நீதவான் இளஞ்செழியனின் தண்டனைகளால் யாழில் குற்றங்கள் குறைந்து செல்ல பொலிசாரின் அடாவடிகள் அதிகரிப்பு

நீதவான் இளஞ்செழியனின் தண்டனைகளால் யாழில் குற்றங்கள் குறைந்து செல்ல பொலிசாரின் அடாவடிகள் அதிகரிப்பு:

யாழில். அண்மைக்காலமாக பொலிசாரின் அடாவடித்தனங்கள் அதிரித்து செல்கின்றன. தற்போது நல்லாட்சி நடைபெறுவதாக கூறப்படும் வேளையில் பொலிசாரின் அடாவடித்தனங்களுக்கு நடவடிக்கை எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என பொது மக்கள் கவலை கொண்டுள்ளனர்.

யாழ்.மாவட்ட மேல் நீதிமன்ற நீதவானாக எம்.இளஞ்செழியன் நியமனம் பெற்றதை அடுத்து யாழில் அதிகரித்து காணப்பட்ட குற்ற செயல்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதனால் யாழில் குற்ற செயல்கள் வெகுவாக குறைந்துள்ளன.

யாழில் குற்ற செயல்கள் வெகுவாக குறைந்துள்ள நிலையில் பொலிசாரின் அடாவடித்தனங்கள் அதிகரித்து செல்கின்றமை பொதுமக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தி உள்ளது.

பருத்தித்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் யு.ஆ.ஜவுபர் மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைத்து பொது மக்கள்  ஜனாதிபதி மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு கடிதம் மூலம் முறைப்பாடு செய்துள்ளனர்.

வடமராட்சி பகுதிகளில் இடம்பெறும் சட்ட விரோத மண் அகழ்வு , கஞ்சா விற்பனை போன்றவருக்கு ஆதரவாக செயல்படுகின்றார் எனவும் , அண்மையில் வடமராட்சி மணற்காட்டு பிரதேசத்தில் விடுதலை புலிகளின் புதையல் உள்ளதாக கூறப்பட்ட பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டார் எனவும் அவர் மீது குற்ற சாட்டுக்கள் முன் வைக்கபட்டு பொது மக்களினால் கடிதம் மூலம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அதேவேளை சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகஸ்தர் ஜீவன் லால் என்பவர் சாவகச்சேரி பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு உடந்தையாக செயற்படுகின்றனர் என போது மக்களால் குற்றம் சாட்டபப்டுகின்றது.

சாவகச்சேரி கச்சாய் பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடும் கும்பல்கள் ஜீவன் லால் எனும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஊடாக சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு லஞ்ச பணம் கொடுத்தே  சட்டவிரோத மண் அகழ்வுகளில் ஈடுபடுகின்றனர்.

அதேபோன்று போக்குவரத்து சட்ட விதிமுறைகளை மீறுபவர்கள் குறித்த உத்தியோகஸ்தருக்கு லஞ்ச பணம் கொடுத்து சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து கொள்கின்றனர்.

தேசிய அரசியல் கட்சிகளுடன்  தொடர்பினை பேணி வரும் சாவகச்சேரி பகுதியினை சேர்ந்த நபர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகஸ்தர் ஆகியோருடன் மிக நெருங்கிய தொடர்பினை பேணி வருகின்றார் குறித்த நபரின் ஊடாக சட்டவிரோத செயற்பாடுகளை ஈடுபடுபவர்கள் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து கொள்கின்றனர். என தெரிவிக்கபப்டுகின்றது.

டச்சு வீதியில் உள்ள வீட்டிற்கு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த சிலர் சென்று செவ்வாய்க்கிழமை இரவு சாராயம் தருமாறு கோரிய போது வீட்டு உரிமையாளர் சாராயம் தர மறுத்தமைக்கு வீட்டின் கேட்டினை உடைத்து வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிளையும் கொள்ளை யடித்து சென்று இருந்தனர்.

சாராயம் கேட்டு அட்டகாசம் புரிந்த பொலிஸ் குழுவில் ஜீவன் லால் எனும் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகஸ்தரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொலிசாரின் அடாவடித்தனம் தொடர்பில் வீட்டு உரிமையாளரினால் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த மாதம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரு இளைஞர்கள் தாடி வளர்த்து இருந்தார்கள் என கூறி அவர்களை கைது செய்து அவர்கள் மீது கடுமையான தாக்குதலை பொலிசார் மேற்கொண்டு இருந்தார்கள்.

அதில் ஒரு இளைஞர் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர்கள் தாடி வளர்த்தமைக்காக பொலிசார் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்ப்பட்டு வருவதாகவும் அதற்கு தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்க உள்ளதாகவும் வடமாகாண எதிர்கட்சி தலைவர் தெரிவித்து இருந்தார்.

இவ்வாறாக அண்மைக் காலமாக அதிகரித்துள்ள பொலிசாரின் அடாவடித்தனங்கள் தொடர்பில் உரியவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila