வட மாகாணத்தின் முதல் சொகுசு கடை கட்டிடத் தொகுதி மற்றும் கார்கில்ஸ் வங்கி கிளை திறந்து வைக்கும் நிகழ்வு கெளரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (20) மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு உரையாற்றிய முதலமைச்சர்,
தலைவர் அவர்களே, அதிமேதகு ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேனஅவர்களே, கௌரவ அமைச்சர்களே, அமைச்சுக்களின் செயலாளர்களே, காகில்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி அவர்களே, மற்றைய அதிகாரிகளே, சிறப்பு விருந்தினர்களே, சகோதரச கோதரிகளே ,குழந்தைகளே!
இன்றைய தினம் இந்தநிகழ்ச்சியில் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுடன் சேர்ந்து பங்குபற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். யாழ் நகரத்தின் மத்தியிலே போதனா வைத்தியசாலைக்கு முன்பாக சுமார் 35 வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணம் கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான விற்பனை நிலையம் ஒன்று மிகப் பெரிய அளவில் இந்த இடத்தில் இயங்கிவந்தது.
எனினும் 1983களில் நடைபெற்ற அசம்பாவிதங்கள் காரணமாக இந் நிலையம் தீயூட்டப்பட்டு முற்று முழுதாக எரிந்து சாம்பலாகியதுடன் பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் அழித்தொழிக்கப்பட்டன.
இதனால் பங்குதாரர்களாக இருந்த இப்பகுதியைச் சேர்ந்த பல நூறு பொதுமக்கள் தமது பங்குடமைகளை இழந்ததுடன் யாழ்ப்பாணம் கூட்டுறவுச் சங்கமும் மீளமுடியாத கடன் பழுவிற்கு ஆளாகி அந்நிலையத்தை மீண்டும் இயக்க வைக்க முடியாது போயிற்று.
எனினும் யாழ்ப்பாணம் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான அந்தக் காணி இறுதி வரை கூட்டுறவுச் சங்கத்தின் பெயரிலேயே தக்கவைக்கப்பட்டிருந்தது. அக் காணியிலேயே இந்த காகில்ஸ் நிறுவனத்தின் இந்தக்கட்டடம் நீண்ட கால குத்தகை அடிப்படையில் எடுத்து அமைக்கப்பட்டுள்ளது.
எமது மக்களுக்கு இவ்வர்த்தக நிறுவனத்தின் பல்வேறு வகையான வர்த்தக முயற்சிகள், கடைமையங்கள், போன்றவை அமைக்கப்பட்டுத் தரப்பட்டுள்ளன. சர்வதேச உணவகமான KFC , 3-டி சினிமா அனுபவத்தைத் தரும் ஒரு பல் திரை தியேட்டர், மற்றும் அடித்தள வாகனத் தரிப்பிடம் என அனைத்து வசதிகளையும் கொண்டதாக இந்த கட்டடம் திகழ்கின்றது.
அதில் இன்று காகில்ஸ் வங்கியின் 10வது கிளை யாழ்ப்பாணத்தில் அதி மேதகு ஜனாதிபதி கௌரவ மைத்திரி பால சிறிசேன அவர்களினால் திறந்து வைக்கப்படுவது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்துள்ளது.
இதன் மூலம் வடக்கிற்கான காகில்ஸின் முதலீடு ரூபா.1.3 பில்லியனை எட்டியுள்ளது என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இற்றைக்கு 6 ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் பின் தங்கிய ஒரு கிராமம் போல் காட்சியளித்த யாழ்ப்பாண நகரம் விரைவான புதிய கட்டடங்களின் தோற்றத்தின் காரணமாகமிளிரத் தொடங்கியுள்ளது.
எனினும் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தொடர்ச்சியான போரினால் ஏற்பட்ட வடுக்களின் பயனாக இரவு 7 மணிக்குள் யாழ் நகரம் முற்று முழுதாக முடங்கிவிடுவது தவிர்க்க முடியாததாகியிருந்தது.
ஆனால் இது போன்ற வர்த்தக நிறுவனங்களின் தோற்றத்தின் மூலம் இரவு 10 மணிவரை மக்கள் தமக்குத் தேவையான உணவுப் பொருட்கள், காய்கறி, பால்மா என அனைத்துப் பொருட்களையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக் கொண்டு செல்லக் கூடியதாக இப்போது இருப்பது மகிழ்வைத் தருகின்றது.
இரவு நடமாட்டம் இதன் பயனாக நீட்டப்பட்டுள்ளது. ஆனால் இப் பகுதிகளில் உள்ள எம் மக்களின் குறைகளைப் பற்றியும் நாம் குறிப்பிடவேண்டியது அவசியமாகும்.
கடந்த நீண்ட காலப் போரின் பின்னராக இங்கே பலமாடிக் கட்டடங்கள் உருவாக்கப்பட்டுவருகின்றன. அவற்றில் இது போன்ற பெரிய விற்பனை நிலையங்கள் கூட உருவாக்கப்படுகின்றன.
ஆனாலும் இக் கட்டட வேலைகளுக்கும் மற்றும் இந்த நிறுவனங்களில் கடமையாற்றுவதற்கும் ஊழியர்களை தென் பகுதியில் இருந்து அழைத்து வந்து தமது காரியங்களை ஆற்றுவது எம்மை வேதனைக்குள்ளாக்குகின்றது.
நீண்ட கால கொடிய யுத்தத்தின் பயனாக தமது வாழ்விடங்களை இழந்து சொத்துச் சுகங்களை இழந்து விவசாய நிலங்களை விட்டு நீண்ட தூரங்கள் இடம் பெயர்ந்து வறுமையில் இருந்து மீளமுடியாது அல்லற்படுகின்ற எமது இளைஞர், யுவதிகள் தொழில் முயற்சிகள் எதுவுமின்றி தினமும் எமது அலுவலகத்தை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
இவ்வாறு துன்பப்படுகின்ற இந்த இளைஞர் யுவதிகளை அவர்களின் துன்பநிலையில் இருந்து தூக்கி விடவேண்டிய பாரிய பொறுப்பு இங்கே பெரியளவில் தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற வர்த்தகப் பெரு மக்களினதும் மற்றும் முதலீட்டாளர்களினதும் கைகளிலேயே தங்கியுள்ளது.
இது பற்றி நான் பல இடங்களில் முன்பும் குறிப்பிட்டிருக்கின்றேன். அதற்கு எமக்குக் கிடைக்கின்ற பதிலோ யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு புதிய தொழில் முயற்சிகளில் அனுபவம் இல்லை. அதனாலேயே தெற்கில் இருந்து பயிற்றப்பட்ட தொழிலாளர்களை இங்கேகொண்டு வருகின்றோம் என்பதே.
இக் கூற்று சில வேளைகளில் சரியானதாகவும் அமையக்கூடும். அப்படியானாலும் இங்கிருக்கக்கூடிய இளைஞர் யுவதிகள் தமது தொழிலில் திறன் பெறுவது எப்போது? புதிய யுக்திகளை பழகிக் கொள்வது எப்போது? எவரிடமிருந்து பழகுவது?
எமது மக்களிடமிருந்து மிகக் கூடுதலான வருமானங்களைப் பெறுகின்ற பற்பல நிறுவனங்கள் தாம் பெறுகின்ற இலாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை இப்பகுதி இளைஞர் யுவதிகளுக்கு அவர்களின் தொழில் முன்னேற்றத்திற்காகச் செலவு செய்வதில் தவறில்லை என்றே நான் கருதுகின்றேன்.
ஒவ்வொரு நிறுவனமும் Corpoate Social Responsility (CSR) எனப்படும் இணை அமைப்புக்களின் சமூகக் கடப்பாடு என்ற ரீதியில் தாம் பெறும் இலாபங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மக்களுக்கே திரும்பவும் கொடுக் கமுன் வரவேண்டும்.
இன்று வர்த்தக உலகில் மூன்று அடிப்படைக் கவனிப்புக்கள் மனதிற் கெடுத்துவரப்படுகின்றன. முதலாவது இலாபம் ஈட்டல், அடுத்து சமூக நலன் பேணல் மூன்றாவது சுற்றுச் சூழலைப் பேணல். ஆகவே இலாபம் ஈட்டல் ஒன்றே குறிக்கோளாக நிறுவனங்கள் வர்த்தகத்தில் ஈடுபடாது மேற்கண்ட இதர இரண்டு விடயங்களையும் மனதிற்கு எடுக்கவேண்டும்.
இவை பற்றியெல்லாம் UNGOLAL COMPACt என்ற 10 கோட்பாடுகளில் உள்ளடக்கியுள்ளார்கள். சமூகத்தோடு ஒத்துழைத்து வர்த்தக நிறுவனங்கள் வாழத்தலைப்படவேண்டும் என்பதே இன்றைய உலகளாவிய எதிர்பார்ப்பாக உள்ளது.
கார்கில்ஸ் நிறுவனத்தைப் பொறுத்த வரையில் நான் மேலே குறிப்பிட்ட தொழிலாளர்களை வேலைக்கமர்த்தும் விடயமானது அவர்களுக்கு பொருத்தமற்றது என்றே கருதுகின்றேன். ஏனெனில் இங்கே கடமையில் ஈடுபட்டுள்ள அல்லதுஈ டுபடுகின்ற கூடுதலான பணியாளர்கள் இப்பகுதியை சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகின்றது.
எனினும் கட்டட முயற்சிகளுக்காக ஈடுபடுத்தப்படுபவர்கள் 95 சதவிகிதத்திற்கு மேலானவர்கள் தென்பகுதியைச் சேர்ந்தவர்களாகவே காணப்படுகின்றனர். அதுபற்றியும் நான் ஆராய்ந் துபார்த்தேன். எமது இளைஞர் யுவதிகள் காலை ஒன்பதுக்கு வந்து மாலை நான்கு மணிக்குப் போக எத்தனிக்கின்றார்கள் என்றும் தேநீர், மதிய உணவுகளுக்கு அதிக நேரம் செலவு செய்கின்றார்கள் என்றும்.
தெற்கில் இருந்துவருபவர்கள் இங்கேயே முகாமிட்டு இரவு பகல் பாராது வேலையைச் செய்து கொடுத்துவிட்டுப் போகின்றார்கள் என்றும் அறிய வந்தேன். இந்நிலை மாறவேண்டும். எமது இளைஞர் யுவதிகள் தரம் மிக்கவர்களாகவும் சமூகக் கடப்பாடு புரிந்தவர்களாகவும் தம்மை மாற்றிக் கொள்ளவேண்டும்.
இல்லையேல் வர்த்தகசமூகம், முதலீட்டுச் சமூகம் அவர்களை ஒதுக்க முற்படுவர். தொழிற்திறன்தான் வாணிப, வர்த்தகச் செயல்பாடுகளுக்கு ஆணிவேர் என்பதை நாங்கள் மறத்தலாகாது.
எனவே இவற்றை எமது இளைஞர் யுவதிகள் கருத்தில் கொள்ளும் அதேநேரம் முதலீட்டாளர்கள் எதிர்வரும் காலங்களிலாவது துன்பப்பட்ட இப்பகுதி இளைஞர் யுவதிகளுக்கு உங்களது அன்புக் கரங்களை நீட்டி அவர்களை அடிப்படை மட்டத்திற்காவது உயர்த்துவதற்கு முயற்சிப்பீர்கள் என எண்ணுகின்றேன்.
இன்று யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் பல்வேறு வங்கிக் கிளைகள் இங்கே சேவையில் ஈடுபடுகின்றன. எனினும் உங்களுடைய இந்த காகில்ஸ் வங்கி சிறப்பானதொரு சேவையை எமது மக்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கின்றோம்.
100 சதவிகிதம் இலாப நோக்கை மட்டும் கருத்திற் கொள்ளாது இப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கான விவசாயக் கடன் திட்டங்கள், இலகு தவணைக்கடன் திட்டங்கள், சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான கடன் திட்டங்கள் என சிறந்த பல திட்டங்களை அறிமுகப்படுத்தி இங்குள்ள விவசாயிகள், சிறு தொழில் முயற்சியாளர்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் அமைப்புக்கள் ஆகியோருக்கு உதவ முன்வரவேண்டும் என அபிப்பிராயப்படுகின்றேன்.
அதேபோன்று மத்தியதர அல்லது சிறிய அளவிலான விவசாய முயற்சியாளர்களின் விவசாய உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான வசதி வாய்ப்புக்களையும் இது போன்ற நிறுவனங்களின் ஊடாக இலகுவாக மேற்கொள்ள முடியும்.
சிறியளவிலான விவசாய உற்பத்திகளை இங்கிருந்து தம்புள்ளைக்கோ அல்லது கொழும்பிற்கோ விற்பனைக்காகஎ டுத்துச் செல்வது என்பது முடியாத காரியம். இவற்றை உள்ளுர் சந்தைகளில் சந்தைப்படுத்துவதற்கு சந்தை வாய்ப்புக்களும் அரிதாகவே காணப்படுவதால் அவ் வாய்ப்புக்களை ஏற்படுத்தி ஊக்குவிப்பது அவசியமாகும்.
எனவே எனது இக் கருத்துக்களை நீங்களும் மனதில் எடுத்து இப் பகுதி மக்களின் வாழ்வாதார நிலையை சற்றுமேன்மையடையச் செய்ய எம்முடன் இணைந்து செயற்படுமாறு வேண்டிக் கொள்கின்றேன்.
தெற்கு மக்களுக்கு நான் எதிர்புடையவன் அல்ல. ஆனால் போரிலிருந்து விடுபட்ட மக்கள் அரை வயிறு கஞ்சிக்கு அல்லல்ப்படும் போது தெற்கிலிருந்து வேலையாட்களை வருவிப்பது தவறு என்றே கூற வந்தேன்.
இந்த நிகழ்விலே கலந்து கொள்வதற்காக தமது பல வேலைப்பளுக்களுக்கு மத்தியிலும் இங்கே வந்திருக்கின்ற கௌரவ ஜனாதிபதி அவர்களை இத்தருணத்திலே வாழ்த்துகிறேன் என்றார்.