கொழும்பு சிறைச்சாலைக்கு விக்னேஸ்வரன் திடீர் விஜயம்! கைதிகளின் நிலை குறித்து கவலை

உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து, வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் கொழும்பு சிறைச்சாலைக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டு, அவர்களைப் பார்வையிட்டார்.
அங்கு தமிழ் அரசியல் கைதிகளுடன் கலந்துரையாடியுள்ளார். கைதிகளின் நிலை குறித்து லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலில், அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான பிரச்சினையில் எதிர்பார்த்த தீர்வு கிடைக்குமோ என்ற சந்தேகம் இருப்பது குறித்து தாம் அரசியல் கைதிகளிடம் கூறியதாக வடக்கு முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் போராட்டத்தை  தொடரலாம் என அறிவுறுத்தியதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு தமிழ் அரசியல் கைதிக்கும் இனி பிணை வழங்கப்பட மாட்டாது: சுவாமிநாதன் சிறையிலுள்ள எந்தவொரு தமிழ் அரசியல் கைதியும் இனி பிணையில் விடுவிக்கப்படமாட்டார்கள் என சட்ட மாஅதிபர் திணைக்களம் அறிவித்துள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். மகஸின் சிறைச்சாலைக்கு இன்று மாலை விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதுவரை 39 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், எஞ்சியுள்ள கைதிகளில் 90 பேர் தமக்கு புனர்வாழ்வு அளிக்குமாறு கடிதமொன்றின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 
இதன்பிரகாரம், இன்று முதல் எதிர்வரும் 10 நாட்களுக்கு குறித்த 90 பேரும் கட்டம் கட்டமாக புனர்வாழ்வு அளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டார்.
இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila