அவர், மேலும் குறிப்பிடுகையில், "வன்னி மாவட்டத்தில் மக்களின் உளநல பாதிப்புப் பிரச்சினை பாரிய பிரச்சினையாக தலைதூக்கியுள்ளது. எனவே, அங்கு உளநல வைத்தியர்களின் தேவை அதிகரித்துள்ளது. எமது மக்கள் முள்ளிவாய்க்கால் வரை பலாத்காரமாக அடைக்கப்பட்டு, கொலைகளைத் தங்களது கண்களால் கண்டவர்கள். அவ்வாறு கொலைசெய்யப்பட்ட சடலங்கள் மீதேறி தம்மைப் பாதுகாத்துக்கொண்டு வெளியே வந்த மக்கள் செட்டிக்குளம் முகாமில் திறந்தவெளிச் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். குடும்ப உறவுகளை யுத்தத்தில் இழந்தனர். பல உறவுகள் காணாமல்போயினர். யுத்தத்தில் உயிரிழந்தவர்களினதும், காணாமல்போன உறவுகளினதும் தகவல்கள் கிடைக்காமல் இன்றும் எமது மக்கள் அங்கலாய்த்துக்கொண்டுள்ளனர். இதனால் பெரும்பாலானோர் உளநலம் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான பெண்கள் விதவைகளாகியுள்ளனர். இது மேலுமொரு சமூகப் பிரச்சினையாகும். இவ்வாறு பல பாதிப்புகளைச் சந்தித்த எமது மக்களை கடந்த அரசு முழுமையாக மீள்குடியேற்றவில்லை. அந்த மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுக்கவில்லை. அதுமட்டுமல்லாது, உலக சுகாதார ஸ்தாபனம், உலக உணவுத்திட்டம் உட்பட ஐ.நாவின் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பல வடக்கில் தமது தேவைகளை முன்னெடுத்தன. ஆனால், கடந்த ஆட்சியாளர்கள் இவர்கள் அனைவரையும் நாட்டைவிட்டு வெளியேற்றினர். இதனால் அந்த அமைப்புகள் மூலம் மக்களுக்குக் கிடைத்த சேவைகளும் இல்லாதுபோயின. இதேவேளை, இன்று அடையாளம் காணப்படமுடியாத புலனாய்வுப் பிரிவினர்களாலும் வடபகுதி மக்கள் உளநல பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பிள்ளைகளும் உளநல பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் வடக்கிற்கு உளநல வைத்தியர்களின் தேவை அதிகரித்துள்ளது. உளநல வைத்தியர்களைப் பெற்றுக்கொடுக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றார். |
வடக்கில் அடையாளம் தெரியாத புலனாய்வுப் பிரிவினர்! - நாடாளுமன்றில் சிவமோகன் எம்.பி
Related Post:
Add Comments