மாவட்ட அபிவிருத்திக்குழுக்களின் தலைவர்கள் நியமனத்தில் அரசாங்கத்தின் செயற்பாடு கூட்டமைப்புக்கு முகத்திலறைந்தது போலாகிவிட்டது. வழமைபோல இந்த முறையும் கூட்டமைப்பு தனது முகத்தை மறைத்துக்கொண்டுவிட்டது.
இறுதியாக நடைபெற்ற கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைமைப் பதவி குறித்துத்தான் முக்கியமாக ஆராயப்பட்டதாம். வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களின் குழுத் தலைமைப் பதவிகள் தமக்குத்தான் கிடைக்கும் என்பதுபோல இங்கு தெரிவுகள் இடம்பெற்றன.
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி ஒன்றின் தலைவராகவுள்ள புத்தரின் இளைமைக்காலப் பெயரைக் கொண்டுள்ளவர் தனக்கு பதவி எதுவும் வேண்டாம் என்று சொன்னதையடுத்து மற்றவர்களுடைய பெயர்கள் பிரஸ்தாபிக்கப்பட்டனவாம்.
யாழுக்கு மாவை, கிளிநொச்சிக்கு சிறி என பட்டியல் ஒன்று இந்தக் கூட்டத்தில் வைத்தே தயாரிக்கப்பட்டு, பின்னர் அரசாங்கத்திடமும் கையளிக்கப்பட்டதாம். சிறியின் பெயர் போடுவதை சரா விரும்பவில்லை எனவும் தகவல்.
அரசாங்கத் தரப்பு பட்டியலை கவனமாக வாங்கிப் படித்துவிட்டு, தன்னுடைய இஸ்டத்துக்கு கலாவையும், அங்கஜனையும் குழுவின் இணைத் தலைவர்களாக நியமித்துவிட்டது.
இறுதிக்கட்டம் வரையில் போராடிய கூட்டமைப்புக்கு இங்கும் "வழமைபோல" தோல்விதான். அரசுக்குக் கூட்டமைப்பு கொடுக்கும் நல்லிணக்க அடிப்படையிலான ஆதரவு ஒரு வழிப்பாதையாக மட்டும்தான் உள்ளது என்பதை உறுதிப்படுத்திய மற்றொரு சம்பவம் இது.
நல்லிணக்கத்தை வெளிப்படுத்துகின்றோம் என பட்ஜெட் உட்பட எல்லாவற்றையும் கூட்டமைப்பு ஆதரிக்கின்றது. பதிலுக்கு அரச தரப்பிலிருந்து நல்லெண்ண சமிஞை ஒன்றையும் காணவில்லை.
பலத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் பலவீனத்தையே கூட்டமைப்பு வெளிப்படுத்திக்கொண்டு நிற்கின்றது என்ற கருத்து இதன்மூலம் உருவாகின்றது.
இது என்ன ஒரு தலைக்காதலா?
நன்றி: தினக்குரல்
ததேகூட்டமைப்புக்கு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவி இல்லை-
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாவட்ட அபிவிருத்தி குழுக்களுக்கான தலைவர் பதவிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படவில்லை.
நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சியாக விளங்கினாலும் அரசாங்கத்துடனும் ஜனாதிபதியுடனும் நல்லிணக்கத்துடனேயே அது செயற்பட்டு வருவதாக பார்க்கப்படுகின்றது.
அதன் அடிப்படையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றக் குழுக்களின் துணைத் தலைவராக செயற்படுவதுடன், இந்த முறை வரவு செலவுத் திட்டத்துக்கும் அந்தக் கட்சி தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே த. தே. கூட்டமைப்பு கூடுதல் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள மட்டக்களப்பு , யாழ்ப்பாணம் மற்றும் வன்னி ஆகிய மாவட்டங்களில் இந்த பதவியை தங்களுக்கு வழங்க ஜனாதிபதியும் பிரதமரும் இணக்கம் தெரிவித்திருந்தாக த.தே. கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த மாவட்டங்களை சேர்ந்த த. தே. கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் அந்த பதவி தொடர்பான எதிர்பார்ப்பு காணப்பட்டது.
தற்போது வடக்கில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த துணை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ் மாவட்டத்திற்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் வன்னி மாவட்டத்திற்கும் ஜனாதிபதியினால் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
கிழக்கில் அ. இ. ம காங்கிரஸின் துணைத் தலைவரும் துணை அமைச்சருமான எஸ். எச். அமீர் அலி மட்டக்கப்பு மாவட்டதிற்கான அபிவிருத்திக் குழு தலைவராக நியமனம் பெற்றிருக்கின்றார்.
ஐ. தே. க கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. எம். மஹ்றூப் திருகோணமலை மாவட்டத்திற்கும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மொகமட் மன்சூர் அம்பாறை மாவட்டத்திற்கும் நியமனம் பெற்றுள்ளனர்.
இருந்தபோதிலும், "இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்ற இலக்கை கொண்டுள்ள தமது பயணத்தில் இதனை ஒரு முக்கிய விடயமாக தாங்கள் கருதவில்லை" என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் கூறுகிறார்.
அரசிடமிருந்து இதுபோன்ற சலுகைகளைப் பெறுவது தமது அரசியல் தீர்வு என்ற இலக்கை பலவீனப்படுத்துவதாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்
இந்த நியமனத்தில் அரசாங்கம் நியாயமாக நடந்து கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு தங்களிடம் இருந்ததாக தெரிவித்துள்ள அவர், தேவை ஏற்படும் பட்சத்தில் இது தொடர்பில் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் பேசப்படும் என்றும் கூறுகின்றார்.
நன்றி - BBC