யுத்தத்தின் இழப்புகளை - அதன் வடுக்களை இன்றுவரை சுமந்து நிற்கின்ற குடும்பங்கள் பற்றி ஒட்டு மொத்த தமிழினமும் சிந்திப்பது அவசியமாகும்.
போர் முடிந்துவிட்டது என்பதற்கு அப்பால் போருக்குள் அகப்பட்டு எல்லாவற்றையும் இழந்த குடும்பங் களின் எதிர்காலம் எப்படியாகப் போகிறது என்ற ஏக்கம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மட்டுமே உரிய தாகி விடுமாயின் அது மிகப்பெரும் கொடுமையாகும்.
தமிழ் மண்ணில் நடந்த விடுதலைப் போராட்டத்தின் போதான இழப்புக்கள் அனைத்து தமிழ் மக்களுக்கும் ஆனது. இருந்தும் மனித மற்றும் சொத்திழப்புக்களை அந்தந்த குடும்பங்களுக்கு ஆக்கிவிட்டு நாம் அமைதி யாக ஆறுதலாக இருந்து விடமுடியாது. இருந்து விடவும் கூடாது.
எனவே போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு உதவிக்கரம் நீட்டப்படுவது மிகமிக அவசியமானது. அதிலும் குறிப்பாக குடும்பத் தலைவனை இழந்த குடும்பங்கள்; உழைக்கக் கூடிய பிள்ளைகளைப் பறிகொடுத்த குடும்பங்கள்; போரில் அகப்பட்டு அங்கவீனமானவர்களின் குடும்பங்கள் தொடர்பில் அவர் களின் ஜீவனோபாயத்திற்கும் வாழ்வாதாரத்திற்குமான உதவித் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இந்த உதவித்திட்டங்களை அரசு தரும் என்று எதிர்பார்ப்பது பிரயோசனமற்றது.
ஆக, நாமே நமக்குத்துணை என்ற அடிப்படையில் இந்த உதவித்திட்டங்கள் பற்றி சிந்திக்க முடியும். வெளி நாட்டுப் பிரதிநிதிகள், வெளிநாட்டுத் தூதுவர்கள் நம் மண்ணுக்கு அடிக்கடி வந்து போகிறார்கள். அவர்கள் நம்மிடம் வருகிறபோது இனப்பிரச்சினைத் தீர்வு; இராணுவப் பிரசன்னம் என்பன பற்றியே நாம் தொடர்ந்து முறையிட்டு வருகிறோம்.
எங்கள் பிரச்சினை தொடர்பில் அறிய அவர்கள் ஆர்வமுற்று நம் மண்ணுக்கு வந்து நம்முடன் பேசுகின்ற வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் அவலங்கள் பற்றி எடுத்துக் கூறுவதுடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் வேலை வாய்ப்புகளை, சுயதொழில் முயற்சிகளை உருவாக்கிக் கொடுப்பதற்கான உதவிகளையும் அவர்களிடமிருந்து நாம் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் ஜீவனோபாயம் குறித்து நாம் அனைவரும் ஆறுதல் அடைய முடியும்.
இவையாவற்றுக்கு மேலாக கைத்தொழில் துறைகளை உருவாக்கி அதில் வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதற்கான உதவித்திட்டங்களைப் பெற்றுக் கொள்வதும் இந்த இடத்தில் அவசியமாகின்றது.
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் சமூகத்தின் எதிர்காலம் எப்படியாக அமையும் என்ற ஆய்வுக்காக வரு கின்ற வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடனான சந்திப்பை தவிர்த்துக் கொள்வது நல்லது என்பது நம் தாழ்மை யான கருத்து.
இது தவிர போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் தொடர்பில் புலம்பெயர் உறவுகளின் நிதியுதவித்திட்டங்களும் தமிழர் தாயகத் திலுள்ள வரலாற்று பெருமைமிக்க இந்து ஆலயங்களும் மற்றும் தேவாலயங்களும் ஆக்கபூர்வமான திட்டங்களை வகுத்துக் கொள்வது எங்கள் இனத்தின் கலாசாரம், பண்பாடு என்பவற்றை கட்டிக்காத்து எம் இனத்தின் இருப்பை பாதுகாக்க பேருதவியாக அமையும்.
தமிழர் தாயகத்தில் இருக்கக் கூடிய இந்து ஆலயங்களை புனரமைப்பதில் புலம்பெயர் உறவுகள் கணிச மான நிதியைக் கொட்டித்தள்ளுகின்றனர். கோடிக் கணக்கான ரூபாய்களை தனிமனிதர்கள் செலவிட்டு கோபுரம் கட்டும் பணி நடக்கின்ற அதை நேரம், எங்கள் மக்களின் உயர்வான வாழ்விற்கும் உதவுவது தர்மப் பணியாகும்.
இந்தத் தர்மப்பணியை செய்வதற்கு அனைவரும் முன்வரவேண்டும். இதுவே இன்றைய அவசர அவசிய தேவையாகும்.