நாட்டில் மீண்டும் இனங்களுக்கிடையில் முறுகல் நிலையினை தோற்றுவிக்கும் முயற்சியில் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர் கோத்தபாயவும் ஈடுபட்டுள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது உரையாற்றிய அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விடுதலைப் புலிகளின் கொள்கைகளை செயற்படுத்தியதாகவும், அந்த இயக்கம் இல்லாமல் செய்யப்பட்டதன் பின்னரும் கூட்டமைப்பினர் அவர்களது கொள்கைகளை செயற்படுத்தி வருவதாகவும் நாலக தேரர் தெரிவித்து வருகின்றார். இது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை தடுக்கும் நோக்கில் பரப்பப்படும் கருத்தாகும். கோட்டாபய மற்றும் மஹிந்த ஆகியோர் பிக்குகளை வைத்துக்கொண்டு இவ்வாறான தவறான கதைகளை பரப்பி வருகின்றனர். மேலும், ரக்பி வீரர் வசிம் தாஜுடீன் கொலை சம்பவம் தொடர்பில் பல்வேறு கருத்துகள் நிலவிவருகின்றது. எனினும் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும். மேலும் இந்த கொலை சம்பவத்தை மூடி மறைத்த பிரதி பொலிஸ் மாஅதிபர் அநுர சேனாநாயக்க உடனடியாக கைது செய்யப்பட வேண்டுமெனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.