இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தில் தமிழ்த் தரப்புகளிடம் உறுதியான-தெளிவான வரைபு இருக்க வேண்டும் என்ற கருத்து இப்போது அனைவராலும் உணரப்படுகிறது.
2016ஆம் ஆண்டில் அரசியல் அமைப்பில் சீராக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் அரச மட்டத்தில் நடந்து கொண்டிருக்கின்ற இவ்வேளையில், தமிழ்த் தரப்புகள் தம்மிடையே ஒன்றிணைந்து ஒரு பொதுவான தீர்வுத்திட்டத்தை முன்மொழிவது காலத்தின் அவசிய தேவையாகியுள்ளது.
கடந்த காலங்களில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன வாயினும் தமிழர்கள் எதிர்பார்க்கின்ற தீர்வு; இலங்கை அரசு வழங்கத் தயாராகவுள்ள தீர்வு என்பவற்றில் ஓர் உறுதியான-எழுத்துமூலமான ஆவணப்படுத்தல்கள் இருக்கவில்லை.
இதன் காரணமாக அவ்வப்போது வெளிநாட்டுத் தூதுவர்கள் இலங்கைக்கு வருகை தந்து அரசுடனோ அல்லது தமிழ்த் தரப்புக்களுடனோ சந்திப்புக்களை மேற்கொள்ளும் போது,
இதுதான் இனப்பிரச்சினைக்கான எங்களின் தீர்வு என்றோ அல்லது நாங்கள் எதிர்பார்க்கின்ற தீர்வு இதுதான் என்றோ முன்வைக்கக்கூடிய எழுத்து மூலமான தீர்வுத்திட்டங்கள் இருதரப்பிடமும் இருக்கவில்லை.
இதனால் காலத்துக்குக் காலம் இனப்பிரச்சி னைக்கான தீர்வு என்பது இரு தரப்பிலும் நகர்வுத் தன்மை கொண்டதாக இருப்பதைக் காணமுடியும்.
இத்தகையதோர் நிலைமை வெளிநாட்டுப் பிரதிநிதிகளையும் மக்களையும் குழப்பத்துக்கு உட்படுத்தும் என்பது தவிர்க்கமுடியாத யதார்த்தம்.
ஆக, போர்க்குற்றம் தொடர்பான விசாரணை என்பதன் ஓர் அங்கமாக அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை முன்வைக்கும் ஏற்பாடுகள் முனைப்பெடுத்துள்ளன.
இத்தகையதோர் நிலைமையில்; தமிழ்த் தரப்புகள் கட்சியால், கொள்கையால் பேதம் கண்டிருந் தாலும் அரசியல் தீர்வு என்ற விடயத்தில் ஒன்று சேர்ந்து ஏற்புடையதான- ஒரு முகமான தீர்வுத் திட்ட வரைபை தயார்ப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.
இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் என்ற விட யத்தில் எங்களிடம் ஓர் இணக்கப்பாடு ஏற்படத் தவறும் பட்சத்தில் தமிழ்த் தரப்புகள் தத்தம் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் ஏற்றவாறான தீர்வுத் திட்டங்களை முன்வைக்கத் தலைப்படுவர் அல்லது ஒரு சிலரால் தயாரிக்கப்படும் வரைபே தீர்வுத் திட்டமாக முன்மொழியப்படும்.
இஃது எங்களுக்கான உரிமை விடயத்தில் மிகப் பெரும் பலவீனமாக அமைந்து விடும். ஆகையால் தமிழ் அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய தான குழுமம், தமிழ் மக்களின் தீர்வுத் திட்டம் குறித்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவது ஆக்க பூர்வமான செயற்பாடாக இருக்கும்.
பொதுவில் தமிழ் மக்கள் காலத்தை தக்கமுறை யில் பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் பரவலாக உள்ள நிலையில், எதிர்காலத்திலும் அத்தகையதோர் துர்ப்பாக்கிய நிலைமை ஏற்படாமல் இருக்க, அரசியல் கட்சித் தலைவர்கள், புத்திஜீவிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடி ஆராய்வது காலத்தின் உடனடித் தேவையாகும்.