அள்ளி வழங்கும் நீலக் கடலையும் பொன் கொழிக்கும் சிவப்பு மண் விவசாயப் பூமியையும் விமான நிலைய அபிவிருத்திக்காக நாம் தாரை வார்க்க முடியாது என வலி. வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவரும் மயிலிட்டி மீள்குடியேற்றக் குழுவின் தலைவருமான அ.குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தியா? மீள்குடியேற்றமா? என்பதை மயிலிட்டி மக்களே முடிவு செய்ய வேண்டும் என்றும் அதற்கு மயிலிட்டி மக்களின் கருத்தறியும் கூட்டத்தை நடத்துமாறு பிரதமர் தெரிவித்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குணபாலசிங்கம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவரது அறிக்கையில்;
அள்ளி வழங்கும் நீலக் கடலையும் மீன்பிடித் துறைமுகத்தையும், பொன் கொழிக்கும் சிவப்பு மண் விவசாய நிலத்தையும் நாம் விமான நிலையத்துக்காக இழக்கத் தயார் இல்லை. காங்கேசன்துறை வர்த்தக துறைமுகத்துக்கும் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்துக்கும் இடைத்தூரம் 5 கிலோ மீற்றர்தான்.
1983 ஆம் ஆண்டு போர்க்காலத்தில் கடல் பிரதேசம் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டு மீன்பிடி நிறுத்தப்பட்டது. இதனால் இன்றுவரை மயிலிட்டி மீன்பிடியாளர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். ஆழ்கடல் மீன்பிடி இவர்களின் தொழில்.
மயிலிட்டி பலாலிதையிட்டி பிரதேசங்கள் சிவப்பு மண் பூமி. இந்தப் பூமி விவசாயிகளுக்கு பொன்னாக உழைத்துக் கொடுத்தது. அந்தப் பிரதேசமும் 26 வருடங்களுக்கு மேலாக பாதுகாப்பு வலயத்துக்குள் சிக்கி மக்களை சாகடித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் அந்த மண்ணில் வீடுகளையும் தொழிற்சாலைகளையும் ஆலயங்களையும் இடித்தழித்து இராணுவத்தினர் முழுச் சொத்திலும் விவசாயத்தை மேற்கொண்டனர்.
யாழ். மாவட்டத்தில் உள்ள இராணுவத்தினருக்கு உணவுத் தேவையைப் பூர்த்தி செய் து வெளியிலும் மிகுதி விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் இராணுவ உணவுச் செலவு மீதமாக்கப்படுகின்றது.
நிலச் சொந்தக்காரன் பசி பட்டினியோடு பிச்சையெடுக்கிறான். அந்நியன் அந்த நிலத்தில் பசியாறுகிறான். ஆடு,மாடு வளர்த்து பால் தேவையை, இறைச்சித் தேவையைப் பூர்த்தியாக்கி இராணுவம் வளமுடன் எமது நிலத்தில் வாழ்கின்றது. எமக்கு சொந்தமான துறைமுகமும் 12 கிலோ மீற்றர் நீளக்கடற்கரையும் எமது சிவந்த விவசாய மண்ணும் எமக்கு வேண்டும்.
பறக்கும் விமான நிலையம் எமக்கு வேண்டாம். விமான நிலையத்துக்கு வடக்கு மேற்குப் பக்கமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படும். இப்படியான பாதிப்பை ஏற்படுத்தும் அந்த விமான நிலையம் தேவையா? பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் தான் முக்கியம்.
மீனைக் கடலிலிருந்து வெளியே எடுத்துப் போட்டால் எப்படி துடிதுடித்துச் சாகுமோ அதுபோலவே எமது வாழ்வில் மயிலிட்டியை விட்டால் தான் முகாம்களை மூடமுடியும்.
மயிலிட்டியை விடாமல் முகாம்களை மூட முடியாது. விமான நிலையம் தேவையானால் யாழ்நகருக்கு அண்மையாகவுள்ள தீவகத்தில் சிங்கப்பூர் விமான நிலையம் மாதிரி அமைத்துக் கொள்ளலாமென்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்நகரை அண்டிய தீவுப் பகுதியில் விமான நிலையத்தை அமையுங்கள்; மயிலிட்டியை விட்டு விடுங்கள்பிரதேச மக்கள்
Related Post:
Add Comments