நாளை மார்கழி மாதத்தின் பிறப்பு. மார்கழி மாதப் பிறப்போடு திருவெம்பாவையும் ஆரம்பமாகிறது.
கூத்தபிரானை வழிபாடாற்றுவதற்கு மார்கழித் திங்கள் உகந்த காலம் என்பது நம்முன்னோர்களின் முடிவு.
மணிவாசகப் பெருமான் தந்த திருவாசகம் மார்கழி மாதம் முழுமையிலும் பாடிப்போற்றப்படும். மார்கழி மாதம் பிறந்துவிட்டால் தேவாரத் திருமுறை பாடுவது நிறுத்தப்பட்டு திருவாசகமே முதற்பதிகமாகப் பாடப்படுவது சைவ சமயத்தில் பின்பற்றப்படும் நடைமுறை.
ஆக, மார்கழி மாதம் மதிசூடும் அண்ணலார் தமை வழிபாடு செய்வதற்கு உகந்தது என்று கூறிக் கொள்ளலாம்.
திருவாசம் தந்த மணிவாசகர் மார்கழி மாதத்தில் திருபள்ளிஎழுச்சி பாடி அடியவர்களை எழுப்புகின்றார்.
இன்னும் துயிலுதியோ வன்நெஞ்சப் பேதையர் போல்.. என்று வைகறைப் பொழுதில் பள்ளி எழுக என்று திருவெம்பாவை பாடுகின்ற பாங்கில்,
ஓ! மானிடமே இன்னும் நீ இருளாகிய உறக்கத்தில் இருப்பது முறையோ! வைகறைப் பொழுதில் நீ துயில் எழுந்து உன் தலைவனாகிய இறைவனை பணிக என்று அறிவுரை கூறுவதாக அந்தப் பதிகம் அமைகிறது.
இவ்வாறு விழிப்புணர்ச்சி செய்த மணிவாசகர் தன்னை நாயிற் கடைப்பட்டவன் என்று பல்வேறு இடங்களில் சுட்டிக் காட்டுகின்றார்.
இந்த உலகத்தில் இருக்கக்கூடிய அத்தனை பிறவிகளிலும் நாய்ப் பிறப்பை கடைப்பிறப்பு என்று பலரும் கருத்துரைக்கின்றனர். அவ்வாறு கருத்துரைப்பதற்கு காரணம் யாது?
நன்றி எனும் உயர்ந்த குணம் கொண்ட நாய்கள் தன் இனத்தோடு மட்டும் ஒற்றுமை கொள்வதில்லை. ஆக மற்றவர்களுக்கு வால் ஆட்டி, மற்ற வர்களைப் பாதுகாக்கின்ற -மற்றவர்களுக்கு உதவுகின்ற நாய் இனத்திற்கு தன் இனத்தோடு ஒற்றுமையாக வாழத்தெரியவில்லையே.
இத்தகைய பிறப்பால் என்ன பயன் உண்டு. மற்றவர்களுக்கு வால் ஆட்டிக் கொண்டு தன் இனத்தை கடித்துக் குதறி கூப்பாடு போட்டு வாழ்வதால் நாய் இனத்தின் நன்றி உணர்வும் பெறுமதி இழந்து போகின்றது.
இது மட்டுமல்ல, யாரோ ஒருவர் இடையிடையே எறியும் எலும்புத்துண்டுகளைத் தூக்கிக் கொண்டு ஓடுவதற்காக நாய்க் கூட்டம் சண்டையிட, எலும்புத் துண்டை வீசியவர் அந்த நாய்ச் சண்டைக்குள் தனது காரியத்தை முடித்து விடுவார்.
ஆக, எலும்புத் துண்டைப் போட்டது யார்? அதன் நோக்கம் என்ன? என்று அறியாவிட்டாலும் தன் இனத்தை எதிர்த்து, எலும்புத் துண்டுகளை வீசு கின்றவரைக் கண்டு வால் ஆட்டுவதை நன்றி என்று யார் சொன்னது.
நாய் வால் ஆட்டுவது நன்றி உணர்வோடு என்று யாரேனும் கருதினால் அது தவறு என்பது நம் சிற்றறிவின் முடிவு.
தலையால் குலை தரும் வாழை, தான் உண்ட நீரை சிரத்தால் தரும் தெங்கு, பாலைப் பொழிந்து தரும் பசு, முட்டை தரும் கோழி இவற்றோடு ஒப்பிடு கையில் வால் ஆட்டலை மட்டும் நன்றி என்று எப்படிக் கூறமுடியும்.
ஆகையால் நாயின் வால் ஆட்டல் நன்றி அல்ல. அது ஓர் அடிமைத்தனம் அல்லது விலை போதலின் அடையாளம் என்று கருதிய மணிவாசகர் நாய்ப்பிறப்பை கடைப் பிறப்பாகக் காட்டுகிறார்.
எனவே பற்றற்றவனாகிய பரம்பொருளை பற்றுதல் ஒன்றே பிறப்பறுக்கும் வழி என்று மணிவாசகர் கருதினார். அவரின் கருத்து உரிய உரிய இடங்களுக்கு உதாரணமாகக் கூடியது.