விசாரணைகளோ, விடுதலையோ இல்லாமல் “தமிழர்கள்” என்பதற்காக மட்டும் சிறை வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இதற்காக மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதும் உண்மைதான். அதற்காக செந்தூரன் தெரிவு செய்ததைப்போல ஒரு பாதையை இளம் தலைமுறையினர் தெரிவு செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இவ்வாறான இழப்புக்களைத் தாங்கிக்கொள்ளும் நிலையில் தமிழ்ச் சமூகம் இல்லை.
நீண்டகாலப் போரினால் தமிழர்கள் பெரும் உயிரிழப்புக்களைச் சந்தித்திருக்கின்றார்கள். குறிப்பாக இளைஞர்கள் பலர் உயிர்ப்பலியாகியிருக்கின்றார்கள். இந்த நிலையில் நாளைய தலைமுறையினரைப் பாதுகாக்க வேண்டியது அனைவரதும் பொறுப்பு. செந்தூரன் போன்ற சமூகப்பற்றும், அர்ப்பணிப்பும் மிக்க இளைஞர்கள்தான் தமிழ்ச் சமூகத்தின் சொத்துக்கள். அவர்கள் வாழவேண்டும். அவர்கள் உயிர்த்தியாகத்தின் மூலமாகச் சாதிப்பதைவிட, உயிர்வாழ்வதன் மூலமாகச் சாதிப்பதற்கு எத்தனையோ இருக்கின்றது. அதனைத்தான் தமிழ்ச் சமூகமும் இன்றைய காலகட்டத்தில் வேண்டிநிற்கின்றது.
அதேவேளையில், வடக்கு, கிழக்கு மக்கள் அரசாங்கத்தின் மீது எந்தளவுக்கு விரக்தியடைந்திருக்கின்றார்கள் என்பதை இந்தச் சம்பவம் தெளிவாகப் புலப்படுத்தியிருக்கின்றது. அரசாங்கத்துக்கும், தமிழர்களின் பிரதான கட்சியாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இதில் தெளிவான செய்திகள் உள்ளன. ஊடகத்துறையை தன்னுடைய விருப்புக்குரிய ஒரு பாடமாகப் பயிலும் செந்தூரன், தான் சார்ந்த சமூக, அரசியல் விடயங்களில் தீவிர அக்கறைகாட்டும் ஒரு மாணவன் என்பதை அறியமுடிகின்றது. அரசியல் கைதிகள் விவகாரத்தில் அரசாங்கம் நடந்துகொண்ட முறை, ஏனையய தமிழ் மக்களைப் போல செந்தூரனுக்கும் கடுமையான அதிருப்தியையும் விரக்தியையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
நீண்டகாலப் போரினாலும், அதன்பின்னர் பதவியிலிருந்த மகிந்த ராஜபக்ஷ ஆட்சியின் இனவாதச் செயற்பாடுகாளாலும், விரக்தியடைந்திருந்த தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் புதிய ஆட்சியில் அவர்கள் அதிக எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருந்தார்கள். நில ஆக்கிரமிப்பு, மீள்குடியேற்றம், இராணுவ மயமாக்கல், கைதிகளின் விடுதலை என தமது அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வை அவர்கள் விரைவாக எதிர்பார்த்தார்கள். அதில் கைதிகளின் விடுதலை குறித்த அரசாங்கத்தின் அணுகுமுறை என்ன என்பது கடந்த வாரங்களில் தெளிவாகவே தெரிந்தது. ஆயுதப் போராட்டத்தை நடத்திய ஜே.வி.பி.யினருக்கு ஒரு அளவுகோல், புலிகளுக்கு மற்றொரு அளவுகோல் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு தமிழர்களின் நம்பிக்கையை முற்றாகச் சிதறடித்துள்ளது.
கைதிகளின் விடுதலையைப் பொறுத்தவரையில் அரசாங்கம் முற்றிலும் இனவாத அடிப்படையில் செயற்படுகின்றது என்பது வெளிப்படை. இதனை ஒரு சட்டப்பிரச்சினையாகப் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தை இந்த நாட்டின் இனவாத அரசியல்தான் அரசுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. சரத் பொன்சேகா விவலகாரத்திலும், சிரானி பண்டாரநாயக்க விடயத்திலும் இல்லாத சட்டப்பிரச்சினையா இப்போது உருவாகியிருக்கின்றது? தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டியவர்கள் என்பதை அரச தரப்பினர் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால், நடைமுறையில் அதனைச் செய்வதற்கு அவர்களால் முடியவில்லை. அது ஏன்?
இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. சட்டமா அதிபர் திணைக்களம் இதற்கான செயற்பாடுகளை உரிய முறையில் செய்யவில்லை என்பது ஒன்று. மகிந்த ராஜபக்ஷ தரப்பினர் இதனை தங்களுடைய அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்வார்கள் என்பது இரண்டாது. இந்த இரண்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடியவையல்ல. நீதித் துறையின் சுயாதீனம் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்ற போதிலும், சட்டமா அதிபர் திணைக்களம் அரசாங்கத்தின் அரசியல் முடிவுகளுக்கு முரணாகச் செயற்படமுடியாது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் மீது பழியைப் போட்டுவிட்டு அரசாங்கம் தப்பித்துக்கொள்கின்றதா என்ற கேள்வி இங்கு எழுகின்றது. அதேபோலத்தான் மகிந்த ராஜபக்ஷ தரப்பினரின் விமர்சனங்களுக்கு அஞ்சிக்கொண்டு அரசாங்கம் செயற்படத் தொடங்கினால் இந்த நாட்டில் எதுவுமே நடைபெறப்போவதில்லை.
புதிய அரசாங்கத்தின் அணுகுமுறையில் தமிழ் மக்கள் கடுமையாக விரக்தியடைந்துள்ளார்கள் என்பதற்கான முதலாவது அறிகுறிதான் செந்தூரனின் தற்கொலை. கைதிகளின் விடுதலையைப் பொறுத்தவரையில் இனவாதத்துக்கு அப்பால் சென்று அரசாங்கம் அதனைக் கையாளவேண்டும். ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கூட இது குறித்த உறுதிமொழிகளை அரசாங்கம் வழங்கியிருந்தது. கைதிகள் விடயத்தில் இந்தளவுக்கு இறுக்கமான அணுகுமுறையைக் கைக்கொள்ளும் நிலையில், நல்லிணக்கம் எனக்கூறிக்கொள்வது வெறும் பேச்சளவில் மட்டுமே இருக்க முடியும் என்பதை வலியுறுத்திக் கூறவிரும்புகின்றோம். இதனைத்தான் செந்தூரனின் மரணமும் வெளிப்படுத்துகின்றது.