நேற்றைய தினம் (திங்கட்கிழமை) அரசியல் கைதி விவேகானதனூர் சதீசின் விடியலைத் தேடும் இரவுகள் நூல் வெளியீடு பிற்பகல் 3.00 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அங்கு சிறப்புரை ஆற்றியிருந்தார். அதில் அவர் தமிழ்மக்களின் தீர்வுத்திட்டம் எப்படி அமையப்போகின்றது எனவும் தெரிவித்திருந்தார். அவ்வுரையின் ஒரு பகுதி…
2016 இல் தீர்வு என்று ஜயா சொன்னது சில மாதங்களுக்கு முன்னர் சிலர் சில நடவடிக்கைகளை எடுத்த போது கொஞ்சம் பொறுத்திருங்கள் என்று சொன்னோம் . இரண்டு மாதங்களில் ஒரு இடைக்கால அறிக்கை வருகிறது அதுவரை பொறுத்திருங்கள் என்றும் சொன்னோம். இடைக்கால அறிக்கை வருகின்ற 19 ஆம் திகதி காலை ஒன்பது முப்பது மணிக்கு அரசியலமைப்பு பேரவையிலே சமர்ப்பிக்கப்படவுள்ளது. அது முதலாவது இடைக்கால அறிக்கை. இரண்டாவது இடைக்கால அறிக்கை முழுமையாக இடைக்கால அறிக்கை அதிகார பகிர்வு சம்மந்தமாக நாட்டின் ஆட்சிமுறை சம்மந்தமாக என எல்லாவற்றையும் உள்ளடக்கிய இரண்டாவது இடைக்கால அறிக்கை டிசம்பர் மாதம் பத்தாம் திகதி முன்தாக அரசியலமைப்பு பேரவையிலே சமர்பிக்கப்படும்.
அது சமர்ப்பிக்கபடுகின்றபோது எப்படியான தீர்வு முன்வைக்கப்படுகிறது என்று அனைவருக்கும் பகிரங்கமாக முன்வைக்கப்படும். எனவே 2016 இற்குள்ளே அந்த தீர்வுத் திட்டம் எப்படியானது என்பது பகிரங்கமாகவே அனைவருக்கும் தெரியவரும்.
ஆகையினாலே இதுவரை பொறுமைகாத்த எங்களுடை மக்களுக்கு நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். கொஞ்சம் பொறுமையாக இருங்கள் சில சில விடயங்களை பேச்சு வார்த்தை நடக்கின்ற போது வெளிப்படுத்த முடியாது. என்னென்றால் பேச்சுவார்த்தை மேசையில் அசௌகரியம் ஏற்பட்டு விடும் பிறகு இணக்கப்பாடு என்பது கடினம். இதனை மக்களிடம் சொல்லியிருந்தோம் மக்கள் அதனை சரியாக செவிமடுத்திருந்தார்கள். எனவே திகதிகள் குறிக்கப்பட்டிருக்கிறது அதன்போது தீர்வு பற்றிய விபரங்கள் வெளிப்படுத்தப்படும் அப்போது அது தொடர்பில் பகிரங்க விவதாங்கள்,விமர்சனங்கள் எல்லாத் தரப்புக்கள் மத்தியிலும் ஏற்படும்.
மிகவும் முக்கியமாக தென்பகுதியில் நாட்டை பிரிப்பதற்கான புதிய அரசியலமைப்பை உருவாக்கிவிட்டார்கள் என்று பாரிய எதிர்ப்புகள் ஏற்படும். எங்களுடைய பக்கத்தில் இருந்தும் எதிர்ப்பு ஏற்படும். இது தனிநாடு இல்லை இதில் அது இல்லை, இது இல்லை என்று.
ஒட்டுமொத்தமாக எங்களுடைய அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுகின்ற, தனித்துவத்தை பேணுகின்ற அதேவேளை மற்ற மக்களுடன் சேர்ந்து இந்த தீவிலேயே நாங்கள் சுமூகமாக வாழுகின்றதான, அனைவருக்கும் மதிப்பளித்து வாழ்கின்றதான ஒரு ஏற்பாடு அந்த புதிய அரசியலமைப்பு ஏற்பாட்டிலே இருக்குமாக இருந்தால் அது எங்களுடைய முன்னேற்றத்திற்கு ஒரு அத்திவாரமாக இருக்கும்.
எப்படியான ஆட்சி முறையாக இருந்தாலும் இந்த நாட்டில் வாழ்கின்ற எல்லா இன மக்களுடனும் நாங்கள் ஒற்றுமையாக வாழவேண்டும்.அது ஒரு நாடாக இருந்தால் என்ன ஆட்சி முறையிலேயே நாங்கள் ஒற்றுமையாக சேர்ந்து சகோதரத்துவமாக வாழ பழகவேண்டும். சண்டை பிடிக்காமல் எங்களுடை விபரங்களை நாங்கள் பேசி தீர்க்கபழக வேண்டும். பேசி தீர்க்க பழகுவது சிலவேளைகளில் கடினமான செயல் . ஆனால் அதை விட்டால் வேறு வழியில்லை. திரும்பவும் நாங்கள் அதளபாதளத்திற்குள் செல்லாமல் மீண்டெழுந்து எங்களுடைய நிலத்தில் உரித்தோடு ஆனால் இந்த தீவும் ஏனைய மக்களோடு பகிர்ந்துகொண்டிருக்க நாடு என்ற அடிப்படையிலே வாழாவிட்டால் நாங்கள் அழிவதை தவிர வேறு வழியிருக்காது. ஆகவே நிதானமாக சிந்தித்து வாக்களிக்கிற மக்கள் நிதானமாக சிந்தித்து ஆணைகொடுக்கிற மக்கள் இப்படியான தீர்வுகள் வருகின்றபோது அதனை சரியாக பகுத்தாராய்ந்து எங்களுக்கு சரியான சமிஞ்கைகளை கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்