இப்போது நிலைமை எவ்வாறாக உள்ளது என்பதை நாம் கூறி நீங்கள் அறிய வேண்டிய தில்லை.கொள்ளை, களவு, போதைவஸ்துப் பாவனை என்ற அக்கிரமங்கள் தலைவிரித்தாடுகின்றன.இதற்கு மேலாக வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசம் சொல்லிமாளா. இதுதான் என்றால், வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை அடிப்பவர்கள், பாலியல் வன்மத்தில் ஈடுபடுவதான தகவல்கள் இதயத்தை கருக்கி விடுகின்றன.
வட மாகாணம் முழுவதும் படையினரின் கட்டுப்பாடும் பொலிஸ் நிர்வாகமும் என்று கூறிக் கொண்டாலும் நிலைமை எப்படியாக உள்ளது என்பது உங்களுக்கே வெளிச்சம்.இதை நாம் கூறுவதற்காக முழுப்பொறுபபையும் உங்கள் மீது சுமத்தவும் நாம் விரும்பவில்லை.
ஆனால் பொலிஸாரின் செயற்பாடு போதாது என்பதற்கு அப்பால், பொலிஸாரிடம் இனப்பாகுபாடு உள்ளதோ என்ற சந்தேகத்தையும் சில சம்பவங்கள் ஏற்படுத்தவே செய்கின்றன.உதாரணத்துக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வேம்படி மகளிர் கல்லூரி என்பது தேசிய பாடசாலையாக இருப்பதுடன் வடமாகாணத்தில் தமிழர்களுக்கான மிகச்சிறந்த பெண்கள் பாடசாலை என்பதும் குறிப்பிடததக்கது.
ஆனால் அந்தப் பாடசாலை நிறைவடைந்ததும் மாணவிகள், அவர்களை அழைத்துச் செல்லும் பெற்றோர்கள், பேருந்து வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார், வான் என ஏகப்பட்ட வாகனங்கள் வேம்படி மகளிர் கல்லூரி வீதியை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.இதுதவிர, கனரக வாகனங்களும் அந்த வீதிக்குள் வந்து மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்துகின்றன.
இவ்வாறான போக்குவரத்து நெருக்கடி இருக்கின்ற போதிலும் கடமையில் ஈடுபட் டுள்ள போக்குவரத்துப் பொலிஸார் ஒருவர் ஏதும் செய்ய முடியாமல் திக்குமுக்காடுவார். இதுவே நிலைமை என்றாகிறது.
இத்தகைய சூழ்நிலை மிக மோசமான விபத்துக்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை தந்துவிடலாம்.
இதுபற்றிப் பல தடவைகள் எழுதியும் தங் கள் தலைமையின் கீழ் இயங்கும் பொலிஸ் நிர்வாகம் ஏனோதானோ என்று எவ்வித அக்கறையும் இல்லாமல் இருக்கிறது.
இத்தகைய பொலிஸாரின் போக்கு தமிழ் மாணவிகள், தமிழ்ப் பெற்றோர் எது நடந்தாலும் பரவாயில்லை என்ற இனவஞ்சகம் சார்ந்ததோ என்று நினைக்குமளவுக்கு நிலைமை உள்ளது.எனவே இங்கு எழுதப்படுகின்ற இக்கடிதமானது ஒரு சிறிய வேலையையாவது உங்கள் மூலம் செயற்படுத்துவதற்கானது.
ஆகையால் அன்பார்ந்த வட மாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அவர்களே! யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியின் வீதியை பாடசாலை நிறைவடையும் நேரத்திலாவது ஒரு வழிப்பாதையாக்குங்கள்.
இதனைச் செய்வதன் மூலம் போக்குவரத்து நெருக்கடியை முற்றாகத் தவிர்க்கலாம்.