கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல்! பகுதி - 1 , பகுதி - 2, பகுதி - 3, பகுதி - 4, பகுதி - 5

அன்புமிகு கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களுக்கு அன்பு வணக்கம்.
தங்கள் உகரம் இணை யத்தளத்தில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் நீங்கள் எழுதியிருந்த  கட்டுரையை வாசித்தேன். மிகப்பெரும் அதிர்ச்சி. நீங்கள் இவ்வாறு எழுதியதற்கான காரணம் என்ன? என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஏற்பாட்டுக் குழுவில் ஒருவன் என்ற வகையில் இவ்வி டத்தில் உண்மையைக் கூறுவது எனது கடமை என்று நினைக்கிறேன். 
உண்மையைத் துணிந்து கூறுங்கள் என்ற உங்களின் உரைகள் தான் எனக்கு அப்படியயாரு மன உறுதி யையும் தந்தது.

வடக்கின் முதல்வர் நீதியரசர் மாண்புமிகு சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தொடர்பில் யார் எந்தக் குறையைக் கூறியிருந்தாலும் அது பற்றி நான் கவலை கொண்டிருக்கமாட்டேன். ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு மிகப்பெரும் பெருமை என்று நான் நம்புகின்ற கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் குறை காணும் போது நான் பேசாமல் இருந்தால் அது மிகப் பெரும் பாவமாகும். 

அன்புக்குரிய கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களே!  அண்மையில் நீராவியடி பிள்ளையார் கோயில் அறங்காவலர் திருமதி சாந்தா ரகுநாத முதலியார் அம்மையார் அவர்களைச் சந்தித்தேன்.
சமய சமூக அக்கறை கொண்ட நல்ல பொறுப்புள்ள ஒருவர் அவர். கூடவே பெரியார் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களின் சகோதரி. தமிழகத் தில் உள்ள சிதம்பரத்தில் ஈழத்தமிழர்கள் அமைத்த மடாலயங்கள் தொடர்பில் ஆராய்வதே அந்தச் சந்திப்பின் நோக்கம்.

அந்தச் சந்திப்பில் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் நினைத்தால்- அவர் யாழ்ப்பாணத்திற்கு வந்து உரையாற்றினால் எங்கள் இளைஞர்கள் நிச்சயம் நல்வழிப்படுவர் என்று கதைத்துக் கொண்டோம். இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டோம்.

பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்களை நான் சந்தித்து  கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கலாநிதிப் பட்டம் வழங்காதது மிகப் பெரும் குறை.
கம்பவாரிதிக்கு கலாநிதிப் பட்டம் வழங்குவதன் மூலம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பெருமைப்பட்டுக் கொள்ளும் என்றேன்.

நிச்சயமாக இந்தியப் பல்கலைக்கழகங்கள் கம்பவாரிதிக்கு கலாநிதிப் பட்டங்களை வழங்கும். அதற்கு முன்னதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்  முந்திக் கொள்ள வேண்டும் என்று  கூறியிருந்தேன்.
தமிழகத்தில் நீங்கள் கலைஞர் கருணாநிதியின் நூலை ஆய்வு செய்தபோது, உங்கள் உரையின் உச்சம் கண்டு நடிகர் ரஜனிகாந் கண்ணீர் விட்ட செய்தி எல்லாம் அறிந்து நாம் பூரிப்படைந்தவர்கள்.
இந்திய தேசத்தில் இலங்கை ஜெயராஜ் பட்டிமன்ற நடுவர் எனும் போது, உங் களின் மிகப் பிரவாகமான அறிவும் பேச்சாற்றலும் எங்களுக்கு மிடுக்கைத் தரும்.

அதேவேளை வடக்கின் முதலமைச்சர் ஒரு அற்புதமான உத்தமர். நேர்மையானவர். அவர் மீது நீங்கள் வழுக் காண்பது என்பது வள்ளலாருக்கு எதிராக ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் வழக்குத் தொடுத்த விடயமாகி விடுமோ என்பது என் ஏக்கம்.

என்னைப் பொறுத்த வரை கம்பவாரிதி ஜெயராஜூம் நீதியரசர் விக்னேஸ்வரனும் தமிழினத்தின் மிகப்பெரும் சொத்துக்கள். எனவே நீங்கள் இருவரும் முரண்பட்டுக்கொண்டால் அது உங்களுக்கல்ல தமிழ் மக்களுக்கே நட்டம்  என்று நினைப்பவன் நான்.

எனவே உகரம் இணையத்தளத்தில் நீங்கள் எழு தியவை தொடர்பில் உண்மையைக் கூறுவது என் கடமை என்றுணர்ந்தேன். அதனால்தான் இவ்வன்பு மடலை தங்களுக்குப் பகிரங்கமாக எழுதிக்கொள்கிறேன். இந்தப் பகிரங்கமடல் பலருக் கும் தெளிவைத் தரும் என்ற நம்பிக்கையும் உண்டு.
போருக்குப் பின்பான எங்கள் நிலைமைகள் மிகவும் மோசமாகி வருவதை தமிழ்மீது விசுவாசமுள்ள எவரும் உணர்ந்து கொண்டிருப்பர்.

தமிழ் அரசியல் தலைமைகளின் இராஜதந்திரமற்ற போக்கும் தாம் தாம் பதவியைப் பெறுவதற்கான முயற்சிகளும் எதிர்காலத் தில் அரசியல் பதவிகளைப் பெறுவதையே குறிக்கோளாகக் கொண்ட தன்மைகளும் தமிழினத்தின் மீது மிக மோசமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. இது ஒரு புறமாக இருக்க மறுபுறத்தில் எங்கள் இளம் சமூகத்தை சீரழிக்க- தமிழ் மக்களின் உன்னதமான பண்பாட்டுக் கோலங்களை வேரறுக்க ஒரு பெரும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது.

இந்த இரண்டிற்கும் மத்தியில் போரினால் பாதிக் கப்பட்ட மக்கள் கவனிப் பாரற்றவர்களாக; ஏழ்மையின் உச்சத்தில் ஒரு நேர உணவுக்கும் ஏங்கும் பரிதாபத்தில் இருக்கும் அவலம் தொடர்ந்து கொண்டது.
இருந்தும் அரச தரப்பைச் சந்திக்கும் தமிழ் அரசியல் தலைமைகள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அவ லத்தை நிவர்த்திக்கும் வரை அந்த மக்களுக்கு உலர்  உணவு நிவாரணங்களையாவது அரசு வழங்க வேண்டும் என்று ஒருபோதும் கேட்டிலர்.

போர்ப்பாதிப்புக்குள்ளான மக்களின் வறுமையை உணர்ந்து கொள்ள முடியாத எங்கள் அரசியல் தரப்புக ளால் ஏற்பட்ட பாழாய்ப் போன  தலைவிதி இது.

சட்டவிரோத குடியேற்றங் கள், பெளத்த விகாரைகளின் புதிய தோன்றல்கள்,  தமிழர் தாயகத்தில் இருக் கக்கூடிய வளங்களை சூறையாடுதல் என்ற மிக மோச மாக அழிவு நடவடிக்கைகள் தொடர்ந்தன. இத்தகைய மிக மோசமான சம்பவங்கள் பலரையும் பாதித்தது. மதத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பொது மக்கள் பலரும் இதுபற்றிக் கதைத்துக் கொண்டனர். தங்களுக்குள் தீராத மனக் கவலையை விதைத்துக் கொண்டனர்.

என்ன செய்வது தேர்தல்  காலத்தில் வந்து போன நம் சீமான்கள் இப்போது வருவதில்லை. மக்களை வந்து சந்திப்பதில்லை. அப்படியானால் தமிழ்மக்களின் அவலங்கள் எங்ஙனம் தீர்க்கப்பட முடியும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ள முடியும்.

இத்தகையதோர் கட் டத்தில் தான் தமிழ்மக்களின் நலன்களைப் பேணுகின்ற  பொது அமைப்பு ஒன்றை உருவாக்கினால் அது பயனுடையதாக இருக்கும் என்று கருதப்பட்டது. அந்த வகையில் ஐந்து பேர் கொண்ட ஏற்பாட்டுக் குழுவொன்று உருவாகியது.

 அந்த ஏற்பாட்டுக்குழு அரசியல் கட்சித் தலை வர்களையும் மதத்தலைவர்களையும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசியது. இச் சந்திப்பின் போது  மதத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும்  சிவில் சமூகப் பிரதிநிதிகளும்  தமிழ் மக்களின் நலன் தொடர்பில் ஒரு பொதுவான - பலமான அமைப்புத் தேவை என்று வலியுறுத்தினர்.

தொடர்ந்து வடக்கு மாகாணத்தின் முதலமைச்சரை ஏற்பாட்டுக்குழு சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டது. சந்திப் புக்கான அனுமதியை மின்னஞ்சல் மூலம் பெறு வதன்று  முடிவாகி அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல்! பகுதி - 2
 
கம்பவாரிதிக்கு அன்பு வணக்கம்!
பாவத்தைப் பார்த்திருப்பதும் பாவம் என்ற மார்ட்டீன் லூதர் கிங்கின் மெய்யுரையின் அடிப்படையில் தமிழ்மக்களுக்கு அரசியல்வாதிகளால் இழைக்கப்படும் அநீதிகள், ஏமாற்றங்கள் தொடர்பில் தமிழ்மக்கள் பலரும் வெறுப்புக்கொண்டிருந்தனர்.

போர் தந்த இழப்புக்கள் எழுந்து நின்று துணிந்து பேசுகின்ற எங்கள் வீரத்தை வீழ்த்தியிருந்தது. இத்தகைய தோர் சூழ்நிலையில் பக்கத்திருப்பவர் துன்பந்தனை பார்க்கப்பொறாத வன் புண்ணியமூர்த்தி...   என்ற  பாரதியின் வரிகள் எங்கள் இதயத்தைத் தொட்டுத் துளைத்தன.

அரசியல் என்ற எல்லைக்குள் நின்றால் மட்டுமே மக்களுக்கு உதவ முடியும் என்ற நினைப்புகளைக் கடந்து ஒரு நல்ல நோக்கில் தமிழ்மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் வலியுறுத்தவும் கூடியதான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நினைப்போடு சிலர் செயற்பட்டோம். அதற்காகப் பலருடனும் சந்திப்புக்களை ஏற்படுத்தினோம். அந்தச் சந்திப்பின் விளைவு தான் தமிழ்மக்கள் பேரவை என்ற  அமைப்பு உருவாகக் காரணமாயிற்று.

அன்புக்குரிய கம்பவாரிதி அவர்களே! உண்மைகள் எந்தக் காலத்திலும் உறங்கிவிடக்கூடாது என்பதை தாங்கள்  பல இடங் களில் வலியுறுத்தியுள்ளீர்கள். எனவே ஓர் உண்மைக்குப் பங்கம் வந்தபோது நாம் பேசாமல் இருந்தால் அது மிகப் பெரும் பழியும் பாவமும் என்று அஞ்சுகின்றோம். அதனால் தான் இந்தப் பகிரங்கமடலைத் தங்களுக்கு எழுத வேண்டியதாயிற்று. அதற்காக மன்னித்தருள்க.

பீஷ்மர் மீது அம்பு எய்துவது அருச்சுனனுக்கு நீதியன்று. எனினும் தர்மமே வெல்லவேண்டும் என்று மனத்தால்  நினைக்கின்ற பீஷ்மர் தன்மீது எய்தப்படும் அம்பையும் சிரித்த முகத்தோடு ஏற்பார். தன் ஆத்மார்த் தமான ஆசியையும் அள்ளிக் கொடுப்பார் என்ற உண்மை நீங்கள் அறியாததன்று.

தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களை விடுத்து சிவில் சமூகப் பிரதிநிதிகளும் மதத்தலைவர்களும் இணைந்து தயாரிக்கின்ற தீர்வுத் திட்டத்தால் எந்தப் பயனும் கிடையாது என்று  உணர்ந்தமையால் தமிழ் அரசியல் தலைவர்களின் பிரசன்னம் தமிழ் மக்கள் பேரவையில் கட்டாயம் என்றுணர்ந்தோம்.

எங்கள் நினைப்பை தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர்.  எல்லாச் சந்திப்புகளும் நிறைவேறிய பின்னர் வடக்கின் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்மக்கள் பேரவையில் இணைப்பது தொடர்பில் சந்திக்க முனைந்தோம்.

மின்னஞ்சல் மூலமாக சந்திப்புக்கான அனுமதியை அவரிடம் கேட்டிருந்தோம். கூடவே தமிழ்மக்களின் நலன் தொடர்பில் ஓர் அமைப்பை உருவாக்க வேண்டியதன் தேவை பற்றிய சிறு குறிப்பையும் சந்திப்புக்கான அனுமதிகோரும் மின்னஞ்சல் செய்தியில் இணைத்திருந்தோம்.

சந்திப்புக்கான அனுமதியை முதலமைச்சர் தந்திருந்தார். சந்திப்பு நடந்தது. முதலில் எங்களை அறிமுகம் செய்தோம். அரசியல் என்ற எல்லை கடந்து தமிழ்மக்களின் நலன்கள் கவனிக்கப் படவேண்டும் என்று கூறி னோம். அரசியல் கட்சி, மாற்றுத் தலைமை பற்றியதாக இருந்தால் என்னிடம் யாரும் பேசாதீர்கள். 
அதேநேரம் தமிழ்மக்களின் பொதுநலன் என்ற விடயத்தை நாம் ஓரங்கட்டி விடமுடியாது என்றும் முத லமைச்சர் கூறினார்.

இந்த உண்மை நீங்கள் நம்பும் கம்பன் மீதும் நான் வணங்கும் நல்லூர்க்கந்தன் மீதும் சத்தியம்.
அன்புக்குரிய கம்பவாரிதி அவர்களே! தமிழ்மக்கள் பேரவை  அமையப் பெற்ற பின்னர் அந்த  அமைப்புத் தொடர்பில் பலரும் தமது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

எங்கள் எதிர்பார்ப்புக்க ளைக் கடந்து தமிழ்கூறும் நல்லுலகம் முழுவதும் தமிழ் மக்கள் பேரவை என்பதே பேச்சாகியுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்பில்  உகரம் என்ற இணை யத்தளத்தில் தங்களால் எழுதப்பட்ட நீண்ட கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. நெஞ்சு அடைத்துவிட்டது.

தமிழ்மக்கள் பேரவை பற்றி யார் யாரெல்லாம் ஏற்றுவார்கள் போற்றுவார்கள் என்று எதிர்பார்த்திருந் தோமோ அந்த எதிர்பார்ப் பிற்கு மாறாக உங்களின் கருத்து இருந்தமை மிகப்பெ ரும் வலியைத் தந்தது.
14 ஆண்டுகள் இராமர் காடேக வேண்டும் என்று கைகேயி தசரதனிடம் வரம் கேட்ட போது தசரதன் பட்ட வேதனை எத்துணை  என்பதை இப்போது எங்களால் உணரமுடிகின்றது.

ஏற்பாட்டுக்குழுவே
கோரிக்கை விடுத்தது
முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அரசியல் தலைமையில் ஆசைவந்துவிட்டது என்று  நீங்கள் குறிப்பிட் டிருந்தீர்கள். இதற்கு தமிழ் மக்கள் பேரவையில் இணைத் தலைமையை அவர் ஏற்றுக் கொண்டதை காரணமாக்கினீர்கள்.

உண்மையில் தமிழ்மக்கள் பேரவையின் இணைத்தலைமையில் இணையுமாறு தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக்குழுவே முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
வடக்கின் முதலமைச்சர் என்ற அடிப்படையில் ஏற்பாட்டுக்குழுவின் கோரிக்கையை அவர் ஏற்றுக் கொண் டார். நடந்தது இதுவே. 

வடக்கின் முதலமைச்சர் வலிந்துபோய் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பதவி கேட்டவர் அல்ல. மாறாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரே வடக்கு மாகாண சபையின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுமாறு விக்னேஸ்வரன் அவர்களைக் கேட்டுக்கொண்டார். இதற்கு நீதியரசர் விக்னேஸ்வரன் கூறியது; கூட்டமைப்பில் இருக்கக்கூடிய கட்சிகள் விரும்பினால் உங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்க முடியும் என்பதாகும்.
எனவே இதிலிருந்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் பதவி ஆசை இல்லை என்பது தெரிகிறதல்லவா?

தமிழ்மக்கள் பேரவையின் இணைத் தலைமையை முதல்வர் விக்னேஸ்வரன் ஏற்றுக்கொண்டதால் அவர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உடைக்க முற்பட்டுள்ளார் என்ற தங்களின் கருத்து  நிலை சரிபார்க்கப் பட வேண்டும் என்பது நம் தாழ்மையான கோரிக்கை.

 வடக்கின் முதல்வர் பதவிக்குத் தக்கவர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் நீதியரசர் விக்னேஸ்வரனை அழைத்து வந்தபோது, அதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  பாராள மன்ற உறுப்பினர்களும் கூட்டமைப்பின் அனைத்து கட்சிகளும் பூரண ஆதரவு வழங்கி இருக்க வேண்டும். இந்த ஆதரவு  கூட்டமைப்பை பாதுகாப்பதாக இருந்திருக்கும்.     

ஆனால் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருசிலர் விக்னேஸ்வரன் அவர்களை  எதிர்த்தனர். இந்த எதிர்ப்பு எந்த வகையில் நியாயமாகும்.

வடக்கின் முதல்வராக விக்னேஸ்வரனை நிறுத்துவதில் உடன்பாடு இல்லாமல் இருந்திருந்தால், கூட்ட மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்  இரா. சம்பந்தரையே எதிர்த்திருக்க வேண்டும். அப்படியான எதிர்ப்பு நியாயமாக இருந்திருக்கும்.

இதைவிடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்டபின், தேர்தலில் போட்டியிட வந்த நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களை தேர்தல்  கால த்தில் எதிர்ப்பதாக இருந்தால் கூட்டமைப்பைப் பிளவுபடுத்த முற்படுபவர்கள் யார் என்பதை அறம் உரைக்கும் உங்களால் தெரிந்து கொள்ள முடியாமல் இருக்காது.
 
கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல்! பகுதி - 3
 
ஒரு இலட்சத்து 35 ஆயிரம் விருப்பு வாக்குகளால் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச் சரானார். எனினும் சம்பந்தருக்குப் பின்பு விக்னேஸ்வரன் தலைவராகி விடுவாரோ என்ற ஏக்கம்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக் கிய எம்.பி ஒருவருக்கு ஏற்பட்டுவிட அவர் விக்னேஸ்வரனின் நிர்வாகத்தை  முடக்குவதில்  விடாப்பிடியாக நின்றார்.

கடந்த பொதுத்தேர்தலின் போது கூட்டமைப்புக்கு எதிராக முதல்வர் விக்னேஸ்வரன் பிரசாரம் செய்ததாக நீங்கள் கூறியிருந்தீர்கள். வடக்கின் முதலமை ச்சர் என்ற வகையிலும் அவர் ஒரு நீதியரசர் என்ற நிலையிலும் நேர்மையானவர்களுக்கு, நல்லவர்களுக்கு  தமிழ்மக்களுக்கு சேவையாற்றவேண்டும் என்று நினைக்கின்ற வர்களுக்கு வாக்களியுங்கள் என்றே  முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.
இதில் என்ன பிழை இருக்கிறது. கூட்டமைப்பிற்குள் நேர்மையானவர்கள் இல்லாதபோது,

தமிழ்மக்களுக்குப் பணி செய்கின்றவர்களுக்குப்  பஞ்சம் இருக்கின்றபோது தான் முதலமைச்சரின் பிரசாரத்தில் கோபம் கொள்ள வேண்டும். நேர்மையானவர்கள் கூட்டமைப்பிற்குள்ளும் இருந்தால் தமிழ்மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பர். எனினும் வாக்குகள் எண்ணப்படும் இடங்களிலும் நேர்மை தழைத்தோங்கி இருக்கவேண்டும். அப்போதுதான் உண்மை எங்கும் பிரவாகிக்க முடியும்.

அன்புக்குரிய கம்பவாரிதி அவர்களே! இந்த நாட் டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வடக்கின் முதல்வரைச் சந்திக்க மாட்டேன், அவருடன் பேசமாட்டேன் என்று கூறிய போது கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு சில பாரா ளுமன்ற  உறுப்பினர்கள் பிரதமர் ரணில் யாழ்ப்பாணம் வந்தபோது சந்தித்து அளவளாவியது நியாயம் என்று கருதுகிறீர்களா?

தமிழ்மக்களின் அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று முதலமைச்சராகிய விக்னேஸ்வரன் அவர்களை மதிக்காத இடத்தில் யாழ்ப்பாணம் வந்த பிரதமருடன் கூட்ட மைப்பின் எம்.பிக்கள் எப்படி நடந்திருக்க வேண்டும் என்ற அறம் உங்களுக்குத் தெரியாததன்று.

இதுமட்டுமல்ல வடக்கு மாகாண சபையில் ஒரு சிறந்த நிர்வாகம் நடக்கவில்லை என்றும் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். ஒரு இலட்சத்து 35 ஆயிரம் விருப்பு வாக்குகளைப் பெற்று முதலமைச்சராகிய ஒருவரை கட்சியில் இருந்து விலக்கு, முதல்வர் பதவியில் இருந்து நீக்கு என்று சம்பந்தருக்கு நெருக்கமான கூட்டமைப்பின்  எம்.பி. ஒருவர் கூறியது நியாயமா? அவர் அவ்வாறு கூறியதற்குக் காரணம் அவரிடம் இருக்கக்கூடிய மதவாதம் என்று ஊடகங்கள் பிரசாரம் செய்தால் நிலைமை என்னவாகியி ருக்கும்.

வடக்கின் முதலமைச்சரை நீக்க வேண்டும் என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூறும் அளவில் முதலமைச்சர் பதவி சிறுமைப்பட்டு விட்டதா? அல்லது கூட்டமைப்பு என்ற ஒரு பெரிய அமைப்பு அந்த எம்.பியின் அதிகாரத்திற்குள் அடங்கிவிட்டதா?

அன்பிற்குரிய கம்பவாரிதி அவர்களே! வடக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் தொடர்பில் தாங்கள் உன்னிப்பாக அவதானித்தால் உண்மை தெரியும். முதலமைச்சரை அவஸ்தைப்படுத்துவதற்காக கேள்வி எழுதிக்கொடுத்து முதல்வரிடம் கேட்க வைக்கின்ற மிகமோசமான செயல் நடந்து கொண்டிருக்கின்றது.  ஒரு மாகாண சபை உறுப் பினர் யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் பதவியை மனதில் நினைத்துக் கொண்டு முதலமைச்சரை எதிர்க்கிறார். மற்றொரு உறுப்பினர் பாராளு மன்றப் பதவிக்காக  எழுந்து நின்று முதலமைச்சரைப் பார்த்து சீறுகிறார். நிலைமை எப்படி என்று ஒருமுறை பாருங்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் தாராளமாக முதல்வரைக் கண்டிக்கின்றார். நல்லது ஆனால் நான் ஒன்றை மட்டும் சொல்லுவேன்.

நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் வடக்கின் முதலமைச்சராக இருப்பதால்தான் எதிர்க்கட்சித் தலைவர் தனது கருத்துரைகளைப் பஞ்சமின்றி முன்வைக்க முடிகிறது என்ற உண்மையையும் இங்கு கூறித்தான் ஆக வேண்டும்.

முதல்வரின் இடத்தில் இன்னொருவர் இருப்பாராக இருந்தால் எதிர்க்கட் சித் தலைவர் எழுந்து பேசும் போது எழும் கோசம் வேறு விதமாக இருக்கும்.
ஆக வடக்கின் முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரனை மக்கள் தெரிந்து விட அவரின் நிர்வாகம் ஒழுங்காக நகர்வதற்குத் தடை செய்து விட்டு முதலமைச்சர் தனது நிர்வாகத்தை செம்மையாகச் செய்யவில்லை என்றொரு காட்டாப்பைக் காட்டுவதே நோக்கம்.

இந்த உண்மைகளை நீங்கள் அறியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இதுவே நிதர்சனம். 
எதுவாயினும் தமிழ் மக்கள் பேரவை அரசியல் என்ற எல்லை கடந்து தமிழ்மக்களின் நலன்களைப் பாதுகாக்கின்ற ஓர் அமைப்பு என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழ்மக்கள் பேரவையின் நன்நோக்கத்திற்கு உங்களின் பேராதரவு என்றும் இருக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
இன்றைய சூழ்நிலையில் புதியதொரு அரசி யல் கட்சி அவசியமற்றது என்ற  உண்மையையும் நாம்  உணராதவர் கள் அல்லர்.

எனினும் தமிழ்மக்களின் உரிமைகள் நலன்கள் என்ற விடயத்தை  கூட்டமைப்பிற்குள் இருக்கக்கூடிய ஒரு சிலர் மட்டுமே தீர்மானிப்பது என்பதை தமிழ் மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட் டார்கள். நடந்து முடிந்த ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் தமிழ் அரசியல் தலைமை நடந்து கொண்டமை தமிழ்மக்க ளிடம் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது.
இத்தகைய அவநம் பிக்கைகளை கூட்டமைப்பு தவிர்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்மக்களுக்கான தீர்வுத் திட் டம் என்பதில் இது வரை எங்களிடம் ஒரு தெளிவான சிந்தனையும் இல்லை.

தீர்வுத் திட்ட  வரைவும் இல்லை. இது மிகப் பெரும் குறைபாடாகும். இத்தகைய குறைபாடுகளை நீக்கி ஒரு சுமு கமான முறையில் அரசியல் என்ற எல்லை கட ந்து தமிழ்மக்களின் நலன்களைப் பேணுவதை நோக்காகக் கொண்டே தமிழ்மக்கள் பேரவை இயங்கும். இது  சத்தியம். தங்களின் மேலான ஆலோசனைகள் கிடைக்கப் பெற்றால் அதைப் பெரும் பாக்கியமாகக் கருதுவோம்.   

(முற்றும்)

கம்பவாரிதிக்கு புருசோத்தமனின் பதில்! 04

பேரன்பும் பெருமதிப்பும் மிக்க கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களே!
திருநெல்வேலியில்  நொதேன் தனியார் வைத்தியசாலையின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு நீங்கள் வருகை தந்து உரையாற்றினீர்கள். காலம்  உணர்ந்த உரை அது. தள்ளா விளையுள்ளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு என்ற திருக்குறளை முன்னிறுத்தி  கருத்துரை தந்தீர்கள். எனினும் எங்கள் மண்ணில் தக்காருக்கு ஏற்பட்ட பஞ்சமே அநேகமான பிரச்சினைகளுக்குக்  கார ணமாயிற்று.

தமிழ்மக்கள் எத்தனையோ துன்ப துயரங்களுக்கு ஆளான போதிலும் தமிழ்  அரசியல் தலைமைகள்  தமது சுயநலத்தை ஒருபோதும்  துறக்கத் துணிந்திலர். இதன் விளைவாக தமிழ் மக்களைத் தொட்ட துன்பம் தொலையமாட்டேன் என்று  அடம்பிடிக்கின்றது.
கட்சிக்குள் ஆயிரம் குறைகள் இருந்தாலும் அதனைத் தீர்ப்பதனை விடுத்து  மாற்றணியோடு çகோர்க்க நினைத்த முதலமைச்சரின் செயலில் எனக்குத் துளியளவேனும் உடன்பாடு இல்லை என்று கடுப்போடு கூறியுள்ளீர்கள்.

ஆயிரம் உண்டு இங்கு ஜாதி- எனின் அந்நியர் வந்து புகல் என்ன நீதி என்ற பாரதியின் பாடல் வரிகளை தங்கள் கருத்துக்குத் தக்க தாங்கு தூணாக முன்வைத்தீர்கள்.
இங்கு மாற்றணி என்ப தும் அந்நியர் என்பதும் யாரைக் குறிக்கும் என்பது தான் நம் கேள்வி.
தமிழினம் ஒன்றுவிட்டு ஓரணியில் செயற்பட வேண்டிய காலம் இது. அதற்கான தக்க களமாக தமிழ் மக்கள்  பேரவையை கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் பார்த்திருந்தால் மக்கள் இயக்கமாகிய தமிழ் மக்கள் பேரவைக் குப் பெருந்துணையாக இருந்திருக்கும். எனினும் எங்கள் துரதிர்ஷ்டம் கம்பவாரிதியின்  கண் ணோட்டத்தில் மக்கள் பேரவை ஒரு மாற்று  அணியாகக் காட்சி கொடுத்து விட்டது. 
என்ன செய்வது காலம் பிழைத்தால் மாரீசனும் மானாய்த் தெரிவது  விதியன்றோ. அதைத் தாங்கள்  அறியாதவரும் அல்லர்.

பொதுத்தேர்தல் காலத் தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் நடந்து கொண்ட முறைமை உயர்ந்தோருக்கு ஒரு போதும் உகந்ததல்ல என்று உரைத்தீர்கள்.  
வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஓர் அரசியல் வாதியன்று. அவர் நீதியரசர். நீதிக்குப் பங்கம்  செய்துவிடலாகாது என்பதில் உறுதியாக இருப்பவர்.
கறைபடியா ஒரு நீதி மான் எச்சந்தர்ப்பத்திலும் நீதியை உரைப்பதே தர்மம். அதுவே உயர்ந்தோருக்கு அழகு. அந்த உயர்ந்த- உத்தம  குணத்தையே நீதியரசர் விக்னேஸ்வரன் தேர்தல் காலத்தில்  உரைத்தருளினார்.

நல்லவர்கள், நேர்மையானவர்கள், மக்களுக்குப் பணியாற்றக்கூடியவர்க ளுக்கு  உங்கள் வாக்குகளை வழங்குங்கள் என்று கூறுவது ஒரு நீதியரசரின் கடமை என்பதை தாங்கள் ஏற்க மறுப்பீர்கள் என்று நாம் நினைக்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து அழைத்து வந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் தேர்தல் காலத்தில் மேற்கண்டவாறு கூறியதே சரியானது என்பது நம் தாழ்மையான கருத்து.

பொதுத்தேர்தலின் போது வடபுலத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் சேர்ந்து நின்று தாம் எடுத்த புகைப்படங்களை தேர்தல் விளம்பரத் திற்குத் தாராளமாகப் பயன்படுத்தியிருந்தனர்.  இதில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களும் ஒருவர்.
தேர்தல் காலத்தில் முதலமைச்சர் தடம் மாறியது உங்கள் தமிழ் மக்கள் பேரவையின் அங்குரார்ப் பணத்தோடு உறுதியாகி விட்டது என்று கம்பவாரிதி ஜெயராஜ் கூறிய போது நம் நெஞ்சடைத்துப் போனது  உண்மைதான்.

தன் நாயகன் இராமன் சிறைமீட்க வருவான் என்றிருந்த சீதாப்பிராட்டி சிறையில் இருந்து தப்பிக் கொள்ள அனுமனின் முது கேறிச் செல்லும்  வாய்ப்பிருந்த போதிலும் அது தன் நாயகனுக்கு இழுக் கென்றிருந்தாள்.
எனினும் சிறை மீட்ட பின்பு சீதையின் கற்பு மீது இராமன் கொண்ட சந்தேகம்  இருக்கிறதே அது எத்துணை வலியை சீதைக்குக் கொடுத்திருக்குமோ அதனிலும் பலம டங்கு துன்பத்தை தங்களின் மேற்போந்த கருத்து நமக்குத் தானமாய்த் தந்து போனது.

உங்கள் பேரவை என்று நீங்கள் கூறியிருந்தீர்கள். உங்கள் பேரவை ஒன்று தான் மீள் வாசிப்பில் உங்கள் பேரவையாகவும் இருக்கக்கூடிய  பொதுமை மிக்கது என்பதால் தமிழ் மக்கள் பேரவை உங்களுக்குமானது.
ஒரு கட்சியில் போட்டியிட்டுவிட்டு மாற்றுக் கட்சியுடன் தொடர்பு கொள்வது எவ்வகையிலும் ஏற் புடையதன்று எனக்கூறியிருந்தீர்கள்.

மாற்றுக்கட்சி என்று தாங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்பது தெரியவில்லை. 
சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி. ஆர்.எல்.எப். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு அங்கத்துவக்கட்சி. 

தமிழ்த்தேசியக் கூட் டமைப்பின் பேச்சாளராக இருந்தவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். கூட்டமைப்பின் அனைத்து முடிவுகளிலும் அவரின் பங்கு இருந்து கொண்டேயிருக்கிறது. இதேபோல் புளொட் அமைப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சி என்பது தாங்கள் அறிந்ததே. அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர். அவரும் தமிழ் மக்கள் பேரவை யின் முக்கிய உறுப்பினராகவுள்ளார்.

இதுதவிர இலங்கை தமிழரசுக் கட்சியும் பேரவையில் அங்கம் பெற்றுள்ளது. அந்தக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்கள் பேரவையின் அங்கத்தவர். 

நிலைமை  இதுவாக இருக்கும்போது மாற் றுக்கட்சிகள் என்றுரைப்பது எந்த வகையிலும் நியாயமன்று.
இவை ஒருபுறமிருக்க கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  பொதுத்தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென தாங்கள் விரும்பியதாகக்  கூறியிருந்தீர்கள். அது உங்களின் நடுநிலைத்தன்மைக்கு சான்று பகரும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பை விடுதலைப்புலிகள் தோற்றுவித்தபோது கஜேந்திரகுமார் பொன் னம்பலமே முதன்மையானவராக இருந்தார். அமரர் குமார் பொன்னம்பலம் அவர்கள் கொழும்பில் மிகவும் இறுக்கமான சூழ்நிலையில் இருந்து கொண்டு தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தவர்.
தமிழினத்தின் மீது குமார் பொன்னம்பலம் கொண்ட பற்றை  எவரும் குறைத்து மதிப்பிடமுடியாது. 
தமிழ்மக்களின் உரி மைக்காக குரல் கொடுத் ததால் குமார் பொன்னம் பலத்தை துப்பாக்கி  ரவைகள் துளைத்துக் கொண்டன. இத்தகைய ஒரு தியாகியின் மகனே கஜேந்திரகுமார் பொன்னம்பலம். அவரும்  தமிழ் மக்கள் பேரவையில் அங்கத்துவம் பெற்றுள்ளார். 
எனவே தமிழ் மக்கள் பேரவையை எந்த வகை யிலும் மாற்றுக் கட்சியாக தாங்கள் பார்க்க வேண்டிய தேவை இருக்காது என நம்புகின் றேன்.

(நாளை தொடரும்)

கம்பவாரிதிக்கு புருசோத்தமனின் பதில்! 05 (முற்றும்)

அன்புமிகு கம்பவாரிதி அவர்களுக்கு,
பாகம் நான்கில் தங்களுக்கு எழுதிய விளக்கங்கள்  தமிழ்மக்கள் பேரவையைப் பற்றிய புரிதலுக்குப் போதுமானது என்று கருதுகிறேன். தங்களின் சில கருத்துக்களுடன் எனக்கு நிறையவே உடன்பாடு உண்டு.
எங்கள் அரசியல்வாதிகளின் சுயநலப்போக்கு எங்கள் இனத்திற்கு பெருங்கேடாய்  அமைந்தது என்பது முற்றிலும் உண்மை.

இதைவிடப் பெருந்துயர் முந்தநாள் அரசியலுக்கு  வந்து சேர்ந்த இளையவர்களும் ஊழல் புரிதலிலேயே  கண்ணும் கருத்து மாய் உளர் என்பது உண்மைச் செய்தியாகும்.

வடக்கு மாகாண சபை முதலமைச்சரைச் சந்திக்காத பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சந்தித்தமை ஏற்புடையது என்று கூறியிருந்தீர்கள்.
அதற்காக இந்தியப் பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமரைச் சந்தித்த செய்தியை சான்றாதாரப் படுத்தியிருந்தீர்கள். எனினும் என்னைப் பொறுத்தவரை மேற்குறித்த இரண்டு சம்பவங்களும் வேறுபட்ட தளங்களையும் சூழமைவையும் கொண்டவை.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரதமர்  ரணில் விக் கிரமசிங்க கலந்து கொண்ட நிகழ்வில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டார்கள். இருந்தும் பிரதமர்  ரணில் அவரைத் திரும்பியும் பார்க்க வில்லை.

ஒரு நாட்டின் பிரதமர்  அவ்வாறு நடப்பதற்குக் காரணம் என்ன? பிரதமர்  ரணிலுக்கும் முதல்வர்  விக்னேஸ்வரனுக்கும்   இடையே முன்பின் முரண்பாடுகள் இருந்ததா எனில் எதுவுமே இல்லை.
 இருந்தும் தந்தி என்ற இந்தியத் தொலைக்காட் சிக்கு பிரதமர் ரணில் அளித்த செவ்வி ஒன்றில் பிரதமர் ரணில் எங்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனை பொய்யர் என்றுரைத்தார்.
அந்தோ! கொடுமை. பொய்யர் தம் பொய்யை மெய்யாக்க கூட்டமைப்பு  நினைத்தமை மன்னிக்க முடியாத மகா கயமைத்தனமாகும்.
இத்தகைய கயமைத்தனங்களுடன் சேர்ந்து போவது, அவர்களைத் திருத்துவதென்பது நடக்கமுடியாத காரியம். 
 காரணம் ஒன்று இரண்டு கயமைத்தனங்கள் அன்று. அவர்களின் சிந்தனையே கயமையாகிவிட்டன. இதற் குப் பல உதாரணங்களை  முன்வைக்க முடியும். அதில் தாங்களும் அறிந்த சம்பவம் ஒன்று உண்டு.
பேராசிரியர் சி.க.சிற்றம் பலம் அவர்களை தேசியப் பட்டியலின் முதன்மை வேட்பாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியமித்தது.

பொதுத் தேர்தல் காலத்தின்போது கூட்டமைப்பின் தேசியப் பட்டியலின்  முதன்மை வேட்பாளர் பேரா சிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்களின் தலைமையில் பிரசாரக்கூட்டம் நடைபெ றும் என்று நோட்டீஸ் அச்சிட்டு பகிரங்கப்படுத்தப் பட்ட  அந்தக்கூட்டம் பொன்னாலையில் நடந்தது.

கூட்டமைப்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பலரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா அவர்கள் அந்தக் கூட்டத்தில் உரையாற்றும் போது,

நாங்கள் பாராளுமன்ற உறுப்பினராக வருவமோ இல்லையோ தெரியாது. ஆனால் இந்த மேடையில் உங்கள் வட்டுக்கோட்டைத் தொகுதிக்கு ஒரு எம்.பி. ஏற்கனவே  தெரிவாகியிருக்கிறார். அவர் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் என்று  கணீர் என்ற குரலில் கூறிய போது,  அவையில் இருந்து எழுந்த கரகோசத்திற்குப் பின்னர் நடந்தது என்ன?

தேசியப் பட்டியலின் முதன்மை வேட்பாளராக அறிவித்து அவர்  தலைமையில் கூட்டம் நடத்திவிட்டு வெற்றி கிடைத்து இரண்டு நியமன எம்.பிக்களை கூட்ட மைப்பு  பெற்றுக்கொண்ட போது, 
பேராசிரியர் சிற்றம்பலம் அவர்களுக்கு எம்.பி பதவியைக் கொடுக்காமல் செய்த கொடுமை இராமருக்குக் கைகேயி செய்த கொடுமையிலும் மோசமானது என்பதை அறம் உரைக்கும் பிதாமகராகிய தாங்கள் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஊரெல்லாம் அறிவித்து விட்டு கிடைத்த எம்.பி. பதவியைக் கொடுக்காமல் விட்ட கயமை படைத்தவர்கள் தமிழ்மக்களுக்காக ஏதும் செய்வார்கள் என்று தாங்கள் நம்பினால், நாம் செய்த பாவம் அவ்வளவு தான் என்று மட்டுமே சொல்ல முடியும்.

ஒரு கட்சிக்குள் பிணக்கு என்றால் அது தீர்க்கப்பட வேண்டும் என்று தாங்கள் கூறுவது முழுவதும் உண்மை. அப்படியானால் பேராசிரியர் சிற்றம்பலம்  அவர்களுக்கு எம்.பி.பதவியை கொடுக்காமல் விட்டபோது  தமிழரசு க்கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராசா கொதித்தெழுந்திருக்க வேண்டாமோ?
பேராசிரியர் சிற்றம்பலம் இலங்கைத் தமிழரசுக்  கட் சியின் மூத்த தலைவர். எங்களுக்கு முன்னதாகவே கட்சிக்காகப் பாடுபட்ட ஒரு தலைவர். அவரை ஏமாற்றினால் அது பெரும் பாவம். அவருக்குப் பதவி கொடுக் கத் தவறின் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில்  இருந்து விலகுவேன் என்று மாவை.சேனாதிராசா இடித்துரைத்திருந்தால் அது நீதி என்பேன்.

ஆனால் அநியாயங்கள் நடக்கும்போதெல்லாம் மெளனமாக இருந்த மாவை. சேனாதிராசா, தமிழ்மக்கள் பேரவையில் பேராசிரியர் சிற்றம்பலம் இணைந்த போது பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாக்கூசாமல் சொல்லுகிறாரே! இவர்களை ஒன்றுபடுத்தி- ஒற்றுமைப்ப டுத்தி உரிமை பெறமுடியுமா என்ன?

எவரையும் ஒற்றுமைப்படுத்த முடியும் என்றால்,  இராவணனை இராமன் வதம் செய்தது ஏன்? ஒன்று விட்ட சகோதரர்களை பாண்டவர்கள் பரலோகம் அனுப்பியது எதற்காக?
ஆக,ஒன்றை மட்டும் சொல்லுவேன். தமிழரசுக் கட்சியில் இருந்து பேராசிரியரை நீக்கினாலும்  தமிழரசுக் கட்சி பேராசிரியர் சிற்றம்பலத்திற்குரியதாக இருக்குமேயன்றி அது ஒருபோதும் மாவை தரப்பிற்காக இருக் காது. இருக்கவும் முடியாது.

அன்பிற்குரிய கம்பவாரிதி அவர்களே! வடக்கு மாகாண சபையில் இருக்கக் கூடிய உறுப்பினர்களில் நான்கு ஐந்து பேர் மாகாண சபையில் நடந்து கொள்வதைப் பார்த்தால் தமிழ்மக்கள் பாவம் என்பது உங்களுக்குத் தெரியவரும்.

அந்தளவிற்கு அந்த உறுப்பினர்கள் நக்கலும் நையாண்டித்தனமும் செய்கின்றனர். மக்களால் தெரிவு செய் யப்பட்ட இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது எந்தவகையிலாவது நியாய மாகுமா?

யாழ்ப்பாணத்திற்கு வந்த இந்தியப் பிரதமர் மோடி எங்கள் முதலமைச்சருக்குக் கொடுத்த மதிப்பு;  யாழ்ப் பாணத்திற்கு வருகை தந்த முன்னாள்  அமைச்சர் ப.சிதம்பரம் வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு  சிறந்த தலைவர் என்று சூட்டிய புகழாரம் என்பவற் றால் தமிழ்மக்கள் தலை நிமிர்ந்து, நல்ல தலைவன் நமக்குக் கிடைத்தார் என்று  புளகாங்கிதம்  அடையும் போது,மூன்று,நான்கு இளம் மாகாண சபை உறுப்பினர் கள் முதலமைச்சரை அவமதிக்குமாறு செயற்படுவது தம் தந்தைக்கு ஒப்பானவரை இழிவுபடுத்துவதற்குச் சமனன்றோ!

இத்தகையவர்கள் எங்கள் மாணவர்களுக்கு  எங்ஙனம் முன்மாதிரியாக இருக்க முடியும். கொழும்பிலுள்ள கூட்டமைப்பின்  ஒரு எம்.பிக்காக இவ்வளவு தூரம் அவர்கள் நடந்து கொள்கிறார்கள் என்றால்;  எங்கள் உறவுகளுக்கு புதுமாத்தளனில்,  முள்ளிவாய்க்காலில் நடந்த கொடுமை பற்றிய நினைவு இவர்களிடம் சிறி தளவேனும் உண்டா?

எதுவாயினும் அன்புக் குரிய கம்பவாரிதி அவர்களே! என்றோ ஒரு நாள் தங்களின் ஆசி தமிழ் மக்கள் பேரவைக்கு  கிடைக்கும் என்பது என் ஆத்மபலத்தின் மீதான நம்பிக்கை.
அன்புமிகு கம்பவாரிதி அவர்களே! 1988 ஆம் ஆண்டு  தங்களை நேரில் சந்தித்துக் கதைக்கும் பேறு பெற்றேன்.

புலவர் ஈழத்துச் சிவானந்தரின் ஆலயமணி என்ற சஞ்சிகையின் வெளியீட்டிற்காக தாங்களும் மற்றும்  திருநந்தகுமார், சித்தாந்த சரபம் கணபதிப்பிள்ளை, புலவர்  ஈழத்துச் சிவானந்தன் ஆகியோரும் என்னூ ருக்கு வந்திருந்தீர்கள்.அந்த நிகழ்வில் மாணவனாக இருந்த எனக்கும் உரையாற்ற சந்தர்ப்பம் தரப்பட்டது. என்னுரை தொடர்பில் உங்கள் வாழ்த்தையும் பெறும் பேற்றை அன்றைய நாளில் பெற்றேன்.
எனினும் என்  எழுதாக் குறை காரணமாக தங்களைச் சந்திக்க வேண்டும் என்ற என் அவா இருபத்தைந்து வருடங்களுக்குப் பின்பு நிறைவேறியது.

ஆம், 2013 இல் தங்களைச் சந்திக்கும் பாக்கியம் பெற்றேன். தாங்கள் நடுவராக இருக்க, தமிழகத்தின் தகைசார் சான்றோர்களுடன் இச் சிறியேனும் பட்டி மண்டபத்தில் வாதம் புரிய சந்தர்ப்பம் தந்தீர்கள்.
2015 இல் யாழ்ப்பாணத்தில் நடந்த கம்பன் விழாவின் வழக்காடு மன்றத்தின் போது தமிழகத்தில் இருந்து வருகை தரவேண்டிய தமிழறிஞரின் வருகை தாமதமாக, மூவர் அடங்கிய நீதி  ஆயத்தில் நம்மையும் பொருட்டாய்க் கருதி அதில் இருத்தி மகிழ்ந்தீர்கள். இந்த உயர் பெரும் உத்தமக் குணம் யார்க்குள.
சிறியவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுத்து  அவர்களையும் ஆளாக்க வேண்டும் என்ற தங்களின் உயர்ந்த நினைப்பே உங்கள் புகழை உலகம் முழுவதும் பரவச் செய்கிறது.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் என்று நீங்கள் அடிக்கடி சொல்வதுண்டு.

ஆகையால் தமிழ்மக்கள் பேரவையின் கருமம் கண்டு தாங்கள் மெய்ப்பொருள் அறிவீர்கள். அப்போது உங்களின் ஆசியும் ஆத்ம பலமும்  தமிழ்மக்கள் பேரவைக்கு நிச்சயம் கிடைக்கும் என்பது என் அசையாத நம்பிக்கை.

அதுவரையில்;  அரசியல் என்ற எல்லை கடந்து  தமிழ் மக்களின் நலன் கருதிய ஒரு பலமான மக்கள் அமை ப்பு அவசியம் என்று  தாங்கள் கருதினால், தமிழ் மக்கள் பேரவையின் பணி குறித்த உங்கள் அவதானத்தை கரிசனையோடு அருளுக. 

அது தமிழ்மக்கள் பேரவை நம் அனைவரினதும் அமைப்பு என்ற பொதுமையை நிச்சயம் ஏற்படுத்தும்.இதுவே நீங்கள் குறிப்பிட்ட ஆச்சரியமாகவும் இருக்கும். 

(நன்றியுடன் முற்றும்)
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila