தின் தேவை.
வடமாகாண சபையின் இனப்படுகொலைத் தீர்மானத்தை முதலில் வரவேற்று அறிக்கையிட்ட சுமந்திரன், பின்னர் அதனை எதிர்த்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள முதலமைச்சர், ஜனவரி 8ம் திகதிக்குப் பின்னர் (ரணில் பிரதமரான பின்னர்) இதனை நிறைவேற்றியது சுமந்திரனுக்குப் பிடிக்கவில்லையா என்று இரண்டாம் கேள்வியை முன்வைத்துள்ளார்.
“இனப்படுகொலைத் தீர்மானம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அவருடன் நெருங்கிய உறவை வைத்திருக்கும் மற்றையவர்களுக்கும் கோபத்தைத் தருவதாக இருக்கும்” எனக் குறிப்பிடுவது சுமந்திரனை நோக்கியது என்பதைக் கவனிக்கவும்.
முதலமைச்சர் தமிழரசுக் கட்சி உறுப்பினர் என்று சுமந்திரன் கூறுகிறார். ஆனால் அதற்கு
முதலமைச்சர் தெரிவிக்கும் பதில் பின்வருமாறு உள்ளது: “நான் ஏதாவது ஒரு கட்சியின் நடைமுறை உறுப்பினராக இருந்தால்தான் கட்சி என்னைக் கட்டுப்படுத்தலாம். என்னைப் பொறுத்தவரையில் பெருவாரியாக எனக்கு வாக்களித்த வடமாகாண மக்களே எனது கட்சி. இந்தப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தவர்கள் அவர்களே” என்னும் கூற்று தமிழரசுக் கட்சியினருக்கான வாயடைப்புக்குரிய பூட்டு.
ரணிலுக்கும் தமக்குமிடையிலான முரண்பாடுகளை விபரித்துள்ள விக்னேஸ்வரன், தம்மை ஒரு பொய்யர் என்று ரணில் கூறியது உண்மைக்குப் புறம்பானதெனத் தெரிந்தும் அது தொடர்பாக ஒரு வார்த்தைதனும் கூறாமல் ரணிலின் நெருக்கமே தமக்கு கூடிய முக்கியத்துவமானது என்பதை சுமந்திரன் காட்டியுள்ளார் என்று தெரிவித்ததன் வாயிலாக மற்றொரு உண்மை பகிரங்கமாக்கப்பட்டுள்ளது.
தமது முன்னாள் மாணவனான சுமந்திரன் இப்போது ரணில் விக்கிரமசிங்கவின் விசுவாசியாக அல்லது அவரது கையாளாக செயற்படுகின்றார் என்பதையே இந்த அறிக்கையினூடாக விக்னேஸ்வரன் வெளிப்படுத்தி நிற்கின்றார்.
சுமந்திரனின் சட்டக் கல்விக்கு தாம் ஆசானாக இருந்தவர் என்பதை, சுமந்திரனின் அறிக்கையையே கேள்விக்குரியதாக்கியுள்ள முதலமைச்சர் பின்வரும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
1. பாராளுமன்றத் தேர்தலுக்குப் பணம் திரட்ட வேண்டுமானால் அதனைச் செலவழிக்கப் போகும் வேட்பாளர்களே கனடிய மக்களிடம் கேட்டுப் பெற வேண்டும். பணத்தைச் செலவு செய்யப் போகின்றவர்கள், அதற்குக் கணக்குக் காட்டப் போகின்றவர்கள், பணத்தை இலங்கைக்கு எடுத்து வரப்போகின்றவர்கள் ஒருபுறம் இருக்க, என்னை அங்கு செல்ல வைப்பதற்கு சுமந்திரன் ஊக்கம் காட்டியது எதற்காக?
2. கடந்த பொதுத் தேர்தலின்போது நல்லவர்களைத் தெரிந்தெடுங்கள், வல்லவர்களைத் தெரிந்தெடுங்கள், நேர்மையானவர்களைத் தெரிந்தெடுங்கள் என்று நான் கூறியது மாற்றுக் கட்சியையே சுட்டிக் காட்டியது என்றால், கூட்டுக் கட்சியில் அவ்வாறானவர்கள் இல்லை என்றா சுமந்திரன் கூறுகின்றார்?
3. தேர்தலின்போது வீட்டில் முடங்கிக் கிடக்காது வேளைக்குச் சென்று வாக்களியுங்கள் என்று நான் கூறியதற்கு அவர் வேறு வியாக்கியானம் கூறுவதை குறிப்பிடுவதாக இருந்தால், ஷஉங்கள் வீடுகளை விட்டு சைக்கிளில் பிரயாணம் செய்து சென்று வாக்களியுங்கள் என்றல்லவா கூறியிருக்க வேண்டும்?’
இவ்வாறு சுமந்திரனின் அறிக்கையின் கூற்றுகளையே அவருக்கான கேள்விகளாக மாற்றியுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமது அறிக்கையின் இறுதியில்,”சுமந்திரன் தமக்குக் கட்சியில் இதுகாறும் இருந்த மதிப்பு குறைகிறதே என்ற ஆதங்கத்தில் அதற்கு என்னைப் பலிக்கடாவாக்க முனைவது வருத்தத்துக்குரியது” என்று குத்திக் காட்டியுள்ளார்.
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்திருக்கும் சுமந்திரனை ரணில் காப்பாற்றுவாரா? அல்லது அமைச்சர் பதவி வழங்கி கூட்டமைப்பை உடைத்துத் தள்ளுவாரா?