போராளிகளின் மனது மென்மையானது. தன்னுடைய இனத்துக்கு எதிராக நடைபெறும் ஒடுக்குமுறைகளைச் சகிக்க முடியாதவர்களே போராளிகளாகின்றனர். அதையெல்லாம் சகித்துக் கொண்டு வாழும் தன்மையுடையவர்களே வெளியில் வாழ்கிறார்கள்” விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான லெப்.சீலன் ( லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி ) அடிக்கடி கூறும் விடயம் இது. 1983 இல் தான் தமிழ் இளைஞர்கள் பெருமெடுப்பில் பல்வேறு இயக்கங்களில் இணைந்து கொண்டனர். இவர்களில் 65 சத வீதத்துக்கு மேலானோர் இதுவரை காலமும் எவர் மீதும் வன்முறையைப் பிரயோகிக்காதவர்கள். இவனும் இயக்கத்துக்குப் போனானா ? என மற்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் வாழ்ந்தவர்கள். எனவே ஒருவனின் கடந்த கால வாழ்வை வைத்து அவனது முடிவுகள் குறித்து அனுமானிக்க முடியாது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நடைபெறும் விடயங்கள் தொடர்பாக வெளிவரும் கருத்துகள் பெரும்பாலும் யானை பார்த்த குருடர்கள் நிலையிலானவை. தங்களது ஆய்வின் வித்துவத் தன்மையைப் பறைசாற்றும் நோக்கிலானவை. பெரும்பாலும் பொது வாழ்வுக்கு தமது உயிரையோ உதிரத்தையோ உழைப்பையோ கொடுக்கத் தயாரில்லாதவர்களே. அந்த உணர்வுகளை எந்தக் காலத்திலும் புரிந்து கொள்ள முடியாதவர்களே பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஒரு வித்துவான் எழுதுகிறார். “பாடசாலையில் எவருடனும் சேர்ந்து திரிவதில்லை. அமைதியையே விரும்புவான். உயர்தரத்தில் கலைப் பிரிவில் கல்வி கற்கின்றான் போன்ற பதில்களே கிடைத்தன. இதை வைத்துப் பார்க்கும் போது அந்தக் கடிதத்துக்கும் மாணவனுடைய சாவுக்கும் உள்ள தொடர்பைப் புரிவது கடினமாகவே உள்ளன. பாடசாலை நண்பர்கள் வெளிநண்பர்களிடத்திலும் மாணவன் தொடர்பான அரசியல் சார்ந்த விபரங்கள் எதுவும் வெளிப்படவில்லை இவ்வாறு இருக்கும் போது மாணவன் எப்படி அவ்வாறான ஒரு கடிதத்தை எழுதினான்”இவ்வாறாக வினாக்களை அடுக்கி வைத்தார் அந்த வித்துவான்.
அரசியல் கைதிகளின் விடுதலையை வற்புறுத்தும் முகமாக தனது உயிரை ஈகம் செய்த 18 வயது நிரம்பிய இராஜேஸ்வரன் செந்தூரன் என்பவர் தொடர்பாகவே அவர் இவ்வாறு எழுதுகிறார். புல வித்துவான்கள் மாணவன் சாவு தொடர்பாக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இவ்வளவு புலனாய்வு செய்பவர்களை முன்னரே தெரிந்திருந்தால் பொட்டம்மான் தன்னுடன் இணைத்திருப்பார்.
யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஆங்கிலேயப் பிரதிநிதி ஒருவர் தனது குறிப்பில் “சட்டத்துக்கு கீழ்ப்படியும் அமைதியான ஒழுக்கமான மக்கள்” என்றே யாழ்ப்பாணத்தவர் பற்றி எழுதியுள்ளார். 1977 இற்கு முன்னதாக இலங்கைப் புகையிரத சேவைக்கு அதிக வருமானத்தைக் கொடுக்கும் சேவையாக வடபகுதி சேவையே விளங்கியது. இவர்கள் தான் தவறாமல் புகையிரதச் சீட்டு வாங்கிப் பயணிப்பவர்கள். அக் காலகட்டத்தில் கரையோர சேவையைப் பொறுத்த வரை 50 வீதமானோர் சீட்டின்றிப் பயணிப்பவர்களே. வானொலிப் பெட்டிக்கான உரிமம் துவிச்சக்கர வண்டிக்கான உள்ளுராட்சி மன்றங்களில் இருந்து அனுமதி பெறுதல் போன்றவை மட்டுமல்ல வங்கிக் கடன்களை முழுமையாகச் செலுத்துவதிலும் யாழ்ப்பாணத்தவர் முன்னிலை வகித்தவர்.
அப்படியாக சட்டத்துக்கும் கட்டுப்பட்ட குடும்பங்களில் இருந்து வந்தோர் தான் ஆயுதப் போராட்டத்துக்குள் அடியெடுத்து வைத்தனர். ஏன் ஒரு சனசமூக நிலையத்தின் தலைவராக இருந்த சண்முகநாதன் சிவசங்கர் என்பவரை பொட்டம்மான் என்று உருவாக்கியதே யாழ்ப்பாண நூலக எரிப்புத் தான். அதுவரை அவர் எந்த அரசியல் சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்கவில்லை.
“அரசியல் கைதிகள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் உணவுத் தவிர்ப்பை தற்காலிகமாக நிறுத்தி ஒரு முடிவுக்கு கொண்டு வந்துள்ள இந்தச் சூழ்நிலையில் அரசியல் கைதிகள் தொடர்பில் உயிரையே விடுமளவுக்கு உணர்வு பீறிட்ட காரணத்தின் தாற்பரியம் தான் என்ன என்பன போன்ற விடயங்கள் இங்கே மீண்டும் கேள்விகளாக்கப்படுகின்றன” என்ற குறிப்பின் மூலம் இந்த விடயத்தை இந்த வித்துவான்கள் எவ்வளவு தூரம் விளங்கிக் கொண்டுள்ளனர் என்பது புரிகிறது
‘அரசாங்கத்தின் நம்பிக்கையீனப் போக்குகளின் மீதான வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வெறுப்புத் தன்மையையும் அவர்களது மனதளவிலான உச்சங்களையும் பிரதிபலித்து நிற்பதாகவே யாழ் மாணவன் செந்தூரனின் முடிவு அமைந்துள்ளது. இந்தச் செயற்பாட்டின் பின்புலங்களை விளங்கிக் கொள்ள வேண்டும்” என இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மாவீரர் தினத்தன்று நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார். “மைத்திரி கடவுளை நம்புகிறார். நான் மைத்திரியை நம்புகிறேன்’ என அரசியல் கைதிகளிடம் கூறியே அவர் உண்ணா விரதத்தை முடித்து வைத்தார்.
“கடந்த காலம் பற்றி யாருமே சரியான தகவல் பெற்றிருக்கவில்லை. அதனால் தான் நிகழ்காலத்தைப் பற்றி சோகமான ஏக்கமான முடிவினை எடுக்கிறார்கள்” என தாமஸ் மெக்காலே என்ற அறிஞர் கூறியுள்ளார். ( விளக்குகள் தந்த ஒளி ). டி.எஸ்–பண்டா—டட்லி—ஜே.ஆர் என தொடர்ச்சியாக ஏமாந்த அனுபவம் தமிழ்த் தலைமைகளிடம் இருந்தும் மைத்திரி தொடர்பாக இவ்வாறு உறுதியளித்தார் சம்பந்தன்.
மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கிய நிலையில் மருத்துவ காரணங்களுக்காக அவர் இந்தியா சென்று விட்டார். மைத்திரி கடவுளை நம்பலாம் சம்பந்தன் அவரை நம்பலாம் ஆனால் அரசியல் கைதிகள் விடயத்தில் எவரையும் நான் நம்பவில்லை என்பதே தமிழ் மக்களுக்கு மாணவன் செந்தூரன் விடுத்துள்ள அழுத்தமான செய்தி. எனவே 10 பிள்ளை பெற்றவளுக்கு மலடி முக்கிக் காட்டியது போல் யாழ்ப்பாணத்தவர்களுக்கு கதை சொல்ல வேண்டாம் என்பதே இந்த ஆய்வாளர்களிடம் நாம் விடுக்கும் வேண்டுகோள். விளங்காவிட்டால் அதை ஆராய முற்பட வேண்டுமே தவிர அறிவுரை வழங்கக் கூடாது.
இந்த அரசியல் கைதிகள் யார் ? பொது வாழ்வில் ஈடுபட்டவர்கள் அரசியல் கைதிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தவர்கள். என்றும் சிலருக்கு ஏதோ ஒரு வகையில் சிறையில் இருந்து வெளியே செல்ல சந்தர்ப்பம் கிட்டுமாயின் அதற்கு ஏனையோர் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது என எண்ணுபவர்கள். ஏனெனில் அவர்களது கடந்த கால வாழ்க்கை மற்றவர்களுக்காகவே அமைந்தது. துரதிஷ்டவசமாக சிறையில் இருக்கிறார்கள். 1991 இல் இருந்து விஜி ( செல்லப்பிள்ளை மகேந்திரன் முறக்கொட்டாஞ்சேனை ) நீண்ட காலமாக சிறையில் இருக்கிறார். 17 வயதில் சிறைப்பட்டவர் இவர். இவர் வெளியுலகத்தில் வாழ்ந்த காலத்தை விட சிறைக்குள் வாழ்ந்த காலம் தான் அதிகமாகிறது.
இன்று கைதிகளைத் தரம் பிரிக்க கூட்டமைப்புத் தலைமை அரசுடன் உடன்பாடு கண்டுள்ளது. “தகுதியானோருக்கு வாக்களியுங்கள்”. என்று கடந்த பொதுத் தேர்தலின் போது வடக்கு முதல்வர் கூறினார். அப்படித் தரம் பிரிக்கக் கூடாது ஜனா–,இரா.துரைரத்தினம் போன்ற படுகொலையாளர்கள் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் கூறியிருக்க வேண்டும். எனவே அவரைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று வாதாடும் பி.எம்.டபிள்யூ காரர்கள் தான் கைதிகளைத் தரம் பிரிக்க ஒத்துக் கொண்டனர்.
ஜே.வி.பி யினரை எந்தக் கேள்வியும் கேட்காமல் தரம் பிரிக்காமல் ஒட்டுமொத்தமாக விடுதலை செய்ய என்ன சூத்திரம் மந்திரம் வைத்திருந்தீர்களோ அதையே பயன்படுத்துங்;கள் என்று மைத்திரியிடம் சொல்ல இந்த சட்டத்தரணித் தலைமைகளால் முடியவில்லை. “எங்கள் குடும்பங்கள் கஷ்டப்படுகின்றன புலம்பெயர்ந்த தேசத்தவர்களிடம் நிதியுதவி கோரி எங்கள் குடும்பங்களுக்கு உதவலாமே” எனக் கேட்டனர் அரசியல் கைதிகள்.. அதற்கு “முன்னர் புலிகள் இருந்தனர் கேட்டவுடன் காசு கிடைத்தது இப்போது நிலைமை அப்படியல்ல. எங்கள் கட்சியிடமும் நிதியில்லை கடந்த தேர்தலுக்கு செலவு செய்யக் காசில்லாமல் கஷ்டப்பட்டோம்.” என்று கூறுபவரிடம் தான் சம்பந்தன் ஜயா அரசியல் கைதிகளின் விவகாரத்தை ஒப்படைத்துள்ளார். கைதிகளின் குடும்பம் வறுமையில் வாடுவதையும் கட்சி தேர்தலுக்கு செலவழிக்க நிதியில்லாமல் இருப்பதையும் ஒன்றாகப் பார்ப்பவருக்குத்தான் யாழ் மக்கள் இப்போது 58 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர். இவர்களுக்கு எப்போதும் நீதியின் மீது கவனம் இல்லை. நிதியின் மீது தான் உள்ளது. அதனால் தான் வடக்கு முதல்வர் நிதிகேட்டு கனடா போக மறுத்தார் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு வழக்கில் கிடைக்கும் காசுக்காக புலிகளைப் பயங்கரவாதிகள் என கிளிநொச்சி நீதிமன்றில் கூறியவரே கைதிகள் விடயத்தில் கையாளுகின்றார்.
சம்பந்தன் ஜயாவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி செல்வம் அடைக்கலநாதனின் குழுக்களின் பிரதித் தலைவர் பதவி இரண்டையும் அடைவு வைத்தேனும் எமக்கு விடுதலை பெற்றுத் தாருங்கள் என்று அரசியல் கைதிகள் விடுத்த வேண்டுகோளின் தாற்பரியம் செந்தூரனுக்குப் புரிந்துள்ளது. மைத்திரி கட்சி தொடர நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் சர்வதேச விசாரணை தேவையில்லை உள்ளக விசாரணையே போதும் மைத்திரியைக் காப்பாற்ற துணிந்த கூட்டமைப்பினருக்குப் புரியவில்லை. செந்தூரனின் பெற்றோரின் புத்திரயோகமும் புரியப்போவதில்லை. இவர்களுக்கு ஏன் வாக்களித்த எமது மக்களுக்குப் புரியவில்லை. புரியாத புதிராகவே தமிழரின் வாழ்வும் அவலமும் தொடர்கிறது.
இவர்கள் மீண்டும் அரசியல் புரிய மக்களி;டம் வருவார்கள். கூடவே அரசியல் கைதிகள் தொடர்பாக ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதிகளின் நிழல்பிரதியும் கொண்டு வருவார்கள். தமிழ் மக்களின் மறதி மீது அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. “ அரசியல் கைதிகளின் இதயம் அநேகமாகக் கல்லால் ஆனது. தேற்றப்படவியலாத் தாய்மாரின் துக்கம் அதைக் கரைப்பதில்லை. ஆனால் அன்னையரின் கண்ணீரை வாக்குகளாக மாற்றும் ரசவாதம் அவர்களுக்குத் தெரியும். என்ற ஒரு ஆய்வாளரின் கூற்றுத் தான் நினைவுக்கு வருகிறது.