கடல் அன்னையே! நீ தந்த துயரம் இன்னும் ஆறவில்லையே!


2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி சுனாமி தந்த பேரிழப்புகளின் துயரம் இன்னமும் ஆறாமல் எங்கள் இதயங்களை அமுக்கிக் கொள் கிறது. 
காலைப் பொழுதில் கடல் அன்னை கொண்ட கோபம் அப்பாவி மக்களின் உயிர்களைக் காவு கொண்டதால் அந்த நாள் எங்கும் அழுகுரலும் அவலமுமாக இருந்து போனது. 

என்ன நடந்தது என்று தெரியாமலேயே நடந்து முடிந்த அந்த இழப்புகளின் துயரத்தை மனித மொழிகளால் கூறிவிட முடியாது. வாழும் உயிர்களின் இதயத்தை வறுத்தெடுத்த அந்த சம்பவத்தின் நினைவுகள் இனம், மதம், மொழி, நிறம் என்ற எல்லைகளைக் கடந்து துயரத்தை விதைத்தது. 

கடற் கரை ஒன்றில் எட்டு வயதுச் சிறுவன் ஒருவன் ஓடி விளையாடுகிறான். கடல் அன்னையின் சீற்றத்தை அறியாத அந்தச் சின்னப்பிள்ளை, எழு ந்த பேரொலியால் திகைத்து கடலைப் பார்க்கின்றான். பயம் அவனைப் பற்றிப் பிடிக்கிறது. சின்னக் காலால் ஓடுகிறான். அந்தோ! பாய்ந்து வந்த கடல் அலை அந்தச் சிறுவனை இழுத்து விழுங்கிக் கொண்டது. உலகத் தொலைக்காட்சிகள் முழுவதிலும் அந்தக் காட்சி பதிவாகியிருந்தது. என்னே கொடுமை. 

அந்தோ! இதயத்தை வேகவைத்த சுனாமிப் பேரழிவின் பதினொரு ஆண்டு நிறைவு இன்று. சுனாமியின் கோரத் தாண்டவத்தால் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக நாம் அனைவரும் பிரார்த்திப்போம். 

உறவுகளின் இழப்புகளால் துயரத்துடன் வாழும் குடும்பங்களின் எதிர்கால நல்வாழ்வுக்காக இறைவனைத் தியானிப்போம். அதேவேளை இயற்கை அழிவுகளில் இருந்து மக்கள் சமூகத்தைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை முன்கூட் டியே செய்தாக வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை செய்வ தும் கட்டாயமானதாகும். 

ஒரு காலத்தில் மக்கள் சமூகம் இயற்கையையே இறைவனாக வணங்கிக் கொண்டது. பஞ்ச பூதங்களை தெய்வங்களாக வழிபட்ட போது இயற்கையை பாதுகாக்கின்ற பழக்கம் நிறையவே இருந்துள்ளது. மலை, மண், மரம், சூரியன், சந்திரன் என்ற இயற்கையின் கொடைகளை தெய்வமாக வணங்கித் துதித்த காலம் போய், இன்று ஆழ்கடல் அடியில் அணுவாயுதப் பரிசோதனை நடத்தும் காலமாயிற்று.  

கூடவே காடழிப்பு, மண் அகழ்வு, தண்ணீர் விரையம், வான் தரை நீர் என்பவற்றை மாசுபடுத்தும் செயல் என்பன உயிரினங்கள் வாழ்வதற்காக இயற்கை உவந்தளித்த பரிசை பாழாக்கிக் கொள் கிறது. 

இவற்றுக்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைத்து இயற்கை என்பது நாம் வாழ்வதற்காக இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை எனவே அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைந்து அதற்கேற் றால் போல் செயற்படும் வண்ணம் இயற்கையைப் பாதுகாக்கும் எண்ணக் கருவை எங்கள் ஒவ்வொருவரிடமும் ஏற்படுத்தி விடுவது கட்டாயமான தாகும்.

இந்த வகையில் ஆழிப்பேரலை தந்த இழப்பின் பதினொராவது ஆண்டின் முடிவில் இயற்கையைப் பாதுகாத்து மனித வாழ்வை துன்பமற்றதாக்கிக் கொள்ள உறுதி பூணுவோம். 
ஆழிப் பேரலைக்கு ஆகுதியாகிப் போன அனைத்து மனித உறவுகளையும் நினைந்துருகி அவர்களின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போமாக.              
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila