அரசியல் என்னை நுனிப்புல் மேயும் ஆடாக மாற்றி விட்டது! - முதலமைச்சர் ஆதங்கம்


அரசியல் என்னை நுனிப்புல் மேயும் ஆடாக மாற்றி விட்டது. எதையும் ஆரஅமரச் சிந்தித்து ஆராய்ந்து அறிவை மேம்படுத்தக் கூடிய ஒரு அவகாசத்தை என்னிடம் இருந்து பறித்தெடுத்து விட்டது என்று வடக்கு மாகாண முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அரசியல் என்னை நுனிப்புல் மேயும் ஆடாக மாற்றி விட்டது. எதையும் ஆரஅமரச் சிந்தித்து ஆராய்ந்து அறிவை மேம்படுத்தக் கூடிய ஒரு அவகாசத்தை என்னிடம் இருந்து பறித்தெடுத்து விட்டது என்று வடக்கு மாகாண முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
           
உலக மண் தினமான இன்று காலை 9.30 மணிக்கு யாழ். கிறீன் கிறாஸ் விடுதியில் ஆரம்பாமான “மண் – உயிர் வாழ்வதற்கான திடமான தளம்" கருத்தமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், மண்ணாட்சி என்பது நாடுகளாலும் அரசுகளாலும் பயன்படுத்தப்படும் கொள்கைகள், தந்திரோபாயங்கள், தீர்மானங்கள் எடுப்பதற்கான செயல்முறைகளே.சர்வதேச மண் தினமாகிய டிசெம்பர் 5ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 68ஆவது அமர்விலேயே 2013ஆம் ஆண்டு 20ந் திகதியன்று பிரகடனப்படுத்தப்பட்டது. 2015ம் ஆண்டு தொடக்கமே அது நடைமுறைக்கு வருகின்றது.
இவ்வாறு பிரகடனப்படுத்துவதற்கான காரணம் உணவுப் பாதுகாப்பு,விவசாயம், தட்ப வெட்ப நிலைமாற்றம், வறுமை ஒழித்தல், நிரந்தர அபிவிருத்தி ஆகியனவற்றுக்கு மண்ணானது எத்துனை அவசியம் என்ற கருத்தை உலகளாவிய ரீதியில் மக்களிடையே பரப்பவேயாகும். குறிப்பிட்ட தன்மையில் அமைந்த நிலப்பரப்பையே மண் என்கின்றோம். வண்டல் மண், கரிசல்மண், களிமண் என்று மண் பலவகைப்படும். மண் சம்பந்தமாக மண்ணாட்சி, மண்முகாமைத்துவம் என்ற இது பதங்கள் பாவிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கின்றேன்.
உலகளாவிய ரீதியில் இது விவசாயத் தொலைத் தோற்றத்தை மையமாக வைத்தே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. ஏனென்றால் உணவுப் பாதுகாப்பானது இன்று உலகளாவிய ரீதியில் மிக முக்கியமானதொரு விடயமாக மாறியிருப்பதே அதற்குக் காரணம். அதனால்த்தான் இவ்வாறு விவசாயத்துடன் இணைந்ததாக வரையறைப் படுத்தப்பட்டு வருகின்றது. மண்ணை ஆட்சி செய்வதனால் தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் அரசாங்கங்களுக்கிடையிலும் உள்ளூராட்சி அதிகார மையங்களிடையேயும் கைத்தொழில் உயர் மட்டத்திலும், குடிமக்கள் இடையேயும் ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் ஏற்பட வேண்டும்.
அப்பொழுதுதான் உரிய செயல்முறைகளையும், ஒழுங்குமுறைகளையும் நடைமுறைப்படுத்தும் விதத்தில் கொள்கைகளை உள்வாங்கி மண் பாவிப்பை உரிய முறையில் ஆற்றுப் படுத்தலாம். அவ்வாறு ஆற்றுப்படுத்தும் போது பாவனையாளர்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தாமல் நிலையான மண் முகாமைத்துவத்தை உறுதி செய்வது அவசியம். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் மண்ணாட்சி என்பது நிலையான விவசாயத்தை மேம்படுத்தி உணவுப் பாதுகாப்பை உறுதிப் படுத்தல்தான் அது என்று அர்த்தப்படுத்தப்பட்டு வருகின்றது.
மண் முகாமைத்துவம் என்பதை அடுத்து ஆராய்ந்து பார்ப்போம். மண்ணை வளப்படுத்த, மண்ணின் அமைப்பை உறுதிசெய்ய, உயிர்ப்பான மண்ணை மீட்டெடுக்க எவ்வாறான பழக்கவழக்கங்களில் ஈடுபட வேண்டும். மண்தான் உணவு உற்பத்திக்கு ஆதாரமாக இருந்து வருகின்றது. ஆதலால் உணவு சார்ந்து பார்க்கும் போது மண்ணின் தரக் குறைவு எப்பேர்ப்பட்ட தாக்கங்களை உற்பத்தியில் ஏற்படுத்துகின்றன என்ற கருத்தே மண்ணாட்சியில் முதன்மைத்துவம் பெற்றுள்ளது. அதேநேரம் தட்ப வெட்ப நிலை மாற்றமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதாவது கரிமமானது அளவுக்கதிகமாக வெளிப்படுத்தப்படும் போது உலகளாவிய தட்ப வெட்ப நிலையும் மாற்றமடைகின்றது.
மண்ணை ஆட்சி செய்து முகாமைத்துவஞ் செய்ய என்ன வழிமுறைகளைக் கடைப் பிடிக்க வேண்டும் போன்ற பல விடயங்களும் முக்கியமாக விவசாய மட்டத்தில் ஆர்வத்துடன் ஆராயப்பட்டு வரும் விடயங்களாக மாறியுள்ளன. எமது வடமாகாண சூழலுக்கு ஏற்ற விதத்தில் எவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்தி உயிர் வாழ்வதற்கு ஏற்ற திடமான தளமாக எமது மண்ணை மாற்றியமைக்கலாம் என்பதே இன்றைய கருத்தமர்வின் குறிக்கோளாகும். விவசாயத்தின் ஜீவ நாடியாக மண் அமைந்துள்ளது என்பது பற்றி மட்டுமல்லாது அம்மண் உயிர்ப்பான மண்ணாக அமைந்திருக்க வேண்டும் என்ற கருத்தை அவர் முன்வைக்கவுள்ளார் என்று நம்புகின்றேன்.
அடுத்து மண்ணை மீட்டெடுத்தால்த்தான் மண்ணின் உயிர்மையை நிலைபேறாக்கலாம் என்ற கருத்து உங்கள் முன் வைக்கப்பட இருக்கின்றது. உயிர் வாழ்வதற்கான திடமான தளமாக இலங்கையின் மண் அமைய வேண்டிய அவசியம் அடுத்து ஆராயப்படவிருக்கின்றது. மண்வளம் குன்றலும் நீரின் சீர்மை பாதிப்படைவதும் பாரிய ஒரு பிரச்சனையாக மாறியிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. ஆகவே விவசாய நடவடிக்கைகளால் மண்வளம் குன்றலைக் குறைப்பதற்கான அணுகு முறைகளை ஆராய்வது மிக முக்கியமானதொரு பயிற்சியாக அமைகின்றது. உங்களுடன் கருத்தமர்வில் கலந்து கொள்ள ஆர்வம் இருந்தாலும் நேர காலத்தையும் பொறுப்புக்களையும் முகாமைத்துவப்படுத்த வேண்டிய கடப்பாடு உடையவனாக நான் உள்ளேன் என்றார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila